கறுப்பும் காவியும் - வெற்றிடம் (2)

Posted By:
Subscribe to Oneindia Tamil

-சுப. வீரபாண்டியன்

கறுப்பாய் வீசிய காற்றின் பெயர் திராவிட இயக்கம். அதற்கு எதிர்க்காற்றும் வீசத் தொடங்கியது. அதன் நிறம் காவியாய் இருந்தது.

இன்றைய சமூக அமைப்பு மாற வேண்டும் என்பது கறுப்பின் கொள்கை. இந்த அமைப்பை மாற்றவே கூடாது என்பது காவியின் பிடிவாதம். இடதுசாரி, வலதுசாரிக் கொள்கைகளின் பிறப்பிடம் இது என்று கூறலாம். ஆம், நாடாளுமன்றத்தில் ஆளும்கட்சி வலப்புறம் அமர்ந்திருக்கும். எதிர்க்கட்சிகள் இடப்புறம் அமர்ந்திருப்பர். இந்த ஆட்சியோ, இந்த அமைப்போ தொடர வேண்டும் என்பது வலதுசாரிக் கொள்கை. ஆட்சியும் அமைப்பும் மாற வேண்டும் என்பது இடதுசாரிக் கொள்கை.

Subavees new series Karuppum Kaaviyum Part-2

இப்போது நாங்கள் இடதும் இல்லை, வலதும் இல்லை, நடுநிலை என்று பேசும் கட்சிகள் தமிழ்நாட்டில் தோன்றியுள்ளன. இந்தக் கொள்கை, இந்த சித்தாந்தம் இவற்றிற்காகத்தான் எங்கள் கட்சி தொடங்கப்பட்டுள்ளது என்று தெளிவாகச் சொல்கிறவர்கள் இல்லை. பொத்தாம் பொதுவில் நாங்கள் எல்லோருக்கும் நல்லது செய்ய வந்திருக்கிறோம், ஊழலற்ற ஆட்சி தருவோம் என்கின்றனர்.

இன்னொரு கட்சித் தலைவர் (இன்னும் கட்சி தொடங்கவே இல்லை) 'சிஸ்டம் கெட்டுவிட்டது, அதை நான் சரி செய்ய வந்திருக்கிறேன்' என்று மேலும் பரந்துபட்ட, கூர்மையற்ற பொதுவெளியில் நின்று பேசுகின்றார். சுருக்கமாகச் சொன்னால், சித்தாந்தமற்ற அரசியல் ஒன்று உருவாக்கப்படுவதற்கான அனைத்து முயற்சிகளும் இங்கே நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.

ஐம்பது ஆண்டுகளுக்கு முன் தமிழ்நாட்டில் மூன்றுவிதமான அரசியல் கட்சிகளும், அவற்றின் சித்தாந்தங்களும் செல்வாக்குப் பெற்றிருந்தன. ஒன்று, இந்திய தேசியம் பேசிய காங்கிரஸ் இயக்கம், இரண்டாவது, திராவிடம் என்னும் பெயரில் சமூக நீதித் தமிழ்த்தேசியம் பேசிய திராவிட இயக்கம், மூன்றாவது சர்வதேசியம் பேசிய பொதுவுடைமை இயக்கம். இவை தவிர, இந்தியாவின் வடக்கு, மேற்குப் பகுதிகளில் (இந்து) மதவழித் தேசியம் பேசிய ஆர்.எஸ்.எஸ். இயக்கம்.

மேற்காணும் இயக்கங்களின் தோற்றம், அவற்றின் கோட்பாடுகள், இன்றைய அவ்வியக்கங்களின் நிலை குறித்ததெல்லாம் நாம் அறிந்து கொள்ள வேண்டும். அதற்கு முன்பு, ஓர் இயக்கம் அல்லது கட்சிக்குச் சித்தாந்த நிலைப்பாட்டின் தேவை எவ்வளவு முதன்மையானது என்பதை முதலில் எண்ணிப் பார்க்கலாம்.

நெடு நாள்களுக்கு முன், தோழர் இளவேனிலின், "நீங்கள் எந்தப் பக்கம்?" என்னும் கட்டுரை ஒன்றைப் படித்திருக்கிறேன். சிலி நாட்டின் அதிபராக இருந்த அலெண்டே, பொது வாழ்விற்கு வருவோரைப் பார்த்துக் கேட்ட கேள்வி அது. நீங்கள் எந்தப் பக்கமாக வேண்டுமானாலும் நிற்கலாம். ஆனால் அது எந்தப் பக்கம் என்பதை வெளிப்படையாகச் சொல்லியாக வேண்டும். அதுதான் நேர்மையான அரசியல்!

