Idly: இட்லி மாவு ஏன் புளிக்கிறது? ஈஸ்ட்டை தவிர! பின்னால் இருக்கும் அறிவியல் காரணம் என்ன?
சென்னை: இட்லி- Light Food.. காய்ச்சல் வந்தவர்கள், குழந்தைகள், வயதானவர்கள், உடல்நலம் பாதிக்கப்பட்டவர்கள் உள்ளிட்டோருக்கு எளிதில் ஜீரணமாவதற்காக இட்லி வழங்கப்படுகிறது. அப்படிப்பட்ட இட்லி அவிப்பதற்கு தயாரிக்கப்படும் மாவில் இருக்கும் அறிவியல் என்னென்ன என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
வீட்டில் சமைத்ததோ, ஹோட்டலில் வாங்கியதோ... ஏதோ ஒரு இட்லியை சாப்பிட்டோமா, வேலையை பார்த்தோமானு இருக்கக் கூடாது. அந்த தம்மாதுண்டு இட்லி பின்னால் என்னென்ன இருக்கிறது என்பதையும் விளக்கமாக தெரிந்து கொள்ள வேண்டும்.

இட்லி மாவு புளிப்பதற்கு என்ன காரணம்? ஈஸ்ட்டும் நொதித்தலில் பங்கு வகிப்பதால் மட்டும் இல்லை. அதில் சில பாக்டீரியாக்களின் அறிவியல் செயல்பாடுகளும் இருக்கின்றன. இட்லி மாவை பிரிட்ஜில் வைத்தால் ஏன் புளிப்பதில்லை, இரவு நேரத்தில் இட்லி மாவை வெளியில் வைப்பது ஏன் உள்ளிட்டவை குறித்தெல்லாம் ஆராய்ச்சிகளே நடந்துள்ள நிலையில் இட்லிதானே என கடந்து போய்விட முடியாது.
இந்த காலத்தில் சிறுதானியங்கள், பாரம்பரிய அரிசி உள்ளிட்டவைகளை கொண்டு இட்லி தயாரித்தாலும் புழுங்கல் அரிசியையும், உளுந்தையும் வைத்து தயாரிக்கும் இட்லி மாவு ஏன் புளிக்கிறது? இட்லி மாவு புளிப்பதற்கு முக்கிய காரணம் அதன் மேற்பரப்பில் உள்ள நுண்ணுயிரிகள். இவை மாவில் கலந்து சாதகமான வெப்பநிலையில் பல்கி பெருகுகின்றன. இதனால் மாவில் நொதித்தல் என்ற செயல் நடந்து மாவு புளிக்கிறது.
இரவு முழுவதும் இட்லி மாவை ஏன் வெளியே வைக்க வேண்டும்?
இரவு முழுவதும் வெளியே வைக்கும் இட்லி மாவில் வாயு உருவாகி மாவு உப்புவதற்கும், புளிப்பு சுவைக்கும் லாக்டிக் அமில (Leuconostoc Mesenteroides) பாக்டீரியாதான் காரணம். அதே போல் இட்லி மாவில் இயற்கையாக நொதித்தல் ஏற்பட Weissella என்ற பாக்டீரியா முக்கிய பங்காற்றுகிறது.
இட்லி ஏன் மல்லிகை பூ போல் வருகிறது?
இட்லி குறித்து சந்தானம் காமெடியில் வரும். "இட்லி மல்லிகைப் பூ போல் இருக்க வேண்டும். எலைல (இலை) வெக்கிறதா, இல்லை இவ தலைல வெக்கிறதான்னு குழப்புற மாதிரி இருக்கணும்"னு சொல்வார். அந்த வகையில் இட்லி மிருதுவாக வர காரணம் என்ன தெரியுமா? மாவு நொதிக்கும் போது (புளிக்கும்போது) பாக்டீரியாக்கள் மாவில் உள்ள கார்போஹைட்ரேட்டை சிதைத்து கார்பன் டைக் ஆக்ஸைடாக உருவாக்குகிறது. இந்த வாயு மாவிற்குள் ஆங்காங்கே நீர் குமிழ்கள் போல் அதிகரிக்கின்றன. இந்த நீர் குமிழ்கள்தான் இட்லி மென்மையாக இருக்க உதவுகின்றன. இதற்கு காரணமான பாக்டீரியா Leuconostoc Mesenteroides ஆகும். அது போல் இட்லி மாவில் நொதித்தல் ஏற்பட காரணமான பாக்டீரியா, Weissella ஆகும்.
இட்லி மாவு ஏன் புளிக்கிறது?
இட்லி மாவில் உள்ள பாக்டீரியாக்களால் லாக்டிக் அமிலங்கள் உருவாகின்றன. இதனால் மாவின் pH அளவு குறைந்து அமிலத் தன்மையாக மாறுகிறது. இதனால் புளிப்புச் சுவை இருக்கிறது. இட்லி மாவில் அமிலத்தன்மையை அதிகரித்து புளிக்க செய்வது Pediococcus பாக்டீரியாவும் ஒரு காரணம்.
இட்லி மாவு மழைக்காலங்களில் புளிக்காதது ஏன்?
இட்லி மாவு மழைக்காலங்களிலும், குளிர்காலங்களிலும் புளிக்காமல் போக என்ன காரணம் என்பதை பார்க்கலாம். நம் இருப்பிடத்தை சுற்றியிருக்கும் வெப்பநிலை மிகவும் குறைவாக இருக்கும். அதாவது குளிர்ச்சியான வானிலை நிலவும் போது மாவில் பாக்டீரியாக்களின் உற்பத்தி குறைந்தாலும் புளிக்காது. அது போல் நொதித்தல் மெதுவாக நடந்தாலும் புளிக்காது. அரிசியும் உளுந்தும் ஊறும் நேரம் அவை அரைக்க எடுத்துக் கொள்ளும் நேரம் இவற்றில் ஏதாவது தவறு இருந்தாலும் புளிக்காது.
புளிக்காத மாவில் இட்லி வார்க்கலாமா?
இட்லி மாவில் நொதித்தல் இல்லாவிட்டால் மாவு புளிக்காது, உப்பாது. இந்த மாவில் இட்லி தயாரித்தால் அது மிருதுவாக இருக்காது. சாப்பிட கடினமாக இருக்கும். ருசியாகவும் இருக்காது. எப்போதும் மாவை நொதிக்க வைத்து பயன்படுத்துவதே நல்லது, உடல்நலனிற்கு ஆரோக்கியமானதும் கூட!


Click it and Unblock the Notifications
