ED Case: விஜயபாஸ்கருக்கு கிடுக்கிப்பிடி? 9 மணி நேரம் துருவிய அமலாக்கத் துறை ! என்னென்ன கேள்விகள்?
சென்னை: வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக தொடரப்பட்ட வழக்கில் அதிமுக முன்னாள் அமைச்சரும், தவெக நிர்வாகியுமான சி.விஜயபாஸ்கர் நேற்று அமலாக்கத் துறை அலுவலகத்தில் ஆஜரானார். அவரிடம் 9 மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டது. அப்போது வருமானத்திற்கான ஆதாரங்கள் உள்ளிட்ட பல்வேறு கேள்விகள் அவரிடம் எழுப்பப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கடந்த 2016 ஆம் ஆண்டு முதல் 2021 ஆம் ஆண்டு வரையிலான அதிமுக ஆட்சிக் காலத்தில் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சராக இருந்தவர் சி.விஜயபாஸ்கர். இவர் அந்தக் காலகட்டத்தில் தனது வருமானத்திற்கு அதிகமாக சொத்துகளை சேர்த்ததாக அவர் மீது குற்றச்சாட்டு எழுந்தது.

இது குறித்து தமிழக லஞ்ச ஒழிப்புத் துறை கடந்த 2021 ஆம் ஆண்டு வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தியது. இந்த வழக்கில் விஜயபாஸ்கர் வருமானத்திற்கு அதிகமாக ரூ 35 கோடி மதிப்பிலான சொத்துகளை சேர்த்திருப்பதாக லஞ்ச ஒழிப்புத் துறை தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
சட்டவிரோத பணப்பரிமாற்றம்
இதையடுத்து சட்டவிரோத பணப்பரிமாற்றம் நடைபெற்றதா என அமலாக்கத் துறையும் விசாரணையை தொடங்கியது. விஜயபாஸ்கருக்கு எதிராக லஞ்ச ஒழிப்புத் துறை பதிவு செய்திருந்த வழக்கின் அடிப்படையில் சட்டவிரோத பணப்பரிமாற்ற தடுப்புச் சட்டத்தின் கீழ் அமலாக்கத் துறையும் தனியாக வழக்குப் பதிவு செய்திருந்தது.
அமலாக்கத் துறை விசாரணை
இதன் ஒரு பகுதியாக அமைச்சராக இருந்த சி.விஜயபாஸ்கருக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத் துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். அப்போது வழக்குக்கு வலுசேர்க்கும் வகையிலான முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக தகவல்கள் வெளியாகின.
சம்மனுக்கு ஆப்சென்ட்
இவ்வாறு கிடைக்கப்பெற்ற ஆவணங்கள், லஞ்ச ஒழிப்புத் துறை விசாரணையில் கிடைத்த தகவல்களை கொண்டு சி.விஜயபாஸ்கரிடம் நேரடியாக விசாரணை நடத்த அமலாக்கத் துறை முடிவு செய்தது. இதற்காக அவருக்கு முதற்கட்டமாக சம்மன் அனுப்பப்பட்டது. ஆனால் அவர் ஆஜராகவில்லை.
நேற்று ஆஜரான விஜயபாஸ்கர்
இதையடுத்து நவம்பர் 18ஆம் தேதி இரண்டாவது முறையாக சம்மன் அனுப்பப்பட்டது. அதன்படி நேற்றைய தினம் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள அமலாக்கத் துறை அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜரானார். அவரிடம் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர்.
9 மணி நேரம் விசாரணை
குறிப்பாக ஏற்கெனவே நடத்தப்பட்ட சோதனைகளில் பறிமுதல் செய்யப்பட்ட ஆவணங்களில் இடம் பெற்றுள்ள விவரங்கள் குறித்து கேள்விகள் எழுப்பியதாக சொல்லப்படுகிறது. அவரிடம் சுமார் 9 மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டது.
என்னென்ன கேள்விகள்?
கடந்த 5 ஆண்டுகளில் அவரது வங்கிக் கணக்குகளில் நடந்த பணப்பரிவர்த்தனைகள், வரவு செலவு விவரங்கள், பணம் எவ்வாறு வந்தது, சொத்துகளுக்காக எந்த நிதி ஆதாரம் பயன்படுத்தப்பட்டது உள்ளிட்ட பல்வேறு கேள்விகளை எழுப்பியிருந்தது. இதில் விஜயபாஸ்கர் அளித்த விளக்கங்களின் அடிப்படையில் அடுத்த கட்ட நகர்வுகள் இருக்கும் என தெரிகிறது.
விராலிமலை தொகுதி எம்எல்ஏ
விஜயபாஸ்கர், கடந்த சட்டசபை தேர்தலில் அதிமுக சார்பில் விராலிமலை தொகுதியில் போட்டியிட்டு வென்றார். இந்த நிலையில் அவர் தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் இணைந்தார். விராலிமலைக்கு இடைத்தேர்தல் வந்தால் தவெக சார்பில் அவர் களமிறக்கப்படுவார் என சொல்லப்படுகிறது.
இதற்காக முன்கூட்டியே தொகுதியில் பம்பரம் போல் சுற்றி வருகிறார். தீபாவளிக்கு அந்த தொகுதி மக்களுக்கு பரிசுப் பொருட்களை வழங்கினார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.




Click it and Unblock the Notifications
