For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பிப் 2 முதல் தமிழக அரசு ஊழியர்கள் நடத்தும் போராட்டத்திற்கு தி.மு.க. ஆதரவு: மு.க.ஸ்டாலின்

Google Oneindia Tamil News

சென்னை: பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பிப்ரவரி 2-ந் தேதி முதல் தமிழக அரசு ஊழியர்கள் நடத்தும் போராட்டத்திற்கு திமுக ஆதரவு அளிக்கும் என்று அக்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

மதுரையில் நடைபெற்ற தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாநில அளவிலான போராட்ட ஆயத்த மாநாட்டில் வீடியோ கான்பரன்ஸ் மூலம் ஸ்டாலின் பேசியதாவது:

தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாநில மையத்தின் சார்பில் நடைபெறும் மாநாட்டில் பங்கேற்று சில கருத்துகளைச் சொல்வதற்கு வாய்ப்பளித்த அரசு ஊழியர் சங்கத்தின் தலைவர்கள் அனைவருக்கும் என்னுடைய நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். வழக்கமான மாநாடாக இல்லாமல், போராட்டத்துக்கான ஆயத்த மாநாடாக இதனைக் கூட்டி இருக்கிறீர்கள்.

'இழந்ததை மீட்டிட, இருப்பதைக் காத்திட' என்ற உங்களது அறிவிப்பிலேயே அனைத்தும் அடங்கிவிட்டது. இன்றைய அ.தி.மு.க. அரசு, அரசு ஊழியர்களின் அனைத்து உரிமைகளையும் பறித்துவிட்டது, இனிமேல் பறிப்பதற்கு எதுவும் இல்லை என்பதைச் சொல்லாமல் சொல்லி இருக்கிறீர்கள்!

DMK support to TN Govt Employees Protest from Feb 2

தமிழ்நாடு வருவாய் அலுவலர் சங்கம், ஊரகவளர்ச்சி அலுவலர் சங்கம், வணிகவரிப் பணியாளர் சங்கம், தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கம் உள்ளிட்ட பல்வேறு சங்கத்தினர் அனைவரும் சேர்ந்து, 'உரிமை மீட்பு வெறும் பேரல்ல, புனிதப் போர்' என்று அறிவித்துள்ளீர்கள்.

உங்களது கோரிக்கைகளை நான் பார்த்தேன்.

* பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும்.

* போராட்டத்தில் பங்கேற்றவர்கள் மீது ஏற்படுத்தப்பட்ட குற்றக் குறிப்பாணையை நீக்க வேண்டும்.

* மாநிலத் தலைவர் மு.சுப்பிரமணியம் போன்றவர்கள், பணி ஓய்வின் போது தற்காலிகமாகப் பணி நீக்கம் செய்யப்பட்டதை ரத்து செய்ய வேண்டும்.

* 21 மாத கால நிலுவைத் தொகையை வழங்க வேண்டும்.

* முடக்கப்பட்ட அகவிலைப்படியைத் தர வேண்டும்.

* பறிக்கப்பட்ட சரண்டர் உரிமையை வழங்க வேண்டும்.

* சத்துணவு மற்றும் அங்கன்வாடி, வருவாய் கிராம உதவியாளர்கள், ஊர்ப்புற நூலகர்கள், எம்.ஆர்.பி. செவிலியர்கள் உள்ளிட்ட, சிறப்பு காலமுறை ஊதியம், தொகுப்பூதியம், மதிப்பூதியம் பெறும் மூன்றரை லட்சம் ஊழியர்களுக்கு வரையறுக்கப்பட்ட கால முறை ஊதியம் வழங்க வேண்டும்.

தத்துவத்தின் மனிதராக இருந்தவர் எழுத்தாளர் இளவேனில்.. மு.க. ஸ்டாலின் புகழஞ்சலிதத்துவத்தின் மனிதராக இருந்தவர் எழுத்தாளர் இளவேனில்.. மு.க. ஸ்டாலின் புகழஞ்சலி

* 2002-ஆம் ஆண்டு பணி நீக்கம் செய்யப்பட்ட சாலைப்பணியாளர்களுக்கு 41 மாத காலப் பணிக்கான ஊதியம் தர வேண்டும்.

- என்ற கோரிக்கைகள் அனைத்திற்கும் தார்மீக அடிப்படையில் எனது ஆதரவைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

திராவிட முன்னேற்றக் கழக அரசு அமைந்ததும் இக்கோரிக்கைகள் அரசால் பரிசீலிக்கப்பட்டு, உரிய நிவாரணம் வழங்கப்படும் என்ற உறுதிமொழியையும் இந்த மாநாட்டின் மூலமாக அரசு ஊழியர்கள் அனைவருக்கும் தெரிவித்துக் கொள்கிறேன்.

அரசு ஊழியர்கள் - ஆசிரியர்கள் வாழ்க்கைக்கு ஒளியேற்றிய ஆட்சிதான் திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி!

* அரசு அலுவலர்கள் நடத்தை பற்றிய ரகசியக் குறிப்பேட்டை நீக்கியவர் கலைஞர்!

*அரசு ஊழியர் குடும்பப் பாதுகாப்பு நிதி வழங்கியவர் கலைஞர்!

இந்தக் கருணைக் கொடையை இந்தியாவிலேயே வழங்கிய முதல் அரசு கழக அரசுதான்!

* அரசு ஊழியர்கள் பணிக்காலத்தில் இறந்தால், அவர்களின் வாரிசுகளுக்கு கருணை அடிப்படையில் பணி வழங்கியதும் கழக அரசுதான்!

* ஈட்டிய விடுப்பை சரண்டர் செய்து பணமாகப் பெறும் திட்டத்தை அமல் செய்தவர் கலைஞர்!

* திருமணக் கடன், வாகனக் கடன், வீடுகட்டக் கடன் ஆகியவை வழங்கியவர் கலைஞர்!

* மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் கொடுத்தார்.

* 6 மாதத்துக்கு ஒரு முறை, மத்திய அரசு ஊழியர்களுக்கு பஞ்சப்படி உயர்த்தும் போதெல்லாம், மாநில அரசு ஊழியர்க்கும் வழங்கியவர் கலைஞர்!

* பொங்கல் கருணைத் தொகையை போனசாக வழங்கிய ஆட்சி திமுக ஆட்சி!

* ஒளிவுமறைவற்ற கலந்தாய்வு நடத்தி, பணி மாறுதல்கள் வழங்கியது கழக ஆட்சி!

* அரசுப்பணியில் சேருவதற்கான வயது வரம்பை உயர்த்தியது கழக அரசு!

* 10 ஆயிரம் சாலைப் பணியாளர்களை நியமித்ததும், 7 ஆயிரம் மக்கள் நலப்பணியாளர்களை நியமித்ததும் கழக அரசு தான்.

* பண்டிகை முன்பணத்துக்கு வட்டியை நீக்கிய அரசு கழக அரசு!

* 2 லட்சம் சத்துணவுப் பணியாளர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்கிய ஆட்சி கழக ஆட்சி!

* ஓய்வுக்கால பணிக்கொடை உச்சவரம்பை உயர்த்திய அரசு கழக அரசு!

* தமிழாசிரியர் பணியிடப் பாகுபாடு நீக்கப்பட்டது. புலவர் பட்டம் பி.லிட். பட்டம் ஆக்கப்பட்டது.

* "நல்லாசிரியர் விருது", "டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது" ஆனது.

* மத்திய அரசுக்கு இணையான சம்பள விகிதங்கள் மாநில அரசு ஊழியர்கள், ஆசிரியருக்குத் தரப்பட்டன.

- இப்படி அரசு ஊழியர், ஆசிரியர்களுக்கு கழக ஆட்சியில் வழங்கப்பட்ட சலுகைகளைச் சொல்லிக் கொண்டே போகலாம்!

DMK support to TN Govt Employees Protest from Feb 2

அரசு ஊழியர்களும், ஆசிரியர்களும் ஒரு மாநிலத்தின் அடிநாதம் என்பதை தி.மு.க. அரசு எந்தக் காலத்திலும் மறந்தது இல்லை. அரசு ஊழியர்கள்தான் அரசாங்கத்தை வழிநடத்துகிறார்கள். மக்களுக்குப் போய்ச் சேர வேண்டிய அனைத்துத் திட்டங்களையும் மக்களுக்குக் கொண்டு சேர்ப்பவர்களும் அவர்கள்தான்.

ஆசிரியர்களைப் பொறுத்த வரை, அவர்களது பணி என்பது தொண்டு. அதனை வேலை என்று சொல்ல முடியாது. தியாகப் பணி. எதிர்காலத் தலைமுறையை உருவாக்குபவர்கள்தான் ஆசிரியர்கள். இந்தியாவின் சொத்தான இளைய சக்தியை உருவாக்குபவர்கள் ஆசிரியர்கள். எனவேதான் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் நலனில் எப்போதும் அக்கறை செலுத்தும் அரசாக கழக அரசு இருந்தது. எதிர்காலத்திலும் அப்படித்தான் இருக்கும்!

அ.தி.மு.க. ஆட்சியானது, அரசு ஊழியர்களை ஆசிரியர்களை மதித்ததா என்றால் இல்லை! அவர்களது கோரிக்கைகளைச் செவி மடுத்ததா என்றால் இல்லை!

அரசு ஊழியர்கள் கடந்த மூன்று ஆண்டுகளாக பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகிறார்கள். அதை அரசு கண்டுகொள்ளவில்லை.

2018 ஆம் ஆண்டு அரசு ஊழியர்கள் உண்ணாவிரதம் இருந்தபோது சட்டமன்றத்தில் கவன ஈர்ப்புத் தீர்மானம் கொடுத்து நான் பேசினேன். பரிசீலிப்பதாக அரசு சொன்னது.

கடந்த ஆண்டு ஜனவரி மாதம், தங்கள் கோரிக்கைகளை முன் வைத்து அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் போராட்டம் நடத்தினார்கள். கோரிக்கைகளைக் கவனிக்கிறோம் என்று அரசு சார்பில் சொன்னதால் பணிக்குத் திரும்பினார்கள். ஆனால் 23 மாதம் ஆகிவிட்டது. அரசு எதுவும் செய்யவில்லை.

ஆனால் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மீது குற்றக் குறிப்பாணை போட்டுள்ளது அரசு. இதனால் அவர்களது பதவி உயர்வு, ஊதிய உயர்வு, ஓய்வுக்காலச் சலுகைகள் பாதிக்கப்படுகிறது. இன்னும் பலர் மீது எஃப்.ஐ.ஆர். பதிவு செய்யப்பட்டுள்ளது. இதுதான் அரசு ஊழியர்களை மதிக்கும் லட்சணமா?

கடந்த செப்டம்பர் மாதமும் தமிழகச் சட்டமன்றத்தில் இவர்களது கோரிக்கைகள் குறித்து அரசின் கவனத்தை ஈர்த்தேன். இதுவரை தமிழக அரசு அசையாமல் கல் நெஞ்சத்தோடு இருக்கிறது.

இந்தக் கொரோனா காலத்தில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் எத்தகைய நெருக்கடியுடன் பணியாற்றினார்கள், பணியாற்றி வருகிறார்கள் என்பது அனைவருக்கும் தெரியும். நம்மை விட அரசுக்கு நன்றாகத் தெரியும்.

கொரோனா காலத்து நிவாரணப் பணிகளுக்காக அரசு ஊழியர்களும் ஆசிரியர்களும் - சுமார் 13 லட்சம் பேர் - தங்களது ஒரு நாள் ஊதியமாக சுமார் 150 கோடி ரூபாயை முதலமைச்சரின் பொதுநிவாரண நிதிக்கு வழங்கினார்கள். இப்படி அரசின் செயல்பாடுகளுக்கு ஒத்துழைத்து வரும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்களை இந்த அரசு ஏன் மதிக்கவில்லை? இந்த அலட்சியத்துக்கு என்ன காரணம்? தான் ஒருவர்தான் அரசாங்கம் என்று நினைக்கிறாரா பழனிசாமி? ஊழியர்கள் இல்லாமல் அரசாங்கத்தை அவரால் நடத்த முடியுமா?

அரசு ஊழியர்கள் போராடிய போது, அவர்களுக்கு அதிகமான சம்பளம் தரப்படுகிறது, ஏராளமான சலுகைகள் தரப்படுகிறது என்று சொன்னவர் முதலமைச்சர் பழனிசாமி. அதைவிடக் கொடுமையாக, அரசு ஊழியர்கள் எவ்வளவு சம்பளம் வாங்குகிறார்கள் என்பதை வெளிப்படையாக அரசு சார்பில் பொதுவெளியில் வெளியிட்டது பழனிசாமி அரசு.

"ஒரு ஆரம்பப் பள்ளி தலைமையாசிரியர் என்ன ஊதியம் வாங்குகிறார். எம்.இ. படித்த இளைஞர் எவ்வளவு ஊதியம் வாங்குகிறார்" என்று சொல்லி, ஆரம்ப பள்ளி ஆசிரியர்களைக் கிண்டல் செய்தார் பழனிசாமி.

"தேர்வில் வெற்றி பெற வேண்டாத வகுப்புக்கு தலைமையாசிரியராக இருப்பவர்க்கு, எதற்காக இவ்வளவு சம்பளம்?' என்று கேட்டவர் பழனிசாமி.

"ஆசிரியர்களுக்கு இவ்வளவு விடுமுறை இருக்கும் போது, எதற்காக இவ்வளவு சம்பளம்?' என்றும் முதலமைச்சர் கேட்டார்.

''எல்லாப் பணத்தையும் இவர்களுக்கே கொடுத்துவிட்டால், மக்களுக்கு எங்கே நன்மை செய்ய முடியும்?" என்று கேட்டவர் இந்த பழனிசாமி.

இதன் மூலமாக என்ன சொல்ல நினைத்தார்கள் என்றால், அரசு ஊழியர்களின் போராட்டம் அநியாயமானது, அவர்கள் அதிக ஊதியம் வாங்குகிறார்கள் என்று பொதுமக்களிடம் காட்ட நினைத்தது பழனிசாமி அரசு. இதைப் போல மோசமான சிந்தனை வேறு எதுவும் இருக்க முடியாது.

ஊழலுக்குப் பேர் போனது இந்த அ.தி.மு.க. அரசு. லஞ்ச லாவண்யத்தில் திளைப்பது இந்த அரசு. முதலமைச்சர் முதல், அமைச்சர்கள் வரை ஊழல் புகாருக்கு உள்ளாகி இருக்கிறார்கள். டெண்டர்கள் மூலமாக அரசாங்க கஜானாவை கொள்ளை அடித்துக் கொண்டு இருக்கிறார்கள். ஆனால் அரசு ஊழியர்களின் கோரிக்கையைச் செவி மடுத்துக் கேட்கக் கூட பழனிசாமி அரசாங்கம் தயாராக இல்லை.

மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிராகப் போராடும் விவசாயிகளை அழைத்து பிரதமர் பேச மாட்டார். அந்த அளவுக்கு பிடிவாதமாக பிரதமர் இருப்பதைப் போலத் தான், முதலமைச்சர் பழனிசாமியும் உங்களை அழைத்துப் பேச்சுவார்த்தை நடத்தாமல் இருக்கிறார்.

பிப்ரவரி 2 ஆம் தேதி முதல் தொடர் மறியல் போராட்டம் நடத்த இருப்பதாகவும், அது சிறை நிரப்பும் போராட்டமாக இருக்கும் என்றும் நீங்கள் அறிவித்துள்ளீர்கள். உங்கள் போராட்டத்தை தார்மீக அடிப்படையில் நாங்கள் ஆதரிக்கிறோம்.

கழக ஆட்சி அமைந்ததும், அரசு ஊழியர்கள் சங்கங்களை அழைத்துப் பேசி நல்ல முடிவுகளை எடுப்போம் என்பதைச் சொல்லி, உங்களை வாழ்த்தி விடை பெறுகிறேன்.

இவ்வாறு ஸ்டாலின் பேசினார்.

English summary
DMK President MK Stalin said that his party will support to theTamilnadu Govt Employees Protest from Feb 2.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X