For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

நீங்க எப்போ எப்படி டிசைன் டிசைனாக நடிப்பீர்கள் எனத் தெரியும்! அதிமுக-பாஜகவை சாடிய முதல்வர் ஸ்டாலின்!

Google Oneindia Tamil News

சென்னை: நீங்க எப்போது எப்படி டிசைன் டிசைனாக நடிப்பீர்கள் எனத் தெரியும் என்று பேசி அதிமுகவையும், பாஜகவையும் வெளுத்து வாங்கியிருக்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின்.

குஜராத் முதலமைச்சராக இருந்த போது மாநிலங்களின் உரிமை பற்றி பேசிவிட்டு, இப்போது பிரதமரான பிறகு மாநிலங்களின் உரிமைகளை பறிப்பது ஏன் என வினவியிருக்கிறார்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் திமுக மற்றும் அதன் தோழமைக் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து காணொலி மூலம் பிரச்சாரம் செய்த அவர் இதனைக் கூறினார்.

Cm Stalin Criticize to admk and bjp iin his Election Campaign

இதனிடையே அவர் ஆற்றிய உரையின் முழு விவரம் வருமாறு:

வடவேங்கடம் தென்குமரி ஆயிடைத் தமிழ்கூறு நல்லுலகம் - என்று தமிழ்நிலப்பரப்பின் எல்லையாகப் போற்றப்படுகின்ற இந்த கன்னியாகுமரி மாவட்டத்தில் நடைபெறும் 'உள்ளாட்சியிலும் மலரட்டும் நம்ம ஆட்சி' என்ற சிறப்புக் கூட்டத்தில் கலந்துகொண்டு உங்களை எல்லாம் காணொலி மூலமாக சந்திக்கும் வாய்ப்பைப் பெற்றமைக்கு மகிழ்ச்சி அடைகிறேன்.

தந்தை பெரியார் அவர்கள் சுயமரியாதை இயக்கத்தைத் தொடங்கிய பிறகு குமரி பகுதியில் கோட்டாறு என்ற ஊரில் சுயமரியாதை வாசகசாலை தொடங்கப்பட்டது.

வைக்கம் சென்று போராடிய பெரியார் அவர்கள், குமரி வட்டாரத்தில் உள்ள சுசீந்திரம் கோவில் நுழைவுப் போராட்டத்திலும் பங்கெடுத்தார்கள். குமரி மாவட்டமானது இன்றைக்குத் தமிழ்நாட்டுடன் இருந்தாலும் 1956-க்கு முன்னதாகத் திருவிதாங்கூர் சமஸ்தானத்துடன் இணைந்து இருந்தது. திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் இருந்த தமிழர் வாழும் பகுதிகளைத் தமிழ்நாட்டுடன் இணைக்க வேண்டும் என்று தென் எல்லையில் போராட்டம் நடந்தபோது பேரறிஞர் அண்ணா அவர்கள் அந்தப் போராட்டத்தை முழுமையாக ஆதரித்தார்கள்.

தென் எல்லைப் போராட்டத்தைப் பொறுத்தவரையில் என்ன செய்ய வேண்டும் என்பது தொடர்பாக "நாகர்கோவில் மாவட்டச் செயலாளரான ஜான் அவர்களுக்கு முழு அதிகாரம் தருகிறேன்" என்று பேரறிஞர் அண்ணா அவர்கள் அறிவித்தார்கள்.

தென் எல்லைப் போராட்டத்தை ஆதரிப்பதற்காக நாகர்கோவிலுக்கே அண்ணா அவர்கள் வருகை தந்தார்கள். தொடர் மறியல் போராட்டத்தில் இறங்கியது திமுக. 1954-ஆம் ஆண்டு நடந்த தென் எல்லை விடுதலைப் போராட்ட மறியலில் கைதான 900 பேரில் திமுகவைச் சேர்ந்தவர்கள் 110 பேர் ஆவர். மரியாதைக்குரிய தலைவர் மார்ஷல் நேசமணி அவர்கள் கைதானபோது அவரை விடுதலை செய்ய வேண்டும் என்று தி.மு.க., மாநாட்டில் தீர்மானமே நிறைவேற்றப்பட்டது.

ஏராளமானோரின் உயிரைக் கொடுத்துப் பெற்ற உரிமையின் காரணமாக 1956-ஆம் ஆண்டு இந்த கன்னியாகுமரி மாவட்டம் உருவானது. 1974-ஆம் ஆண்டு தென் எல்லைப் போராட்டத் தியாகிகளுக்கு நிதி உதவி செய்து மரியாதை செய்த அரசுதான் திராவிட முன்னேற்றக் கழக அரசு ஆகும். புதுக்கடைத் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த 11 பேர் குடும்பத்துக்கு தலா 2000 ரூபாய் நிதி உதவியும் - மாற்றுத்திறனாளிகளாக ஆக்கப்பட்ட 25 பேருக்குத் தலா 500 ரூபாயும் - 82 தியாகிகளுக்கு தியாகச்செம்மல் விருதும் வழங்கியவர் அன்றைக்கு முதலமைச்சராக இருந்த முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள். சிறைசென்ற தியாகிகளுக்கு மாதம் 75 ரூபாய் வழங்க உத்தரவிட்டார்கள். 2000-ஆம் ஆண்டு மொத்தம் 142 தியாகிகளுக்கு உதவி செய்யும் பட்டியலை அன்றைய முதலமைச்சர் கலைஞர் அவர்கள் அங்கீகரித்து நிதி உதவி செய்ய உத்தரவிட்டார்கள்.

