For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

திராவிட இயக்க வரலாறு..

By Super
Google Oneindia Tamil News

Dravida iyakka varalaaru
இன்று முதல் நமது இணையத்தளத்தில் பல்வேறு பதிப்பாளர்கள், எழுத்தாளர்களின் புத்தகங்கள் இடம் பெறும். முதல் நூலாக ஆர்.முத்துக்குமார் எழுதி கிழக்குப் பதிப்பகம் வெளியிட்ட 'திராவிட இயக்க வரலாறு' (பாகம்-1) நூல் வெளியாகிறது.

எடுத்த எடுப்பிலேயே ஏன் திராவிட இயக்க வரலாறு?.

திமுக. இல்லாவிட்டால் அதிமுக. இரண்டையும் தாண்டி இன்னொரு இயக்கம் இங்கே ஆட்சியைப் பிடிப்பது சாத்தியமில்லை. சாமானியர்கள் மட்டுமல்ல அரசியல் ஆய்வாளர்களும்கூட ஒப்புக்கொண்டுள்ள உண்மை இது. திராவிட இயக்கத்துக்கு நாங்கள்தான் மாற்று என்று சொல்லிக்கொண்டு பல இயக்கங்கள் பெயரளவில் செயல்பட்டபோதும் இன்றுவரை அப்படியொரு சக்தி உருவாகாமலேயே இருக்கிறது. 2011 பொதுத் தேர்தல் தொடங்கி உள்ளாட்சித் தேர்தல் வரை உணர்த்தப்பட்டுள்ள அழுத்தமான பாடம் இது.

தமிழகத்தை நீண்டகாலம் ஆட்சி செய்தது திராவிட இயக்கம்தான் என்றாலும் தொடங்கப்பட்ட தினம் தொடங்கி இன்றுவரை, கடும் விமரிசனங்களையும் கண்டனங்களையும் திராவிட இயக்கம் சந்தித்து வருகிறது. வெள்ளையனுக்கு வால்பிடித்த இயக்கம். வகுப்புவாத அரசியலை வளர்த்த இயக்கம். நாத்திக சிந்தனையை வளர்த்தெடுத்த இயக்கம். இந்திய சுதந்தரத்துக்கு எதிரான இயக்கம். பிரிவினைவாதத்தின் கூறுகளை இன்னமும் கொண்டிருக்கும் இயக்கம். இப்படி அடுக்கிக்கொண்டே போகலாம்.

இந்த நூற்றாண்டின் சர்சைக்குரிய திராவிட இயக்கத் தலைவராக பெரியாரே இன்றளவும் நீடிக்கிறார். கடவுள் மறுப்பாளராக, இந்து மதத்தைப் புண்படுத்தும் நாத்திகவாதியாக, மக்களின் அறியாமையைப் பயன்படுத்தி அவர்களைத் தவறான வழியில் அழைத்துச் சென்றவராக, கண்மூடித்தனமானக் கொள்கைகளைப் பரப்பியவராக இன்றளவும் பெரியார் முன்னிறுத்தப்படுகிறார்.

திமுக என்னும் கட்சி உருவானபோது இந்த விமரிசனங்கள் இன்னமும் கூர்மையாயின. அதுவரை பிரசார இயக்கத்தினராக மட்டுமே அறியப்பட்டு வந்த சிலர் தனிக்கட்சி தொடங்கி, ஆட்சியையும் கைப்பற்றியபோது, கொந்தளிப்புகள் பெரிதாகின. கொடியை வைத்தே கொள்கை வளர்த்தவர்கள்; கோஷம் போட்டே கோட்டையைப் பிடித்தவர்கள்; கோட்டையை வைத்தே கோடிகளைக் குவித்தவர்கள்; கூத்தாடிகளின் கூடாரம் என்று திராவிட இயக்கத்துக்கு எதிரான கடுமையான குற்றச்சாட்டுகள் கிளம்ப ஆரம்பித்தன.

ஒரு கட்டத்தில், சமூகத்தின் ஒழுங்கீனங்கள் அனைத்துக்கும் திராவிட இயக்கமே காரணம் என்று சொல்ல ஆரம்பித்தார்கள். கொலையா? கொள்ளையா? ஊழலா? அதிகார அத்துமீறலா? அதோ பாருங்கள், திராவிட இயக்கத்தை! நம்புங்கள், அரசியல் விமரிசகர்கள் தொடங்கி ஆய்வாளர்கள் வரை பலரும் இப்படித்தான் சொன்னார்கள்.

அன்று மட்டுமா? இப்போதும்தான். காவிரி பிரச்னை; கச்சத்தீவு பிரச்னை; ஈழப்பிரச்னை; முல்லை பெரியாறு பிரச்னை; கல்விப் பிரச்னை; வேலையில்லாத் திண்டாட்டம் என்று அனைத்துக்கும் திராவிட இயக்கத்தையே கை காட்டுகிறார்கள். பிரச்னைகளை உருவாக்கியதும் அவர்கள்தான் காரணம். பிரச்னைகளைத் தீர்க்காமல் இருப்பவர்களும் அவர்கள்தான். காரணம் எளிமையானது. தமிழகத்தை அதிக காலம் ஆண்ட ஓர் இயக்கம் தானே, தமிழகத்தின் அத்தனை பிரச்னைகளுக்கும் ஊற்றுக்கண்ணாக இருக்கமுடியும்?

பிரச்னை என்னவென்றால், வரலாறை அத்தனைச் சுலபமாக எளிமைப்படுத்திவிட முடியாது. இந்த ஒற்றை வரி வேதாந்தம் உண்மை என்றால், கடந்து நூறு ஆண்டுகளாக திராவிட இயக்கம் நீடித்து நிலைத்திருப்பது எப்படி? அதைவிட முக்கியமான கேள்வி, ஏன்?

இந்தக் கேள்விகளை முன்வைத்து ஆராயப் புகுந்தால், முற்றிலும் நேர் எதிரான ஒரு சித்திரம் காணக்கிடைக்கிறது. ஐந்து தலைமுறை மக்களிடையே அரசியல் சிந்தனைகளை விதைத்த பேரியக்கமாக திராவிட இயக்கம் விளங்குகிறது. மொழி, கலை, இலக்கியம், கலாசாரம், பண்பாடு, சமூகம், அரசியல் என்று தமிழர்களின் சிந்தனைப் போக்கில் திராவிட இயக்கம் செலுத்திய தாக்கம் மிக முக்கியமானது.

திராவிட இயக்கம் என்பது தனியொரு இயக்கம் அல்ல; மாபெரும் மக்கள் இயக்கம். இன்னும் சொல்லப்போனால் சற்றேறக்குறைய ஒத்த சிந்தனை கொண்ட பல்வேறு இயக்கங்களின் தொகுப்பு. ஆம். நீதிக்கட்சி, சுயமரியாதை இயக்கம், திராவிடர் கழகம், திராவிட முன்னேற்றக் கழகம், அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம், மக்கள் திராவிட முன்னேற்றக் கழகம், பெரியார் திராவிடர் கழகம், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் உள்ளிட்ட இயக்கங்களை உள்ளடக்கிய ஒரு பேரியக்கமே, திராவிட இயக்கம்.

என்றாலும், விமரிசனங்களும் குற்றச்சாட்டுகளும் குவிந்த அளவுக்கு நடுநிலையான வரலாற்றுப் பதிவுகளோ, நேர்மையான மதிப்பீடுகளோ திராவிட இயக்கம் பற்றி உருவாக்கப்படவில்லை. உதிரிகளாக சில, பல கட்சி வரலாறுகளும் வாழ்க்கை வரலாறுகளும், நினைவுக் குறிப்புகளும் மட்டுமே காணக்கிடைக்கின்றன. அல்லது, 'விமரிசனப்பூர்வமான பார்வை" என்னும் பெயரில் வெளியான தாக்குதல் நூல்கள் அல்லது 'நடுநிலையான" என்னும் பெயரில் வெளியான திராவிட இயக்கப் போற்றி பனுவல்கள்.

நம் தேவை, திராவிட இயக்கம் பற்றிய ஒரு முழுமையான வரலாற்றுப் பார்வை. நிறைகளையும் குறைகளையும் சாதனைகளையும் சறுக்கல்களையும் ஒருங்கே அணுகும் திறன்.

பிராமணர் அல்லாதோர் சங்கமாகத் தொடங்கி, ஜஸ்டிஸ் கட்சி வழியே திராவிடர் கழகமாகி, பின்னர் பெரியாருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் காரணத்தால் அண்ணா பிரிந்து திராவிட முன்னேற்றக் கழகத்தைத் தொடங்கியது, பின்னர் அதில் உருவான சிக்கல்கள், பிளவுகள், கலைஞர்-எம்.ஜி.ஆர். காலம், எம்.ஜி.ஆருக்குப் பிந்தைய அ.தி.மு.கவின் உட்கட்சிப் பூசல்கள், ஜானகி காலம், ஜெயலலிதா காலம், தி.மு.கவிலிருந்து வைகோ பிரிந்தது, கலைஞர்-ஜெயலலிதா காலம் என்று திராவிட இயக்கத்தின் அத்தனை அசைவுகள் குறித்தும் அலசும் பதிவுகள் இதுவரை உருவாகவில்லை.

அதைப்போலவே திராவிட இயக்கத்தின் முக்கியக் கூறுகளாகப் பார்க்கப்படும் திராவிட நாடு கோரிக்கை, இந்தி எதிர்ப்பு, இட ஒதுக்கீடு, பகுத்தறிவு, சுயமரியாதை, மாநில சுயாட்சி போன்ற சங்கதிகள் குறித்தும் முழுமையான பதிவுகள் இதுவரை இல்லை.

தமிழகத்தின் சமூக, அரசியல் மற்றும் பொருளாதார மாற்றங்களுக்கு திராவிட இயக்கத்தின் பங்களிப்பு என்ன? ஆதிக்க பிராமண அரசியலுக்கும் பண்பாட்டுக்கும் கலாசாரத்துக்கும் மாற்றாக திராவிட இயக்கம் முன்வைத்தவை யாவை?

அரசியல் சார்புநிலை என்பதைத் தாண்டி தமிழர்களின் சமகால வரலாறும் பெருமளவில் அடங்கியிருக்கிறது என்ற ஒரு காரணத்துக்காகவே திராவிட இயக்கத்தை நாம் அறிந்துகொள்ளத்தான் வேண்டும்.

அதற்குத்தான் இந்த 'திராவிட இயக்க வரலாறு."

English summary
Dravida iyakka varalaaru wrote by R.Muthukumar and published by New Horizon media dwells in the history of Dravidian movement
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X