மக்களுக்கு நன்மை செய்ய வருவோர் எந்தப் பக்கமாக இருந்தால் என்ன? இதில் வலது, இடது என்ற பிரிவெல்லாம் எதற்கு? - இப்படி கேள்வி கேட்போர் இன்று பெருகி வருவதைக் காண்கின்றோம். எதிர்காலத்தில் நம்மைச் சூழப்போகும் ஆபத்தின் அறிகுறி இது.

அரசின் திட்டங்களை நாம் இரண்டாகப் பகுத்துப் பார்க்கலாம். ஒன்று, மக்கள் நலத் திட்டங்கள். இன்னொன்று, கொள்கைசார் திட்டங்கள்.

மாக்கள் நலத் திட்டங்களை நிறைவேற்றுவோம் என்று சொல்லித்தான் எல்லாக் கட்சிகளும் ஆட்சிக்கு வருகின்றன. நிறைவேற்றுவார்கள் என்ற நம்பிக்கையில்தான் மக்களும் வாக்களிக்கின்றனர். ஆனால் எது மக்களுக்கு நன்மை தரும் என்பதை ஒவ்வொரு கட்சியும் எப்படி முடிவு செய்கிறது? அந்தந்தக் கட்சியின் கொள்கையைப் பொறுத்தே நன்மை, தீமைகள் முடிவாகின்றன.

எடுத்துக்காட்டாக, இலவசத் திட்டங்கள் மக்களுக்கு நன்மை செய்வதாகக் கருதுவதா, அரசு பணத்தை வீணடித்து, மக்களைச் சோம்பேறிகள் ஆக்குவதாகக் கருதுவதா? ராம ராஜ்ஜியம் மக்களுக்கு நன்மை தரும் என்று கருதும் கட்சி இங்கு உண்டு. பகுத்தறிவுச் சிந்தனை கொண்ட ஆட்சியே மக்களுக்கு நன்மை தரும் என்று கருதுகின்ற கட்சியும் இங்கு உண்டு.

மக்கள் நலம் என்று பொதுவாகச் சொல்லப்பட்டாலும், அவரவர் கொள்கை சார்ந்தே பல முடிவுகள் இங்கு எடுக்கப்படுகின்றன. நீட் தேர்வு மக்களுக்கு நன்மை என்று தான் கருதுவதாக மத்திய அரசு கூறுகின்றது. அது சமூக நீதிக்கும்,மாநில சுயாட்சிக்கும் எதிரானது என்று தமிழகச் சட்டமன்றம் ஒரு மனதாக முடிவெடுக்கிறது.

இந்தி மட்டுமே இந்தியாவின் ஆட்சிமொழி என்னும் ஒரு மொழிக் கொள்கையை முன்வைத்து, அது நிறைவேறும்வரை, மும்மொழிக்கொள்கையை மத்திய அரசு முன் மொழிகிறது. ஆனால் தமிழகமோ, தமிழ், ஆங்கிலம் என்னும் இருமொழிக் கொள்கையே மக்களுக்கு நல்லது என்று கருதி, 1968 முதல் தமிழ்நாட்டில் இருமொழிக் கொள்கையை நடைமுறைப்படுத்தி வருகின்றது. இடஒதுக்கீடு என்று வரும்போதும் இந்தச் சிக்கல் எழவே செய்யும்.

இப்படி, நன்மை தீமைகளை முடிவு செய்வதற்கு, அரசின் கொள்கையே முன் நிபந்தனையாக உள்ளது. அரசின் கல்விக் கொள்கை, மொழிக் கொள்கை, பொருளாதாரக் கொள்கை, அயல்நாட்டுக் கொள்கை அனைத்தும், ஆளும் கட்சியின் கொள்கை அடிப்படையில்தான் நாடாளுமன்றத்திலும், சட்டமன்றத்திலும் முன்மொழியப்படுகின்றன.

அப்படியானால், மொழி சார்ந்து, இடஒதுக்கீடு சார்ந்து, வேளாண்மை சார்ந்து, மதச் சார்பின்மை சார்ந்து, இவை போன்று வேறு பிற கருத்துகள் சார்ந்து, தங்கள் கொள்கை என்று எதனையும் அறிவிக்காமல், தாங்கள் நடுநிலை என்பதும், நல்லாட்சி தருவோம் என்பதும் வெற்றுச் சொற்கள் அல்லவா?

வெற்றுச்சொற்கள் விலை போகலாமா? அரங்கின்றி யாரும் வட்டாடலாமா? முகவரி இன்றி மடல் அனுப்பலாமா? கூடாது எனில், கொள்கையின்றி அரசியல் நடத்த முயற்சிக்கவும் கூடாது!

(தொடரும்)

வெற்றிடம்[1, 2, 3]

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Professor Subavee's new series Karuppum Kaaviyum in Oneindia Tamil.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற