கரூரில் தோழியுடன் சென்ற இளைஞரை கடத்த முயன்ற கும்பல்! விசாரணையில் குழப்பம்! சிசிடிவியில் பரபரப்பு
கரூர்: கரூரில் பட்டப்பகலில் தோழியுடன் பைக்கில் சென்ற இளைஞர் ஒருவரை மர்ம கும்பல் தாக்கி சொகுசு காரில் கடத்த முயற்சி செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. காரில் கல் வீசியதற்காக தாக்குதல் நடத்தியதாக கூறும் தகவல் குறித்து போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கரூர் - திருச்சி நெடுஞ்சாலை அமைந்துள்ள காந்திகிராமம் மைதானத்திற்கு வெளியே அமைந்துள்ள புறக்காவல் நிலையம் எதிரே தோழியுடன் கிருஷ்ணராயபுரம் அடுத்துள்ள சித்தலவாய் நோக்கி இளைஞர் ஒருவர் சென்று கொண்டிருந்தார்.

அப்போது அந்த வழியாக காரில் வந்த மர்ம கும்பல் ஒன்று அந்த இளைஞரை நிறுத்தி சட்டையை பிடித்து தாக்கி தரதரவென இழுத்துக் கொண்டு காரில் ஏற்ற முயன்றனர்.
தான்தோன்றிமலை காவல் நிலையம்
இது தொடர்பாக அங்கிருந்த பொதுமக்கள் தான்தோன்றிமலை காவல் நிலையத்திற்கு அளித்த புகாரின் பேரில் அங்கு வந்த போலீஸார் இரு தரப்பையும் காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். காரில் வந்த மர்ம நபர்கள் வந்த காரின் பதிவு எண் சரியாக அடையாளம் காண முடியாத வகையில், இருப்பதாக தெரியவந்துள்ளது.
சம்பந்தப்பட்ட இளைஞர் கிருஷ்ணராயபுரத்தைச் சேர்ந்த விக்னேஷ்வரன் (27) என்பதும், இவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு காரை கல் எரிந்து சேதப்படுத்தியதாக அந்த நபர்கள் போலீஸாரிடம் புகார் தெரிவித்தனர். மேலும், கார் கண்ணாடி எதுவும் உடையவில்லை என்று கூறப்படுகிறது. இது தொடர்பாக இரு தரப்பினரிடமும் கடந்த இரண்டு மணி நேரத்திற்கு மேலாக போலீசார் விசாரணை நடத்தினர்.
இளைஞரை கடத்த முயற்சித்தது ஏன்?
குறிப்பாக இளைஞரை தாக்கிய நபர்கள் கூறும் தகவல் முன்னுக்குப் பின் முரணாக இருக்கும் நிலையில், கரூரில் பட்டப் பகலில் நடுரோட்டில் வைத்து இளைஞரை தாக்கிய சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தமிழகத்தில் அண்மைக்காலமாக கடத்தல் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. கள்ளக்குறிச்சியில் ஒரு சிறுமியின் வாயில் துணியை அடைத்து கடத்த முயன்ற வடமாநில இளைஞரை பிடித்து கட்டி வைத்த மக்கள் தர்மஅடி கொடுத்து போலீஸிடம் ஒப்படைத்தனர்.
கூடுவாஞ்சேரி சிறுமி கடத்தல்
அது போல் கூடுவாஞ்சேரி அருகே காரில் தனியாக இருந்த 12 வயது சிறுமி , காருடன் கடத்தப்பட்டு சீர்காழிக்கு கொண்டு செல்லப்பட்டார் . அங்கிருந்து எப்படியோ தப்பிய சிறுமி, ஆட்டோ டிரைவர்களின் உதவியுடன் பெற்றோரிடம் வந்தடைந்தார்.
செஞ்சி சிறுமி
செஞ்சியில் கடந்த மாதம் 12 ஆம் தேதி இரவு ஆலம்பூண்டி கிராமத்தைச் சேர்ந்த ஹேமலதா என்ற சிறுமி கடத்தப்பட்டு ஒரு மாதத்திற்கு மேல் ஆகியும் இதுவரை அவர் கிடைக்கவில்லை. இந்த வழக்கில் சத்தியமங்கலம் போலீஸாருக்கு எந்த துப்பும் கிடைக்காத நிலையில் சிபிசிஐடி போலீஸார் விசாரணை நடத்தி வருகிறார்கள். அவர்களும் கடந்த 25 நாட்களுக்கு மேலாக அந்த கிராமத்தில் தங்கி விசாரணை நடத்தி வரும் நிலையில் சிறுமி குறித்து ஒரு சிறிய தகவல் கூட கிடைக்கவில்லை.
அது போல் விருத்தாசலம் அருகே மகனுடன் வெளியே செந்ற மனைவியை காணவில்லை என அவரது கணவர் கருவேப்பிலங்குறிச்சி போலீஸில் புகார் கொடுத்துள்ளார்.


Click it and Unblock the Notifications