இந்திய விடுதலைப் போராட்டத் தியாகிகளைப் போல - மொழிப்போராட்டத் தியாகிகளைப் போல - கன்னியாகுமரி எல்லைப் போராட்டத் தியாகிகளையும் மதித்துப் போற்றிய இயக்கம்தான் திராவிட முன்னேற்றக் கழகம். மதித்துப் போற்றிய ஆட்சிதான் திமுக ஆட்சி என்பதை இக்கூட்டத்தின் வாயிலாகப் பெருமையோடு சொல்கிறேன்.

சமத்துவம் - மதச்சார்பின்மை - மொழிப்பற்று - பொதுவுடைமை என நாட்டுக்குத் தேவையான அடையாளங்களை இந்தியத் துணைக்கண்டத்துக்கே உணர்த்தும் ஒற்றைச்சொல்தான் கன்னியாகுமரி.

*சமத்துவத்தைப் போதிக்கும் - மனிதத்தைப் போற்றும் - திருக்குறளை உலகத்துக்குக் கொடையாக வழங்கிய திருவள்ளுவருக்கு இந்தியத் துணைக்கண்டத்தின் துவக்கமான குமரிக் கடல் முனையில் விண்ணைமுட்டும் வண்ணம் 133 அடியில் அழகிய கலைநயத்துடன் கம்பீரமாக வடக்குநோக்கிச் சிலைவைத்து இந்தியத் துணைக்கண்டத்தைத் தெற்குநோக்கித் திரும்பிப் பார்க்கவைத்தவர்தான் முத்தமிழறிஞர் கலைஞர். வானுயர நிற்கும் அய்யன் திருவள்ளுவரின் சிலை தமிழ் மண்ணில் இருந்து சமத்துவக் கருத்துகளை உலகுக்கு உரக்கச் சொல்கிறது. தமிழர்களின் பெருமையையும் தொன்மையையும் எட்டுத் திக்கும் எடுத்துச் செல்கிறது. அன்னைத் தமிழ் மொழியின் சிறப்பை அடையாளப்படுத்துகிறது. சமத்துவத்தைப் போதித்த வள்ளுவருக்கு ஆதிக்கச் சக்திகள் கறைபூச நினைத்தாலும் அவர்களைத் தன் கருத்துகளால் அம்பலப்படுத்தித் தமிழ்நாட்டின் அரணாய் உயர்ந்து விளங்குகிறார், 'பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்' என்றார் அய்யன் வள்ளுவர்.

மதச்சார்பற்ற இந்தியாவின் மாபெரும் தலைவரான பெருந்தலைவர் காமராஜரின் தொண்டினைப் போற்றி, அவரது புகழை உயர்த்திப் பிடித்துக் கொண்டாடியதும் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள்தான்.

கடலோரத்தில் கட்டடம் கட்டத் தடை இருந்த காரணத்தால் அன்றைய ஒன்றிய அரசுடன் போராடிப் பெருந்தலைவர் காமராசருக்கு மணிமண்டபம் அமைத்தவர் தலைவர் கலைஞர் அவர்கள்.

குமரித் தந்தை மார்ஷல் நேசமணியைப் போற்றும் வகையில் நாகர்கோயில் வேப்பமூடு சந்திப்பில் மார்ஷல் நேசமணிக்கு மணிமண்டபம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.

பொதுவுடைமை வீரர் தோழர் ஜீவானந்தம் அவர்களுக்கு நாகர்கோயிலில் மணிமண்டபம் அமைக்கப்பட்டது.

இவை மட்டுமா, இன்னும் எத்தனையோ சாதனைகளை இந்தக் குமரி மாவட்டத்துக்காகச் செய்து தந்துள்ளோம். அவற்றில் சிலவற்றை மட்டும் சொல்ல வேண்டுமானால்...

* குளச்சல், தேங்காய்ப்பட்டணம் பகுதிகளில் அரசு சார்பில் மீன்பிடி துறைமுகங்கள் 2009 -ஆம் ஆண்டு தொடங்கி வைக்கப்பட்டது. அப்போது துணை முதலமைச்சராக இருந்த நானே இதனை அடிக்கல் நாட்டித் தொடங்கி வைத்தேன்.

Cm Stalin Criticize to admk and bjp iin his Election Campaign

*ஆரால்வாய்மொழிப் பகுதியில் பொய்கை அணைத் திட்டம் உருவாக்கப்பட்டது.

* மாம்பழத்துறையாறு அணையும் கழக ஆட்சியில்தான் அமைக்கப்பட்டது. அதையும் துணை முதலமைச்சராக இருந்தபோது நான் வந்து திறந்து வைத்தேன்.

* புத்தேரி மேம்பாலம் அமைத்தோம்.

* ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் புற்றுநோய் மையம் அமைத்துத் தந்தோம்.

* 1989-ஆம் ஆண்டு பத்மநாபபுரம் கூட்டுக் குடிநீர்த் திட்டம் உருவாக்கப்பட்டு இன்று வரை சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது.

* தச்சமலை, பிராமலை, தோட்டமலை, முடவன்பொற்றை உள்ளிட்ட 50 -க்கும் மேற்பட்ட மலையோரக் கிராமங்களுக்கு சுமார் 750 புதிய மின் கம்பங்கள் நட்டு மின்சார வசதி செய்து கொடுக்கப்பட்டது.

இப்படி பல்வேறு நலத்திட்டப்பணிகளை குமரி மாவட்டத்தில் செய்து கொடுத்த ஆட்சிதான் திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி.

இப்போது கழக ஆட்சி அமைந்ததும் - இந்தக் குறுகிய காலத்தில்,

* 21 ஆண்டுகளாகத் திறக்கப்படாத பொய்கை அணை, வேளாண் பாசனத்துக்காகத் திறந்து விடப்பட்டுள்ளது.

* திருவள்ளுவர் சிலை - விவேகானந்தர் பாறை இணைப்புக் கடல்சார் பாலம் அமைக்க 37 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

*பகவதி அம்மன் கோவில் நவராத்திரி விழா நடத்திட அனுமதி அளிக்கப்பட்டது. 85 லட்சம் ரூபாய் மதிப்பில் கோவில் திருப்பணிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

* திக்குறிச்சி மகாதேவர் கோவில் சுற்றுச்சுவர் மற்றும் படித்துறை பராமரிப்புப் பணிகள் 75 லட்ச ரூபாய் செலவில் செய்யப்பட உள்ளது.

* குலசேகரம் - அருமநல்லூர் - நாகர்கோவில் இடையே புதிய பேருந்து வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

* ஏழுதேசம், கொல்லங்கோடு ஆகிய இரண்டு பேரூராட்சிகளையும் சேர்த்து நகராட்சியாக ஆக்கப்பட்டுள்ளது.

* கீழ்வண்ணான்விளையில் அங்கன்வாடிக் கட்டடம் -

* வல்லக்குமாரன்விளை தொடக்கப்பள்ளிக்குப் புதிய கட்டடம்-

* இளங்கடை- ப்ரியா நகரில் புதிய சாலைகள் -

* மீனாட்சிபுரம் அரசு உயர்நிலைப்பள்ளிக்குப் புதிய கட்டடம் -

* கொட்டில்பாடு பகுதிக்கு புதிய சாலைகள் -

* ஏ.வி.எம் கால்வாய் தூர்வாருதல் -

* தக்கலை முஸ்லீம் நடுநிலைப்பள்ளிக்கு நிதி -

* புலியூர்க்குறிச்சி அங்கன்வாடி மையத்துக்கு அடிக்கல் -

* அதிமுக ஆட்சியில் இயக்கப்படாமல் இருந்த தென் தாமரைக்குளம் முதல் நாகர்கோவில் வரையிலான பேருந்து இயக்கப்பட்டது.

இப்படி, பல்வேறு பணிகளை இந்தக் குமரி மாவட்டத்துக்குச் செய்தோம் - செய்து வருகிறோம்.

மழை - வெள்ளம் காரணமாக, குமரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகள் பெரும்பாதிப்பை அடைந்திருந்த நிலையில், கடந்த ஆண்டு நவம்பர் 15 அன்று உடனடியாக நான் நேரில் வந்து பாதிப்புகளை ஆய்வுசெய்தேன். வடகிழக்குப் பருவ மழையினால் ஏற்பட்ட பாதிப்பிலிருந்து மீளவும், சேதமடைந்த உள்கட்டமைப்புகளை புனரமைக்கவும் விரைவில் நிதி வழங்கிடக் கோரி மாண்புமிகு பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்கு நான் கடிதம் எழுதினேன். ஆனால் இதுவரை நாம் கேட்ட நிவாரண நிதி வரவில்லை. எப்போது முழுவதுமாக வழங்குவார்கள் என்பதும் தெரியவில்லை! மழை வெள்ள நிவாரண நிதி மட்டுமல்ல - நாம் கேட்ட எந்தப் பேரிடர் நிவாரண நிதியையும் இதுவரை முழுதாகத் தரவில்லை. பிரதமருக்குக் கடிதம் எழுதியாயிற்று. ஒன்றிய அமைச்சர்களை நேரில் பார்த்து - மக்களுக்கு ஏற்பட்டிருக்கும் பாதிப்பைச் சொல்லியாகி விட்டது. நாடாளுமன்றத்திலும் நமது உறுப்பினர்கள் முறையிட்டாகிவிட்டது. ஆனால், இப்போதுகூட பட்ஜெட் தாக்கல் செய்த ஒன்றிய பாஜக அரசு - நமது மக்கள்நலத் திட்டங்கள் எதற்கும் நிதி ஒதுக்கவில்லை. தமிழ்நாட்டுக்கான இரயில்வே திட்டங்களையும் புறக்கணித்திருக்கிறார்கள். திருக்குறளைச் சொல்லித் தமிழர்களை ஏமாற்றிவிடலாம் என்று நினைக்கும் மாண்புமிகு பிரதமர் மோடி அவர்கள் திருவள்ளுவர் வாழ்ந்த தமிழ்நாட்டை முற்றிலும் புறக்கணிக்கிறார். திருக்குறளை நாங்கள் எப்போதோ உலகம் முழுக்கக் கொண்டு சேர்த்துவிட்டோம். இந்தத் தேசத்துக்காகப் போராடிய தலைவர்களுக்கு நாங்கள் விழா எடுத்துக் கொண்டாடுகிறோம். அதைப்பற்றி யாரும் கவலைப்படுவது போல நடிக்க வேண்டாம். நீங்கள் உண்மையிலேயே கவலைப்பட வேண்டியதெல்லாம் - மக்களையும் நாட்டையும் இந்த நிலைமைக்குக் கொண்டு வந்துவிட்டோமே என்றுதான் கவலைப்பட வேண்டும்.

ஜி.எஸ்.டி. நிலுவைத் தொகை எங்கே? பேரிடர் நிவாரண நிதி எங்கே? தமிழ்நாட்டுக்கான திட்டங்கள் எங்கே? தமிழ்மொழிக்குரிய முக்கியத்துவம் எங்கே? இதற்கெல்லாம் உங்களிடம் இருந்து பதில் வராது.

ஆனால் 'வணக்கம்' என்ற ஒரே சொல்லால் தமிழ்நாட்டு மக்களை ஏமாற்றிவிடலாம் என்று நினைக்கிறீர்கள். தமிழ்நாட்டு மக்கள் ஏமாறவும் மாட்டார்கள்; ஏமாற்றவும் முடியாது.

இதையெல்லாம் இந்த உள்ளாட்சித் தேர்தல் பரப்புரையில் ஏன் சொல்கிறேன் என்றால் - உரத்துக்கான மானியத்தைக் குறைத்துவிட்டீர்கள். உணவுக்கான மானியத்தைக் குறைத்துவிட்டீர்கள். ஏழை - எளியவர்கள் கையில் ஒரு பைசா கூட இருக்கக் கூடாது என்கிற எண்ணத்துடன் மகாத்மா காந்தி பெயரில் அமைந்த 100 நாள் வேலைவாய்ப்பு உறுதியளிப்புத் திட்டத்துக்கான நிதியை அடியோடு குறைத்துவிட்டீர்கள்.

அதனால்தான் இதையெல்லாம் சொல்லவேண்டி உள்ளது. ஒன்றிய அரசு தமிழ்நாட்டை எப்படியெல்லாம் வஞ்சிக்கிறது என்பதற்கு சமீபத்திய மழை வெள்ளப் பாதிப்புகளே சாட்சியாக இருக்கிறது.

வரலாறு காணாத மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தமிழ்நாட்டைப் பார்வையிட 21.11.2021 அன்று ஒன்றியக்குழு வந்தது. மாநிலம் முழுதும் சுற்றிப் பார்த்தார்கள். என்னையும் அவர்கள் கோட்டையில் வந்து சந்தித்தார்கள்

தமிழ்நாட்டில் கனமழை வெள்ளப் பாதிப்புகளைச் சீரமைக்கத் தற்காலிகமாகச் சீரமைப்புப் பணிகளுக்கு 1,510 கோடி ருபாயும் நிரந்தரச் சீரமப்புப் பணிகளுக்காக 4,719 கோடி ரூபாயும் என மொத்தம் 6,230 கோடி ருபாய் தேவை என்று மூன்று விரிவான அறிக்கைகளை அனுப்பி ஒன்றிய அரசை நாம் கேட்டுக் கொண்டோம். எந்த நடவடிக்கையும் இல்லாததால், டிசம்பர் 29 அன்று, பிரதமருக்கும் கடிதம் எழுதினேன். தேவையான நிதியை விடுவிக்க உள்துறை அமைச்சகத்தை அறிவுறுத்த வலியுறுத்தினேன்.

இன்று பிப்ரவரி 11-ஆம் தேதி ஆகிவிட்டது. இதுவரை நிதி எதுவும் ஒன்றிய அரசிடம் இருந்து வரவில்லை. ஏற்கனவே கொரோனா காலம் என்பதால் நிதி நெருக்கடி அதிகமாக உள்ளது. வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டிய அவசியம் மாநில அரசுக்கு இருக்கிறது. இந்தச் சூழலில் மழை-வெள்ள பாதிப்புகளுக்கான நிவாரண நிதியைத் தர ஒன்றிய அரசு தாமதிப்பது என்ன நியாயம்?

ஏற்கனவே சரக்கு மற்றும் சேவை வரியான ஜி.எஸ்.டி., என்று சொல்லி முழுக்க முழுக்க நமது நிதி ஆதாரங்கள் ஒன்றிய அரசிடம் போய்விடுகிறது. மாநில அரசுக்கு வர வேண்டிய வருவாய், ஒன்றிய அரசின் கைக்குப் போய்விடுகிறது.

இப்போது, லேட்டஸ்டாக, பத்திரப் பதிவு வருவாயையும் மாநிலங்களுக்குக் கிடைக்காமல் செய்ய ஒரே நாடு - ஒரே பத்திரப்பதிவு என்ற திட்டத்தைக் கொண்டு வர இருக்கிறார்கள். மாநில அரசிடம் இவர்கள் விட்டுவைத்திருக்கும் வருவாய்களில் பத்திரப்பதிவு வருவாய் முக்கியமானது ஆகும்.

அதிலும் கைவைக்கிறார்கள் என்றால் - மாநில அரசுகளின் நிதி உரிமையை முழுக்க முழுக்க இவர்களே விழுங்கி ஏப்பம்விடப் பார்க்கிறார்களா? பறிக்கப் பார்க்கிறார்களா? பிறகு, மாநிலங்கள் தங்கள் அரசுகளை எப்படி நடத்துவது? மாநிலங்கள் தங்கள் மக்களை எப்படிப் பாதுகாப்பது?

மாநிலங்களோட உரிமைகளைப் பறிக்க நினைப்பது மூலமாக - எதைச் சாதிக்க நினைக்கிறீர்கள்? மாநிலங்கள்தானே - இந்த நாடு எனும் அழகிய மாளிகையைத் தாங்கி நிற்கும் தூண்கள்! அதைத்தானே மரியாதைக்குரிய ராகுல் காந்தி அவர்கள், நாடாளுமன்றத்தில் 'Union of States'-என்று சொன்னார்! அரசியலமைப்புச் சட்டத்தில் இருப்பதைத்தானே அவர் சொன்னார். அது ஏன் மாண்புமிகு பிரதமர் மோடிக்கு வேப்பங்காயாகக் கசக்கிறது! நீங்களும் குஜராத் முதலமைச்சராக இருந்துவிட்டுத்தானே - இப்போது மாண்புமிகு பிரதமராக ஆகியிருக்கிறீர்கள்? அப்போது மாநில உரிமைகளைப் பற்றி நீங்களும் பேசினீர்களே!?- இப்போது மறந்துவிட்டீர்களா!

தமிழ்நாட்டு மக்களின் நலனை மனதில் வைத்து - தமிழ்நாட்டின் மருத்துவக் கட்டமைப்பை காப்பாற்ற ஏழை எளிய கிராமப்புற மாணவர்களின் மருத்துவக் கல்விக் கனவைக் காப்பாற்ற - நீட் விலக்கு மசோதவை மாநிலச் சட்டமன்றம் ஒருமனதாக நிறைவேற்றி அனுப்பினால் - நியமனப் பொறுப்பான ஆளுநரை வைத்துக்கொண்டு- தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகளின் குரலைப் புறந்தள்ளிடலாம் என்று நினைக்கிறீர்களா? உங்கள் கனவு தமிழ்நாட்டில் நிச்சயம் பலிக்காது! மருத்துவக் கல்விக்கான நீட் தேர்வைக் கடுமையாக எதிர்த்து, தமிழ்நாட்டுக்குள் வராமல் தி.மு.க. தடுத்தது. அம்மையார் ஜெயலலிதா முதலமைச்சராக இருந்தபோதும் எதிர்த்தாங்க. இதை நான் சட்டமன்றத்திலேயே பதிவுசெய்திருக்கிறேன். ஆனால், 'பச்சைப் பொய்' பழனிசாமி ஆட்சிப் பொறுப்பில் இருந்தபோது - அவரது கொள்ளை சாம்ராஜ்ஜியத்தைப் பாதுகாத்துக்கத் தமிழ்நாட்டு உரிமைகளை விட்டுக்கொடுத்து - அடிபணிந்து போனார். முதன்முதலில் தமிழ்நாட்டு மாணவர்களை நீட் தேர்வு எழுத வைத்தது பழனிசாமிதான்! அப்படித்தானே நீட் தேர்வு தமிழ்நாட்டுக்குள் நுழைந்தது! தமிழர்களுக்கும் - தமிழ்நாட்டுக்கும் எதிரான எந்தச் செயல்கள் நடந்தாலும் முதலில் எதிர்ப்பது தி.மு.க.தான்.

தமிழர்களின் உணர்வோடு கலந்துவிட்ட பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டுக்கு ஆபத்து வந்தபோது அதற்கான போராட்டத்தை மட்டுமின்றி நீட்டுக்கு எதிரான போராட்டத்தையும் சேர்த்தே நடத்தியதுதான் தி.மு.க. கடந்த தி.மு.க. ஆட்சிக்காலத்தில் தமிழ்நாட்டில் எந்தத் தேர்வு மையத்தில் நீட் நடந்ததென்று ஒரு தேர்வு மையத்தின் பெயரையாவது சொல்வதற்கு திராணி இருக்கிறதாவென்று 'பச்சைப்பொய்' பழனிசாமி - ஓ.பன்னீர்செல்வம் காமெடி நாடகக் கம்பெனியைப் பார்த்து - நேற்று நான் கேட்டேன். அதற்கு முதலில் பதில் சொல்லுங்கள் திருவாளர் 'பச்சைப்பொய்' பழனிசாமி அவர்களே! உங்களால் சொல்ல முடியாது! ஏன் என்றால், முதல் நீட் தேர்வு நடந்ததே உங்க ஆட்சியில்தான! நான் இப்போதும் சொல்கிறேன். நீங்கள் ஒரே ஒரு தேர்வு மையத்தின் பெயரைச் சொல்லுங்கள். பொதுவிவாதத்துக்கு தேதியையும் மேடையையும் நான் சொல்கிறேன். புதிதாகப் பொய்மூட்டை எதையாவது எடுத்துக்கொண்டு வந்து - தமிழ்நாட்டு மக்கள் முன்னால் கொட்டலாம் என்று நினைக்கவேண்டாம். உங்களது பொய்களைக் கேட்டுக் கேட்டு வெறுத்துப்போய்விட்டது என்று மக்கள் சொல்கிறார்கள்!

இலங்கைக் கடற்படையினரால் தமிழ்நாடு மீனவர்கள் தொடர்ந்து கைது செய்யப்படுகிறார்கள். தமிழ்நாடு மீனவர்களுக்குச் சொந்தமான மீன்படிப் படகுகளை ஏலம் விடுவதற்கு இலங்கை அரசு முயற்சி எடுக்கிறது. அதனை உடனடியாகத் தடுக்க வேண்டும் என்று பிரதமர் மோடி அவர்களுக்கும் ஒன்றிய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் அவர்களுக்கும் கடிதங்கள் எழுதி இருக்கிறேன்.

இலங்கைக் கடற்படை தொடர்ந்து தனது அத்துமீறலை நடத்தி வருகிறது. தமிழ்நாட்டு மீனவர்களுக்கு சொந்தமான 205 மீன்பிடி படகுகள் அவர்கள் வசம் உள்ளது. இதனை ஏலம் விடப்போவதாக செய்தி வெளியாகி உள்ளது. இலங்கை அரசின் இந்த நடவடிக்கை சட்டத்திற்குப் புறம்பானது. இதனைத் தடுக்க வேண்டிய கடமை ஒன்றிய பாஜக அரசுக்கு இருக்கிறது. கைது செய்யப்படும் தமிழ்நாட்டு மீனவர்கள் இந்தியக் குடிமக்கள்தானே? இதுபற்றி ஜனவரி மாதம் நான் எழுதிய கடிதத்துக்கு இந்திய வெளியுறவு அமைச்சகம் பதில் அனுப்பி இருந்தது. இந்த விவகாரம் தொடர்பாக இலங்கை அதிகாரிகளிடம் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும், அறிவிக்கப்பட்ட மீன்பிடிப் படகுகள் ஏலத்தை இலங்கைத் தரப்பு தொடராது என்று அவர்கள் உறுதி அளித்திருப்பதாகவும் சொன்னார்கள். ஆனால் அந்த வாக்குறுதியை இலங்கை அரசு மீறுவதை, இந்திய அரசு வெளிப்படையாகவே கண்டிக்க வேண்டும். மீட்க முடியாத நிலையில் உள்ள இந்த மீன்பிடிப் படகுகள் உரிய நீதித் துறை நடைமுறைகளைப் பின்பற்றி, பல்வேறு இலங்கை நீதிமன்றங்களால் விடுவிக்கப்பட்டவைதான். ஆனாலும் அத்துமீறிச் செயல்படுகிறார்கள். 2018-ஆம் ஆண்டுக்கு முன் சிறைப்பிடிக்கப்பட்ட 125 படகுகள் அங்குதான் இருக்கிறது. இவை பழுது பார்க்க இயலாத அளவுக்கு சேதம் அடைந்தவை ஆகும். இதனை என்ன செய்வது என்பது குறித்து நமது அதிகாரிகள் அங்கு சென்று ஆய்வு நடத்த வேண்டும் என்றும் நான் கேட்டுக் கொள்கிறேன்.

இது தமிழ்நாட்டு மீனவர்களின் வாழ்வாதாரம் தொடர்புடைய - அவர்களின் உயிர் தொடர்புடைய மிகமுக்கியமான பிரச்சினை. இதற்கு ஒரு முற்றுப்புள்ளி வைத்தாகவேண்டும். அதனால்தான் கடந்த 7-ஆம் தேதி பிரதமருக்குச் கடிதம் எழுதிய நான் 8-ஆம் தேதியே மீண்டும் ஒரு கடிதம் அனுப்பி இருக்கிறேன். இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்ட 29 தமிழக மீனவர்களையும், அவர்களது 79 படகுகளையும் விடுவிக்கக் கோரிக்கை வைத்துள்ளேன். இலங்கைக் கடற்படையினரால் கடந்த சில வாரங்களுக்குள் அப்பாவி இந்திய மீனவர்கள் மூன்றாவது முறையாக கைது செய்யப்பட்டுள்ளார்கள்.

இப்பிரச்சனைக்கு உரிய தீர்வு கண்டிட, தூதரக அளவில் தீவிர முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். தமிழ்நாட்டு மீனவர்கள் இதுபோன்று இலங்கைக் கடற்படையால் கைது செய்யப்படும் நிகழ்வுகள் தொடர்கதையாவதைத் தடுத்திட இந்திய அரசின் உயர்மட்ட அளவில் உறுதியான மற்றும் ஒருங்கிணைந்த நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டியது மிகவும் அவசியமானதாகும்.

தமிழ்நாட்டு மீனவர்கள் அடிக்கடி துன்புறுத்தப்படுவதும், இதுபோன்று கைது செய்யப்படுவதும், பாக் வளைகுடா பகுதியில் மீன்பிடிக்கும் அவர்களது பாரம்பரிய உரிமையைப் பறிப்பதாகும். இது நமது ஆயிரக்கணக்கான மீனவர்களின் வாழ்வாதாரப் பிரச்சினை. பாரம்பரிய கடல் பகுதியில் மீன் பிடிக்கும் அவர்களின் உரிமைக்கும் இந்தியாவின் வலிமைக்கும் விடப்பட்ட சவால்.

ஏற்கனவே, அங்கே இலங்கைத் தமிழர்கள் வாழ்வுரிமையை இழந்திருக்கிறார்கள். அவர்கள் வாழ்வுரிமைக்காகத்தான் நாம் தொடர்ந்து குரல் கொடுத்துக் கொண்டு இருக்கிறோம். இந்திய மீனவர்களும் இலங்கைக் கடற்படையால் துன்பங்களை அனுபவிப்பதை பார்த்துக் கொண்டு இருக்க முடியாது.

இலங்கையில் இருந்து தமிழ்நாட்டுக்கு வந்த மக்களுக்கு இங்கு நாம் அனைத்து விதமான உதவிகளையும் செய்து வருகிறோம்.

இந்த அரசு பொறுப்பேற்ற பிறகு 317 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து அவர்களுக்குப் புதிய குடியிருப்புகள் கட்டுவதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் செய்து வருகிறது.

இங்குள்ள தமிழர்களுக்கு மட்டுமல்ல - உலகெங்கும் பரவியுள்ள தமிழர்களுக்கும் திராவிட முன்னேற்றக் கழகம்தான் ஒளிவிளக்காக இருக்கிறது.

புலம்பெயர்ந்து வாழும் தமிழர்களுக்காகத் 'தமிழால் இணைவோம்' என்ற முழக்கத்தை முன்னெடுத்துள்ளோம். 80-க்கும் மேற்பட்ட நாடுகளில் தமிழர்கள் வாழ்கிறார்கள். அவர்களது நன்மைக்காகவும், அவர்களையும் தமிழ்நாட்டையும் இணைப்பதற்காகவும் ஏராளமான அறிவிப்புகளைக் கடந்த செப்டம்பர் மாதம் நான் வெளியிட்டேன்.

வெளிநாடுவாழ் தமிழர்நலச் சட்டம் 2011-ஆம் ஆண்டு மார்ச்-1 ஆம் நாள் கழக அரசால் இயற்றப்பட்டுள்ளது. "வெளிநாடுவாழ் தமிழர் நலவாரியம்" ஒன்றை உருவாக்கி அவர்களுக்கு நலத்திட்டங்களைச் செயல்படுத்துவோம் என்று அறிவித்தோம். ஆனால் கடந்த அ.தி.மு.க., ஆட்சியில் தொடர்ந்து இதனை முன்னெடுக்கவில்லை. இப்போது மீண்டும் நாம் ஆட்சிக்கு வந்ததும் 'புலம்பெயர் தமிழர் நல வாரியம்' அமைக்கப்படும் என்று சட்டமன்றத்தில் அறிவித்தேன். இதில் செயல்படுத்தப்படும் பல்வேறு திட்டங்களுக்காக 20 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 12-ஆம் நாள் அயலகத் தமிழர் நாள் ஆகக் கொண்டாடப்படுகிறது. கடந்த ஜனவரி 12 அன்று அதனைக் கொண்டாடினோம். உலகின் பலநாடுகளைச் சேர்ந்த அறிஞர் பெருமக்கள் இதில் கலந்து கொண்டார்கள்.

தமிழர்களின் பழம்பெருமையை - வளத்தை - சிறப்பை மீட்டெடுக்க அனைத்து முயற்சிகளையும் தமிழ்நாடு அரசு செய்து வருகிறது. தமிழ்நாட்டின் அனைத்துப் பகுதிகளையும் உள்ளடக்கி வரலாற்றுக்கு முந்தைய காலம் முதல் வரலாற்றுக்காலம் வரையிலான தொல்லியல் இடங்களில் அகழாய்வு செய்வதற்குத் தமிழ்நாடு அரசு திட்டமிட்டுள்ளது.

* சிவகங்கை மாவட்டத்தில் கீழடி

* தூத்துக்குடி மாவட்டத்தில் சிவகளை

* அரியலூர் மாவட்டத்தில் கங்கைகொண்ட சோழபுரம்

* கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மயிலாடும்பாறை

* விருதுநகர் மாவட்டத்தில் வெம்பக்கோட்டை

* நெல்லை மாவட்டத்தில் துலுக்கர்பட்டி

* தருமபுரி மாவட்டத்தில் பெரும்பாலை ஆகிய ஏழு இடங்களில் ஆய்வுகளை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளோம்.

கீழடி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளான, கொந்தகை - அகரம் - மணலூர் மற்றும் அரியலூர் மாவட்டம் மாளிகைமேடு ஆகிய இரண்டு அகழாய்வுப் பணிகளை, இன்றைக்குக் காலையில் நான் காணொலிக் காட்சி வாயிலாகத் தொடங்கி வைத்தேன்.

இந்தியத் துணைக்கண்டத்தின் வரலாறு தெற்கில் இருந்து தொடங்கி எழுதப்பட வேண்டும். தமிழர்களின் நாகரிகச் சிறப்பை உலகுக்கு அறிவியல்வழி நின்று உணர்த்த வேண்டும். அதற்கான பணிகள்தான் இவை. இதனால்தான், திமுக அரசு என்பது ஒரு கட்சியின் ஆட்சி மட்டுமல்ல - ஓர் இனத்தின் ஆட்சி என்று குறிப்பிடுகிறேன்.

கீழடிக்கு முட்டுக்கட்டை போட்டபோதே - தமிழுக்கு எதிரானவர்களின் முகமூடி கிழிந்துவிட்டது. இந்தியையும் சமஸ்கிருதத்தையும் உயர்த்திப் பிடித்துவிட்டு, தமிழ் மக்களைத் தமிழில் பேசி ஏமாற்றிவிடலாம் என்று சிலர் நினைக்கிறார்கள். நீங்க எப்போது எப்படி டிசைன் டிசைனாக நடிப்பீர்கள் என்று வரலாற்றில் நன்றாகவே பதிவாகியிருக்கிறது. அது எங்கள் தமிழ்நாட்டு மக்களுக்கு நன்றாகவே தெரியும். சென்ற நாடாளுமன்றத் தேர்தலில் கன்னியாகுமரி கொடுத்த பதில் - காஷ்மீர் வரைக்கும் எதிரொலிக்கும் நாள் வெகு தொலைவில் இல்லை.

அடிமைகள் முதுகில் ஏறி சவாரி செய்தாலும் - கூச்சமே படாமல் புதுப்புது நாடகங்களை நடத்தினாலும் - என்ன வேடம் போட்டாலும் - நமது கூட்டணியை மக்கள் புறக்கணிக்கிறார்களே என்று - பிரிந்திருப்பது போல இப்பபோது நடித்தாலும் - தமிழ்நாட்டின் நலனுக்கும் - எதிர்காலத்துக்கும் எதிரானவர்கள்தான், அ.தி.மு.க.வும் - பா.ஜ.க.வும் என்று - மக்கள் மிகத் தெளிவாக உணர்ந்திருக்கிறார்கள்.

தமிழை வளப்படுத்துவதாக இருந்தாலும் - தமிழர்களைக் காப்பதாக இருந்தாலும் - தமிழ்நாட்டை மேம்படுத்துவதாக இருந்தாலும் - அனைத்திலும் 100-க்கு 100 தன்னை முழுமையாக ஒப்படைத்துக் கொண்ட இயக்கம், திராவிட முன்னேற்றக் கழகம்தான்!

இது தமிழ்நாட்டு மக்கள் எல்லோருக்கும் நன்றாகத் தெரியும்.

எனவே, சமத்துவம் - மதச்சார்பின்மை - மொழியுணர்வு - பொதுவுடைமை ஆகியவை சங்கமித்துள்ள குமரி மக்களிடம், 'உள்ளாட்சியிலும் மலரட்டும் நம்ம ஆட்சி' என்று ஆதரவு கேட்கிறேன்.

திராவிட முன்னேற்றக் கழகத்துக்கும் - இந்த ஆட்சிக்கும் உங்களது ஆதரவை நீங்கள் அளிக்கும் வாக்குகளின் மூலமாகக் காட்டுங்கள்; நமது கழக வேட்பாளர்களுக்குப் பேரறிஞர் பெருந்தகை கண்ட வெற்றிச் சின்னமாம் உதயசூரியனிலும் - மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக்கட்சி வேட்பாளர்களுக்கு அவரவர் சின்னத்திலும் வாக்குகளை வழங்கி மிகப் பெரிய வெற்றியைத் தாரீர் தாரீர் என்று உரிமையோடு கேட்டு,

மேலிருந்தும் மேலல்லார் மேலல்லர் கீழிருந்தும்

கீழல்லார் கீழல் லவர்

என்கிற திருக்குறளைச் சொல்லி விடைபெறுகிறேன். நன்றி வணக்கம்!

இவ்வாறு அவர் உரையாற்றினார்.

English summary
Cm Stalin Criticize to admk and bjp iin his Election Campaign
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X