கறுப்பும் காவியும் - வெற்றிடம் (1)

Posted By:
Subscribe to Oneindia Tamil

-சுப. வீரபாண்டியன்

ஒரு நூற்றாண்டுக்கு முன்பு, தமிழ் நாட்டின் சமூக அரசியல் தளத்தில் ஒரு வெற்றிடம் இருந்தது.

காலில் கிடக்கவேண்டிய செருப்பைக் கையில் எடுத்துக்கொண்டு, கூனிக் குறுகி மனிதர்கள் நடந்த காலம் அது. எழுபது வயதுப் பெரியவரை 'ஏன்டா முனியா' என்று ஏழு வயது சேஷாசலம் அழைத்தால், அது கண்டு கோபம் கொள்ளாத காலம் அது. மாடுகளை மேய்த்துக்கொண்டு நம் நாட்டிற்குள் வந்தவர்கள், நம்மைப் பார்த்து, "அபிஷ்டு, நோக்கெல்லாம் படிப்பு வராது, நீ எல்லாம் மாடு மேய்க்கத்தான் லாயக்கு" என்று கரித்துக் கொட்டிய காலம் அது. "பொம்பளைக்கு செருப்பு ஒரு கேடா?' என்றும், "பாருங்கோ, அந்த பொம்மனாட்டி ஆம்படையானோட ஒட்டி ஒரசி நடந்து போயிண்டிருக்கா!" என்று ஒரு பெண் தன்கணவனோடு நடந்து போவதைப் பார்த்து அவதூறு பேசியும் திரிந்த காலம் அது!

keywords and tags will be common for the entire series

இன்றைய தலைமுறையினருக்கு இவையெல்லாம் கற்பனை போலவும், மிகை போலவும் தோன்றலாம். ஒரு சொல் கூட மிகையில்லை. நடந்தவைகள் சற்றுக் குறைவாகத்தான் இங்கு கூறப்பட்டுள்ளன. சாணிப்பால், சவுக்கடி வரை நீண்டு போகிறது இந்த அடிமை வரலாறு.

50,60 ஆண்டுகளுக்கு முன்பும் கூட இந்த நிலைமைகள் பெரிதாக மாறிவிடவில்லை. "திருப்பதியில் ஒரு ஆதித் திராவிடன் சாமி கும்பிட்டதற்காக, அவனை அடித்துத் துன்புறுத்தியுள்ளனர்" என்னும் செய்தி, 21.01.1938 ஆம் நாளிட்ட தினமணியில் வெளியாகியுள்ளது.

"கனம் முனிசாமி பிள்ளை, மதுரை, கள்ளழகர் கோவிலில் வாசலில் நின்று தரிசனம் செய்ததற்காக, அவர் கோயிலைச் சுத்தம் செய்ய வேண்டுமென்று மதுரை வருணாசிரம சங்கத் தலைவர் நடேச சாஸ்திரியார் கோயில் அதிகாரிகளுக்கு நோட்டீஸ் கொடுத்திருக்கிறார் என்னும் செய்தி 26.01.1930 ஆம் நாளிட்ட ஆங்கில நாளேடு இந்துவில் வெளியாகியுள்ளது. 'கனம் முனிசாமிப் பிள்ளை'யின் நிலையே இதுவெனில், கனமில்லாத ஆதி திராவிடர்களின் நிலை என்னவாக இருந்திருக்கும்?

அண்மையில், திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டை வட்டம் குமாரலிங்கம் கிராமத்தில், ஒரு பொதுக்கூட்டத்தில் பேசினேன். உடுமலைப் பேருந்து நிலையத்தில், பட்டப்பகலில் படுகொலை செய்யப்பட்ட சங்கரின் (கவுசல்யா) ஊர் அது. பல ஆண்டுகளுக்கு முன்பு, அந்த ஊரில் அக்கிரஹாரத் தெருவில் ஓர் அரசு அஞ்சல் நிலையம் இருந்துள்ளது. அந்தத் தெருவுக்குள் அஞ்சல் நிலையம் இருந்ததால், அதற்குள் ஆதி திராவிடர்கள் யாரும் உள்ளே நுழையவே முடியாது. தெருமுனையில் நின்று, அஞ்சல் ஊழியர் வரும்போது, அஞ்சல் தலை வேண்டும் என்று கேட்டால், அடுத்த நாள் அதே நேரம் அதே இடத்திற்கு வந்து அவரிடம் அதனைப்- பெற்றுக் கொள்ளலாம்.

"இது என்ன நியாயம், எல்லோருடைய வரிப்பணத்திலும்தானே அரசும், அஞ்சல் நிலையமும் நடக்கிறது?" என்று 1924 செப்டம்பர் மாதம், சட்டமன்றத்தில் வீரையன் என்று ஒருவர் கேள்வி கேட்டுள்ளார். நீதிக் கட்சி ஆட்சி நடந்ததால்தான் கேள்வியாவது கேட்க முடிந்துள்ளது. இறுதியில் அஞ்சல் நிலையத்தை வேறு தெருவிற்கு மாற்றியுள்ளனர். அதனையும் பின்னாளில், பெரியார் ஏற்கவில்லை. 7.3.1926 தலையங்கத்தில் இந்நிகழ்வைக் குறிப்பிட்டு, "இதென்னடா, சாத்தூருக்கு வழி கேட்டால், சாராயம் கிராம் அஞ்சனா என்பதுபோல் நடந்திருக்கிறதே!" என்கிறார். பொதுச் சாலையில் எல்லோரும் நடக்க உரிமை வேண்டும் என்பதுதான் முதலில், அஞ்சல் தலை வாங்குவது பிறகு.

கடிதம் எழுதாமல் வாழ்ந்து விடலாம். ஆனால் உரிமை இல்லாமல் வாழமுடியாது, வாழக் கூடாது. இதனை எடுத்துச் சொல்ல அன்று ஆள் இல்லை. சமூக அரசியலில் ஒரு வெற்றிடம் இருந்தது.

பெண்களுக்குக் குழந்தைப் பருவத்திலேயே திருமணங்கள் செய்து வைக்கப்பட்டன. இதனால் ஐந்து வயதுக்கு உட்பட்ட "விதவைகள்" சமூகத்தில் நிரம்பி வழிந்தனர். இதனைத் தடுக்க, ஆங்கிலேய அரசு ஒரு சட்ட முன்வடிவைத் .தந்தது. 1924 இல் அதனை ஒரு குற்றவியல் சட்டத் திருத்தமாக முன்மொழிந்தது. பிறகு 1927செப் 15 இல் சட்டமன்றத்தில் அது சட்ட முன்வடிவமாக வந்தது. ஹேபிலால் சார்டா முன்மொழிய மருத்துவர் முத்துலட்சுமி போன்றோர் ஆதரித்தனர். எம்.ஆர்.ஜெயகர், மதன் மோகன் மாளவியா ஆகியோர் கடுமையாக எதிர்த்தனர். இஸ்லாமிய அமைப்புகளும் எதிர்த்தன. இது ஓர் அத்துமீறல் என்று 'தருல் இஸ்லாம்' குறிப்பிட்டது. இவ்வாறு ஓரிருவர் கூட ஆதரிப்பதற்கு இல்லாத நிலைதான் 1915க்கு முன்பு வரையில் இருந்தது.

பால்ய விவாகம், சதி என்னும் உடன்கட்டை ஏற்றுதல், தேவதாசி முறை என்று பல்வேறு சமூக மரபுகள் பெண்களை அடிமைப்படுத்திக் கொண்டிருந்தன. பெண்ணடிமைத்தனத்தை எதிர்க்க அன்று இயக்கங்கள் இல்லை.

ஆம், பல்வேறு நிலைகளில், பல்வேறு தளங்களில், தமிழ்நாட்டின் சமூக அரசியலில் அன்று ஒரு வெற்றிடம் இருக்கவே செய்தது.

ஆனாலும் வெற்றிடத்தைக் காற்று நிரப்பும் என்பதுதானே விதி. நிரப்புவதற்கு ஒரு காற்று வந்தது. அந்தக் காற்றின் நிறம் கறுப்பாக இருந்தது!

வெற்றிடம்[1, 2, 3]

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Professor Suba vee's new series Karuppum Kaaviyum in Oneindia Tamil.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற