கறுப்பும் காவியும்- மண்டைக்காடு (3)

Posted By:
Subscribe to Oneindia Tamil

-சுப. வீரபாண்டியன்

நான் முன்பு குறிப்பிட்ட நான்கு இயக்கங்களில், கங்கிராஸ் தவிர, மற்ற மூன்று இயக்கங்களும் 1915-25 காலகட்டத்தில் இங்கு தோன்றியவை. பொதுவுடைமை இயக்கம், வெளிநாட்டில் தோன்றி, இங்கு பரவியது.திராவிட இயக்கம் தமிழகத்திலும், ஆர்.எஸ்.எஸ். இயக்கம் நாக்பூரிலும் தோன்றின. இவ்விரு இயக்கங்களும் நேர் எதிரான கொள்கைகளைக் கொண்டவை. ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தைத் தோற்றுவித்தவர்கள் சித்பவன் பார்ப்பனர்கள். பார்ப்பனர்களின் நன்மையைக் கருத்தில் கொண்டு, இந்துக்களுக்கான இயக்கம் என்னும் பெயரில் அது உருவானது.

திராவிட இயக்கமோ, மறுமுனையில், பார்ப்பனர் அல்லாதோரால் மட்டுமே உருவாக்கப்பட்டது. 1912-13 திராவிடர் சங்கம் என்னும் பெயரிலும், 1916க்குப் பிறகு, தென்னிந்திய நல உரிமைச் சங்கம் (நீதிக்கட்சி) என்னும் பெயரிலும் அதுநடைபெற்றது. அக்கட்சியின் முதல் அறிக்கையே "பார்ப்பனரல்லாதோர் அறிக்கை" (Non-brahmin Manifesto) என்றுதான் பெயரிடப்பட்டது. தமிழர்களின் நன்மையைக் கருத்தில் கொண்டு, திராவிடர்களுக்கான இயக்கம் என்னும் புரிதலோடு, இவ்வியக்கம் உருவானது.

Prof Subavee new series karuppum kaviyum part 3

எனவே, இந்தியாவில் வேறு எங்கும் இல்லாத வகையில், பார்ப்பனர் (எதிர்) பார்ப்பனரல்லாதார் என்னும் வகையில் தமிழக அரசியல் கட்டமைக்கப்பட்டது. இன்றும் அந்நிலை தொடரவே செய்கிறது. அதனால்தான், கோயிலுக்குப் போகின்றவர்கள், பக்தி நிறைந்தவர்கள், தங்களை இந்துக்கள் என்று கருதிக் கொண்டிருப்பவர்கள் பலரும் கூட, குறைந்தது, மனத்திற்குள்ளாவது, பார்ப்பன எதிர்ப்பு உடையவர்களாக இருக்கின்றனர். இதற்கு அண்மைக்கால எடுத்துக்காட்டு ஒன்றை நாம் பார்க்கலாம். பெரியார் சிலை உடைக்கப்பட வேண்டும் என்று ஒருவர் கூறியபோது, பகுத்தறிவாளர்கள் மட்டுமின்றி, நெற்றியில் திருநீறு பூசியிருந்த பக்தர்கள் சிலரும் கூட அதனைக் கடுமையாக எதிர்த்தனர்.

பிற மாநிலங்களில், குறிப்பாக, வட மாநிலங்களில் உள்ளது போல இங்கே இந்து-முஸ்லீம் மோதல்கள் வெடித்தது இல்லை. 1947 ஆம் ஆண்டு, இந்தியா - பாகிஸ்தான் பிரிவினையின்போது, வடநாடு முழுவதும் மதக்கலவரத்தில் சிக்கித் தவித்தது. கலவரத்தை அடக்கப்போன காவலர்களும், ராணுவமும் கூட, இந்து என்றும் முஸ்லீம் என்றும் பிரிந்து நின்றார்கள். அந்தக் கட்டத்திலும் தமிழகம் அமைதிப் பூங்காவாக இருந்தது என்றால், அதற்குத் திராவிட இயக்கக் கொள்கைகள் இங்கு பரவியிருந்ததே காரணம்.

தமிழ்நாட்டில், இந்துக்களும், இஸ்லாமியர்களும் ஒருவரையொருவர் மாமன், மச்சான் என்று அழைத்துக்கொள்ளும் நட்பும், உறவுமுறையும் உண்டு. தீபாவளிக்கு அவர்கள் வீட்டிற்கு இனிப்பு வகைகள் செல்லும். ரம்ஜானிற்கு இங்கு பிரியாணி வந்து சேரும். ஓரே தெருவில் கோயிலும், மசூதியும் இருக்கும். அவரவர் வழிபாட்டில் அவரவர் ஈடுபடுவர்.

1980 வரையில், தமிழ்நாட்டில் ஒரே ஒரு இடத்தில் கூட, மதக்கலவரம் நடைபெற்றதாக எந்தக் குறிப்பும் இல்லை. சாதி மோதல்கள்தாம் நடைபெற்றுள்ளன. அதாவது, இந்துக்கள் எனப்படும் மக்களுக்குள்ளேயே மோதல் இருந்துள்ளது. அது சாதி ஏற்றத்தாழ்வு மனப்பான்மையால் உருவானது. பிறப்பின் அடிப்படையில், சாதி ஏற்றத்தாழ்வு என்பதுதான் பார்ப்பனியம். அந்த மோதல்கள் பார்ப்பனர் அல்லாதவர்களிடையே நடக்கிறது என்பது உண்மைதான். ஆனால், பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்னும் நம் பண்பாட்டை மறந்து, பிறப்பினால் உயர்வு தாழ்வு கற்பிக்கப்பட்டதை ஏற்றுக்கொள்ளும் மனநிலையே பார்ப்பனியம் ஆகிறது. அதுவே சாதி மோதல்களுக்கு வழி வகுக்கிறது.

எனவே ஏற்றத்தாழ்வை ஏற்ற ஆரியச் சிந்தனையும், சமத்துவக் கருத்தினைப் பரப்பிய திராவிடக் கொள்கையும்தாம் இங்கே மோதிக் கொண்டன.

இதற்கிடையில், மதக்கலவரங்களையும் இங்கு விதைக்கும் முயற்சிகள் தொடங்கின. எம்ஜிஆர் தமிழகத்தின் முதலமைச்சராக இருந்தபோது, அதற்கான வழிமுறைகளை ஆர்எஸ்எஸ் இயக்கத்தினர் திட்டமிட்டு உருவாக்கினர். அதற்கு முதல் பலியான இடம்தான் மண்டைக்காடு.

குமரி மாவட்டத்தில் அரபிக் கடற்கரையோரம் அமைந்துள்ள ஒரு சிற்றூர்தான் மண்டைக்காடு. அங்கே இந்துக்கள், கிறித்தவர்கள் ஆகிய இரு மதத்தினரும் சம அளவில் வாழ்ந்து வருகின்றனர். அங்கே உள்ள பகவதி அம்மன் கோயில் மாசித் திருவிழா புகழ் பெற்றது. அதேபோல், குருசடி சார்பிலும் தேவாலயங்கள் சார்பிலும் நடைபெறும் விழாக்களும் அனைத்து மக்களாலும் கொண்டாடப்படுபவை. மத வேறுபாடு இன்றி மக்கள் அங்கு மகிழ்ச்சியாக வாழ்ந்தனர். அந்த மகிழ்ச்சியை மதவாதிகளால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை.

1980 நவம்பரில் முதல் கலவர விதை அங்கு விழுந்தது. அம்மாவட்டத்தில் உள்ள மாடத்தட்டுவிளை என்னும் ஊரில் அமைக்கப்பட்டிருந்த சிலுவை ஒன்று ஒருநாள் காணாமல் போயிற்று. அது தொடர்பாக இரு மதத்தினருக்கும் இடையில் சிறு சிறு மோதல்கள் வந்தன. பேச்சளவில் அது நின்றது.

பழைய சுமுக நிலை மாறி, 1981 முழுவதும் சின்ன சின்ன உரசல்கள் வந்துகொண்டே இருந்தன. 1982 தொடக்கத்தில் அது வெடிக்கத் தொடங்கியது. அந்தப் பகுதி வாழ் கிறித்துவர்கள், அந்த ஆண்டில், உலக ஜெப வாரம் கொண்டாடினர். பல ஊர்களிலிருந்தும் கிறித்துவ மக்கள் நாகர்கோயில் நோக்கி ஊர்வலமாக வந்தனர். அங்கு ஒரு சிலுவையையும் நிறுவினர். ஆனால் அந்தச் சிலுவை சில நாள்களில் காணாமல் போனதுடன், அங்கு ஒரு பிள்ளையார் சிலையும் வந்துவிட்டது. மதக்கலவரத்தை உருவாக்க இதனை விடச் சிறந்த வழி வேறு என்ன இருக்க முடியும்?

ஆனால் அப்போதும் பெரிய கலவரம் ஏதும் மூண்டுவிடவில்லை. அடுத்தகட்டமாக, அதே ஆண்டு பிப் 13, 14 ஆம் நாள்களில், நாகர்கோயிலில் இந்து எழுச்சி மாநாடு நடத்தப்பட்டது. இந்துக்களை யார் நசுக்கினார்கள்? எதற்காக, யாரை எதிர்த்து அவர்கள் எழுச்சி கொள்ள வேண்டும்? யாரும் விடை சொல்லவில்லை.

அவர்கள் எதிர்பார்த்த கலவரம் கடைசியாக, 1982 மார்ச் 1 ஆம் நாள் வெடித்தது. பகவதி அம்மன் மாசி விழாவிற்கு வந்த இந்துப் பெண்களைக் கிறித்துவ இளைஞர்கள் கேலி செய்தனர் என்ற வதந்தி பரவியது. பெரிய கலவரத்திற்கு அந்தச் சின்ன வதந்தி போதுமானதாக இருந்தது. இவையெல்லாம் காவி நண்பர்களுக்கு கைவந்த கலை.

மண்டைக்காடு கலவரம்

அவ்வளவுதான் மண்டைக்காட்டில் பெரிய கலவரம் வந்துவிட்டது. காவல்துறை முதலில் தடியடி நடத்தியது. பிறகு துப்பாக்கி எடுத்தது. 46 சுற்றுகள் (46 rounds) சுட்டது. 6 பேர் அந்த இடத்த்திலேயே பலியானார்கள். உடனே கலவரம் வேறு பக்கத்து ஊர்களுக்கும் பரவியது. அடுத்த சில நாள்களில் மேலும் மூவர் பலியானார்கள்.

கரையோரத்து மீனவர்கள் பலர் கிறித்துவ மதத்தைத் தழுவியவர்கள். அவர்களுக்கும் ஊர் மக்களுக்கும் இடையில் மோதல் எழுந்தது. மீனவர்களின் வலைகள் அறுக்கப்பட்டன. அண்ணன் தம்பிகளாகப் பழகிய அந்த ஊர் மக்கள், மதங்களின் பெயரால் எதிரிகள் ஆக்கப்பட்டார்கள்.

தமிழ்நாட்டில் மண்டைக்காட்டில், இறந்தவர்களின் பிணங்களை உரமாக்கிக் கொண்டு, முதன்முதலாக ஒரு முட்செடி முளைத்தது. அச்செடியின் நிறம் காவியாக இருந்தது.

(தொடரும்)

(இத் தொடரில் இடம்பெற்றுள்ளவை அனைத்தும் எழுத்தாளரின் கருத்துகள் மட்டுமே. ஒன் இந்தியா தமிழ் இணையதளத்தின் கருத்து அல்ல.)

வெற்றிடம்[1, 2, 3]

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Professor Subavee's new series Karuppum Kaviyum in Oneindia Tamil

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற