For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

எங்க ஏரியா.. நம்ம சென்னை: கோடலம்பாக்கம் மருவி.. கோடம்பாக்கம் ஆனது!

Google Oneindia Tamil News

சென்னை: சென்னையின் மைய்ய பகுதியிலுள்ள கோடம்பாக்கம் பழமையான ஊர். இதன் பெயர் உண்மையில் கோடலம்பாக்கம் தான். பல நூற்றாண்டுகளாக கோடலம்பக்கம் இருந்ததற்கான ஆதாரங்கள் தமிழ் இலக்கியங்களிலுருந்தும், புலியூர் வேங்கீஸ்வரர் கோயில் தலபுராணத்திலிருந்தும் தகவல்கள் கிடைக்கின்றன.

Recommended Video

    எங்க ஏரியா.. நம்ம சென்னை: கோடலம்பாக்கம் மருவி.. கோடம்பாக்கம் ஆனது!

    சென்னை இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு மேல் பழமையானது என்பதை இந்தியாவின் முதல் சர்வேயர் ஜெனரல் காலின் மெக்கன்சி என்ற ஆங்கிலேயர் பதிவு செய்த்திருக்கிறார். மெக்கன்சி ஆவணங்களில் 2,000 ஆண்டுகள் முன்பு சென்னையின் பல பகுதிகள் புலியூர் கோட்டம் கீழ்தான் இயங்கின. சென்னையின் பழைய பெயர் புலியூர் கோட்டம் என்பதும் அதன் தலைமை புலியூரில் இருந்தது என்று அந்த ஆவணங்களிலிருந்து தெரியவருகிறது. கோடம்பாக்கம் புலியூரின் பகுதி ஆகும்.

    Chennai: How the name Kodalambakkam changed as Kodambakkam?

    இந்த பகுதியில் கோடல் என்ற மலர் அதிகமாக இருந்ததனால் கோடலம்பக்கம் என்ற பெயர் அமைந்தது. கோடல் அல்லது வெண்காந்தள் (Gloriosa modesta) என்பது காந்தள் மலர். குறிஞ்சிப்பாட்டு மலர்களின் பெயரை அடுக்கிக் காட்டும்போது ஒண்செங்காந்தள் என்று செங்காந்தள் மலரையும், கோடல் என்று வெண்காந்தள் மலரையும் குறிப்பிடுகிறது.

    பண்டைக்காலத்தில் கோடலம்பாக்கம் எனப் பெயர்ப் பெற்றிருந்ததாகத் தெரிகின்றது. இலக்கியங்களில் இது 'கோடலம் பாகை' எனவும், 'கோடல்' எனவும் குறிப்பிடப் பெற்றுள்ளது. 'பாகை' என்பது 'பாக்கம்' என்பதன் மரூஉ. கோடலம்பாக்கம் என்பதே இந்நாளில் கோடம்பாக்கம் என மருவி வழங்கி வருகின்றது. இவ்வுண்மை பின்வரும் செய்திகளாலும், சான்றுகளாலும் உணரப்படுகின்றது.

    'ஞானாமிர்தம்' என்பது ஒரு சிறந்த சைவ சித்தாந்த சாத்திர ஞான பெரு நூல். இது சித்தாந்த சாத்திரங்கள் பத்திநான்கிலும் பழமை வாழ்ந்தது. சங்க இலக்கியங்களைப் போன்ற தமிழ் நடைநலம் சார்ந்தது. இத்தகைய சிறந்த ஞானப்பெருநூலை இயற்றியவர் வாகீச முனிவர் என்னும் மாபெறும் சான்றோர் ஆவர். இவர் சென்னை திருவொற்றியூரில் சிலகாலம் வாழ்ந்து வந்தார். இரண்டாம் இராசாதி ராசன் (கி.பி 1163 - 1186 ) காலத்தில், அவனது ஒன்பதாம் ஆட்சியாண்டில், திருவொற்றியூர் ஆதிபுரீஸ்வரர் கோவிலில் பங்குனி உத்திரபெருவிழா நடைபெற்றது. அதற்கு இரண்டாம் இராசாதி ராச சோழனும் வந்திருந்தான். ஆறாம் திருநாள் அன்று திருவொற்றியூர் ஆதிபுரீஸ்வரர் கோவிலில் இராசாதிராச சோழனுடன் இருந்து கேட்டவர்களுள் வாகீச முனிவரும் ஒருவர் என்று கல்வெட்டு (S .I. I . Vol . VI . நோ. 1354 ) ஒன்று விளக்குகிறது. அரசரும் மதித்துப் போற்றும் மாட்சிமை பட்டறிந்தவரும், கோள்கி மடம் என்பதன் தலைவராக விளங்கியவரும், ஞானாமிர்த நூலின் ஆசிரியரும் ஆகிய வாகீச முனிவர் கோடம்பாக்கத்திலும் வாழ்ந்து வந்தார் என்று தெரிகின்றது. வாகீச முனிவர் கி.பி. 1145 முதல் கி.பி. 1205 வரை வாழ்ந்தவராதல் கூடும் என அறிஞர்கள் கருதுகின்றனர்.

    இவ்வாக்கீச முனிவர் மட்டுமேயன்றி, அவர் தம் ஞானாசிரியர் ஆகிய பரமானந்த முனிவர் என்பவரும் கோடம்பாக்கக்கத்திலியே தங்கி வாழ்ந்திருந்தார் என்பதற்குச் சான்றுகள் உள்ளன. அவர் இயற்பெயர் அருள்மொழித்தேவர். வாகீச முனிவர் தனது ஞானாசிரியர் பரமானந்த முனிவர் பற்றி குறிப்பிடுகையில் 'கோடல் ஆதி' என்று குறிப்பிடுகிறார்.

    "புண்ணியம் படைத்து மண்மிசை வந்த
    தோற்றத்தன்ன ஆற்றல் எங் குரிசில்!
    குணப் பொற்குன்றம்: வணக்க வாரோ
    ஐம்புல வேயத்து வெந்தொழில் அவியக்
    கருணை வீணை காமுறத் தழீ இச்
    சாந்தக் கூர்முள் ஏந்தினன் நீறி இத்
    தன்வழிக் கொண்ட சைவ சிகாமணி!
    பரமானந்த திருமா முனிவர்! எனவும்;
    பாடல் சான்ற புல்புகழ் நீறிஇ
    வாடாத் துப்பின் கோடல் ஆதி !
    அருள் ஆபரணன்! அறத்தின் வேலி!
    பொருந் மொழி யோகம் கிரியையிற் புணர்த்த
    அருண்மொழி திருமொழி போலவும் .."

    (புலவர்களால் பாடப்பெறும் அத்தகு புகழை இவ்வுலகில் நிலைநிறுத்தி, குன்றாத ஞானநேரத்தைக் கைக்கொண்டு, கோடலம் பாகை என்னும் ஊரின் முதல்வராய், கருணை என்னும் அணிகலனைப் பூண்டவராய் அரத்தைப் பாதுகாக்கும் அரண் போறவராய், ஆகமகங்களின் ஞானபாதத்தையும் யோகா பாதத்தையும் கிரியா பாதத்தையும் அடியேனுக்கு உபதேசித்த அருள்மொழித் தேவராகிய எனது ஞானாசிரியர், உபதேச மொழியில் அடங்கியுள்ள உண்மைகளை போல, அழிவின்றியும் நாற்கதியிலும் என்றும் நித்தியமாய் இருக்கும்). செய்யுளின் இறுதிப் பகுதியில், வாகீச முனிவர், தமது ஞானாசிரியரை நினைவுகூர்ந்து அவரது அருமை பெருமைகளைய் பாராட்டி மகிழ்கிறார்.

    அவர் தமக்கு வழங்கிய அருள் உபதேசத்தில் அடங்கியுள்ள உண்மைகள் என்றும் அழியாது நிலைத்து நிற்பன. அதுபோலச் சித்தாகிய உயிரும் நாற்கதியில் அச்சுமாறிப் பிறந்து வரினும் அழிவின்றி நிலைத்து நிற்கும் என்கின்றார்.

    எனவும், ஞானாமிர்தத்திலுள் (4 ,28 ) வாகீச முனிவர் பரமானந்த முனிவரைப் புகழ்ந்து பாராட்டிப் மகிழ்கின்றார்.
    இச்செய்திகளை -
    "இருள்நெறி மாற்றித்தன் தாள் நிழல்
    இன்பம் எனக்களித்தான்
    அருள்மொழித் தேவன் ! நற் கோடலம்
    பாகை அதிபன் ! எங்கோன்!
    திருநெறி காவலன்! சைவ
    சிகாமணி ! சில் சமய
    மருள்நெறி மாற்ற வரும்
    பரமானந்த மாமுனியே!"

    என வாகீச முனிவர் பாடியுள்ள தனிப்பாடலும் இனிது விளக்குகின்றது. பரமானந்த முனிவரை 'கோடலம் பாகை அதிபன்' என்று பாராட்டுகிறார்.

    இவ்வற்றால் ஏறத்தாழ 800 - 900 ஆண்டுகளுக்கும் முன்பே, கோடம்பாக்கம் இலக்கியப் புகழ் பெற்றுச் சிறப்புடன் விளங்கி வந்திருக்கிறது.

    'வாகீச முனிவரின் ஞானாமிர்தம் சைவ சித்தாந்த ஞானத் திறவுகோல் -- என்ற புத்தகத்தில் அதன் எழுத்தாளர் ஆ. ஆனந்தராசன் ஞானாமிர்த ஆசிரியர் பற்றிய வாழ்க்கைக் குறிப்பை பதிவு செயகிறார். "தமிழ்நாட்டில் மெய்கண்ட சந்தானத்த்திற்கு முன்பு கோளகி சந்தானம் என்ற ஒரு மரபு சிறப்புற்று விளங்கியது. அதன் கிளை மடங்கள் அந்நாளில் நாட்டின் பல பகுதிகளில் அமைந்திருந்தன.

    சென்னை திருவொற்றியூரில் இந்த கோளகி சந்தானத்தின் கிளை மடத்தில் வாகீசர் என்பார் அரசர் மதிக்கும் பெருமை பெற்று விளங்கினார். அவர் செந்தமிழில் வடமொழிலும் பெரும் புலமை பெற்று விளங்கினார். தமிழிலக்கியங்களில் குறிப்பாகச் சங்கச் சான்றோர் செய்யுட்களில் அவருக்கு மிகுந்த ஈடுபாடும் தோய்வும் இருந்தது. அதுபோலவே வடமொழியில் உள்ள சிவாகமங்களிலும் அவருக்கு நிரம்பிய பயிற்சி இருந்தது. அவரது பெரும்புலமையை கண்டே வாகீச பண்டிதர் என்று அவரை அழைக்கலாயினர்.

    அவரது ஞானாசிரியராக விளங்கியவர் பரமானந்த முனிவர். அவரது இயற்பெயர் அருள்மொழித் தேவர் என்பது. இவ்வாசிரியர் கோடலம்பாகை என்னும் ஊரினர். அவ்வூரே பின்னாளில் கோடம்பாக்கம் என மருவியது. அஃது இப்பொழுது சென்னையின் ஒரு பகுதியாக உள்ளது.

    திருவொற்றியூரில் சமயப் பணிபுரிந்த வாகீச பண்டிதர் பின்னர் திருநெல்வேலி மாவட்டத்துத் திருவாலீச்சுரம் என்ற ஊரில் விளங்கிய கோளகி சந்தானத்தின் கிளை மடத்திற்கு தலைவராக வந்து சேர்ந்தார். அத்திருமடத்திற்குத் தலைமை தாங்கியிருந்த காலத்தில்தான் வாகீச பண்டிதர் சிவாகமங்களின் சாரமாய் விளங்கும் ஞானாமிர்தம் என்ற இந்த நூலைச் செய்தார். இதன் பின்னர் வாகீச பண்டிதர் வாகீச முனிவரானார். இதன் பின்னர் வாகீச பண்டிதர் வாகீச முனிவரானார். அவர் வாழ்ந்த காலம் கி. பி. 12-ஆம் நூற்றாண்டு என்பது கல்வெட்டுச் சான்றுகளால் உறுதிப்படுகிறது.

    மெய்கண்டார் காலம் 13-ஆம் நூற்றாண்டு ஆதலால் அவருக்கு ஏறத்தாழ ஒரு நூற்றாண்டிற்கு முன்னர் வாழ்ந்தவர் ஞானாமிர்த ஆசிரியர் என்று நாம் கொள்ளலாம். ஞானாமிர்த ஆசிரியர் வாழ்ந்த காலம் கடந்து பல நூற்றாண்டுகள் ஆகிவிட்டன. எனவே அவரது புற வாழ்க்கையைப் பற்றிய திட்டவட்டமான குறிப்புகளை அறிதற்கு இயலவில்லை. ஆயினும் அவருடைய உள்ளத்து உணர்வுகளை நாம் உணர்வதற்குப் போதிய கருவியாக அவர் விட்டுச் சென்றுள்ள ஞானாமிர்தமாகிய நூல் நமக்கு கிடைத்துள்ளது."

    புலியூர்: வேங்கீசுவரர் திருக்கோயில் தலவரலாறு

    முன்னொரு காலத்தில் மத்தியந்தினர் என்னும் ஒரு பெரு முனிவர் இருந்தார். அவருக்கு ஒரு தவப்புதல்வர் தோன்றினார். அப்புதல்வரின் பெயர் மழ முனிவர். இறைவனைப் பூசித்து வழிபடம் செய்ய, மரங்களை ஏறி, கையும் காலும் புலியைப் போல வலிமையான நகங்களை பெறவும், அவைகளில் காணும் திறன்மிக்க சிறந்த கண்கள் அமையப் பெறவும் வேண்டினார். இறைவனும் அவ்வாறே அளித்தார். மலர் பறித்துச்சாத்தி இறைவனை வழிபடுதற் பொருட்டுத் தம் கைகால்களில் புலியைப் போன்ற வலிமை மிக்க நகங்களைப் பெற்றதனால் இவருக்கு புலிக்கால் முனிவர் (வியாக்கிரபாதர், வியாக்கிரம் - புலி; பாதம் - கால்) என்னும் காரணப் பெயர் ஏற்பட்டது.

    இவ்வாறு புலிக்கால் முனிவர் என்னும் பெயர் பெற்ற (வியாக்கிரப்பதை) முனிவர், பல புண்ணியத் தலங்களைத் தரிசித்துக் கொண்டு வந்து, தில்லை என்னும் சிதம்பரத்திற்குச் சென்று நடராசப் பெருமானை வழிபட்டு அருள் பெறுவதற்கு முன்னர், இங்கு நெடுநாள் தங்கித் தம் பெயரால் ஒரு சிவலிங்கத்தை நிறுவி, வழிபட்டு வாழ்ந்து வந்தார். புலிக்கால் முனிவர் தங்கி வழிபடப் பெற்ற ஊராதலின் இதற்குப் புலியூர் என்றும், இங்குள்ள சிவப்பெருமானுக்குப் புலியூரைடையார் என்றும் பெயர்கள் அமைந்தன.

    புலியூர் என்பது, வியாக்கிரபுரி எனவும் வழங்கும். ஆதலின் இங்குள்ள இறைவனின் பெயர் வியாக்கிரபுரீசுவரர் எனவும் வழங்கப்படும். புலிக்கு வேங்கை எனவும் ஒரு பெயர் உண்டாதலின், புலியூருக்கு வேங்கைப்புறம் எனவும், அங்குள்ள இறைவனுக்கு வேங்கீசுவரர் எனவும் பெயர்கள் அமைந்தன. எனவே புலியூரைடையார் - வியாக்கிரபுரீசுவரர் - வேங்கீசுவரர் என்னும் பெயர்கள் அனைத்தும், இங்குள்ள சிவபெருமானுக்குரிய திருப்பெயர்களாகும். கோடம்பாக்கம் புலியூர் வேங்கீசுவரர் கோயிலில், இவ்வரலாறுக்குச் சான்றாக, இன்று வியாக்கிரபாதர் (புலிக்கால் முனிவர்) அவர்களின் சிலையை காணலாம்.

    அதே புலியூரில் இன்னொரு பழமையான சிவன் கோவில் -- வாலீஸ்வரர் (பாரத்வாஜேஸ்வரர்) கோவில். இங்குள்ள சிவன் லிங்கத்தை புலியூர் திருவாலிகோலில்-உடைய நாயனார் என்று அழைப்பர். இங்கு சிவ லிங்கத்தை மகரிஷி பாரத்வாஜேஸ்வரர் நிறுவியதால் இந்த கோவிலுக்கு பாரத்வாஜேஸ்வரர் என்ற பெயர் அமைந்தது. மேலும் வாலி இங்கு பூஜை செய்ததினால் இக்கோவில் வாலீஸ்வரம் என்றும் அழைக்கப்படுகிறது.

    13ஆம் நூற்றாண்டின் இரண்டு கல்வெட்டுகள் இந்த பகுதி புலியூரை சார்ந்தது என்று தெரிவிக்கின்றன. புலியூரில் உள்ள (வாலீஸ்வரர்)
    பாரத்வாஜேஸ்வரர் கோவில் வடக்கு சுவற்றில் பொத்தப்பி சோழன் எனும் ஒரு தெலுங்கு சோழன் மன்னர் நிறுவிய கல்வெட்டு நமக்கு கிடைக்கிறது (சென்னை மாவெட்டு கல்வெட்டுகள், தமிழக தொல்லியல்துறை; No. 80 of ARE 1941-42).

    வாலீஸ்வரர் (பாரத்வாஜேஸ்வரர்) கோவிலில் 13ஆம் நூற்றாண்டின் இன்னொரு கல்வெட்டு (1259-1279 CE காலத்தை சேர்ந்தது), மேற்கு சுவற்றில் உள்ளது. தெலுகு சோழ மன்னர்கள் வரிசையில் விஜயகாந்த கோபால தேவர் என்னும் மன்னன் காலத்து கல்வெட்டு என்று குறிப்பு உள்ளது. புலியூர் கோட்டம் புலியூரிலுள்ள பாரத்வாஜேஸ்வரர் கோவிலில் உள்ள நாயனாருக்கு சந்தி விளக்கேற்ற இரண்டு மாடுகளை திருவேற்காடு பகுதியை சார்ந்த தில்லைக்கூத்தன் பொன்னப்பிள்ளை என்பவர் தானமாக வழங்கினார் என்று இக்கல்வெட்டு குறிப்பிடுகிறது. (No. 79 of ARE 1941-42).

    இதே கோவிலில், 17-ஆம் ஆண்டு காலத்து கல்வெட்டு விநாயகர் சந்நிதிக்கு முன்னாள் தரையில் உள்ளது. ஆனால் அந்த கல்வெட்டின் ஒரு பகுதி மட்டும் உள்ளது (சென்னை மாவெட்டு கல்வெட்டுகள், தமிழக தொல்லியல்துறை).

    எனவே புலியூர் மிகவும் பழமையான ஊரு என்றும், ஒரு வரலாற்று சிறப்புமிக்க ஊரு என்றும், கோவில்களின் தலவரலாறுகளும், தமிழ் இலக்கியங்களும், கல்வெட்டுகளும் கூறுகின்றன.

    நவீன திரைப்படங்கள் உருவாகும் இடமாக இந்த பகுதி இருந்தாலும் மிகவும் பழமையான கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் இடமாக புலியூர் இருந்திருக்கிறது.

    கட்டுரை, தகவல்: ஆர். சித்ரா, இயக்குநர், சென்னை 2000 ப்ளஸ் அறக்கட்டளை.

    English summary
    How the name Chennai's Kodalambakkam changed as Kodambakkam? a look back story.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X