நாற்காலி கனவுகள்...'யாரோடு யாரோ'!

கோடை வெயிலையும் வெல்லும் அனல் பிரச்சாரம், தலைவர்கள் அள்ளி வீசிய வாக்குறுதிகள், தேர்தல் ஆணைய நடவடிக்கைகள் என நாடு முழுவதும் கடந்த 2 மாதங்களாக கட்சிகள் தேர்தல் சர்க்கஸ் நடத்தின.
நாளை மக்களவைத் தேர்தல் கடைசி கட்டத் தேர்தலும் முடிந்து வரும் 16ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடக்கவுள்ளது. அப்படா.. இனியாவது வேற நியூஸ் படிக்கலாம்.. என்று யாரும் எண்ணி விடாதீர்கள்.
16ம் தேதி மதியத்துக்குப் பிறகு தான் உண்மையான தேர்தல் ஒலிம்பிக்ஸே ஆரம்பமாகப் போகிறது. ஆட்சியமைக்கும் அளவுக்கு தங்களுக்கு நிச்சயம் பெரும்பான்மை கிடைக்காது என்பதில் எந்தக் கட்சிக்குமே சந்தேகம் இல்லை. உதிரிப் பூவாய் தான் வரப் போகிறது மக்களின் தீர்ப்பு.
இதையடுத்து ஆட்சியமைக்க அதிகாரம் கோரி நடக்கப் போகும் தேர்தல் சடுகுடு நிச்சயம் பல வாரங்கள் நீடிக்கப் போகிறது. நீளம் தாண்டுகள், டைவிங், பாக்சிங், மல்யுத்தம், ஜிம்னாஸ்டிக்ஸ் என்று தடகள வீரர்களின் சாகஸங்களைப் பார்த்திருப்பீர்கள்.
இதையெல்லாம் எல்லாம் 16ம் தேதிக்குப் பின் நம் அரசியல்வாதிகள் செய்து காட்டப் போகிறார்கள்.
அந்தக் கட்சி இங்கே தாவிட்டது, இந்தத் தலைவர் அங்கே 'பாய்ஞ்சுட்டார்', இவர் முதுகில் அவர் குத்திவிட்டார், அவர் பதவி கேட்டு மல்யுத்தமே நடத்திக் கொண்டுள்ளார், இவர் சேம் சைட் கோல் போட்டுவிட்டார் என்று நமக்கு ஒரு 'இந்தியா ஒலிம்பிக்ஸ்-2009' பார்க்கும் உணர்வைத் தரக் காத்திருக்கிறார்கள் நம் அரசியல்வாதிகள்.
இந்த ஒலிம்பிக் போட்டிகளுக்கான முஸ்தீபுகள் இப்போதே தொடங்கிவிட்டன.
காங்கிரசும் பாஜகவும் தங்களுக்கு இத்தனை சீட் வரை கிடைக்கும் என்று கணித்துக் கொண்டு, பிற கட்சிகளுக்கு வலை வீச ஆரம்பித்துவிட்டன.
மாநிலக் கட்சிகளோ காங்கிரஸ், பாஜக, இடதுசாரிகள் ஆகியோரில் யார் அதிக இடத்தில் வென்று பெரும்பான்மைக்கு மிகப் பக்கத்தில் போகிறார்களோ அவர்கள் பக்கமாகத் தாவக் காத்திருக்கின்றன.
இங்கே கொள்கை, கோட்பாடு என எந்தக் 'கருமத்துக்கும்' இடம் கிடையாது. மத்திய ஆட்சியில் எப்படியாவது பங்கைப் பிடிப்பது.. மாநிலத்தில் தனது முக்கிய அரசியல் எதிரியை மத்தியில் ஆட்சி அமைக்கும் கூட்டணி சேர்த்துக் கொள்ளாமல் பார்த்துக் கொள்வது... என இரண்டே இரண்டு 'பாலிஸி'கள் தான். அதற்காக எந்தவிதமான அரசியல் நிலையையும் எடுக்க கட்சிகள் தயார்.
அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவுக்கு திமுக அல்லாத மத்திய அரசு அமைய வேண்டும்.. திமுகவுக்கும் அதே போல அதிமுக அல்லாத கூட்டணி மத்தியில் ஆட்சிக்கு வந்தால் போதும்.. அதற்காக எந்தக் கூட்டணிக்கு வேண்டுமானாலும் 'ஹை ஜம்ப்' செய்ய இருவருமே தயார் தான்.
உத்தரப் பிரதேச முதல்வர் மாயாவதி இல்லாத கூட்டணி ஆட்சி்க்கு வர வேண்டும் என்பது தான் சமாஜ்வாடிக் கட்சித் தலைவர் முலாயம் சிங் யாதவின் ஒரே குறிக்கோள். அதே போல முலாயம் இல்லாத கூட்டணி மத்தியில் ஆட்சிக்கு வருவதோடு நாமே பிரதமராக வேண்டும் என்பது மாயாவதியின் திட்டம்.
ராஷ்ட்ரீய ஜனதா தளத் தலைவர் லாலு இல்லாத கூட்டணி ஆட்சிக்கு வர வேண்டும் என பிகார் முதல்வர் நிதிஷ்குமாரும்.. நிதிஷ் ஆதரவு இல்லாத அரசு அமைய வேண்டும் என்று லாலுவும் பிரார்த்தனைகளில் ஈடுபட்டுள்ளதோடு ஒருவரை ஒருவர் இந்த 'மல்யுத்தத்தில்' சாய்க்க எந்தக் கூட்டணி பக்கமும் இடம் மாறவும் தயாராக உள்ளனர்.
இந்தக் கட்சிகளை 'மீன் பிடிக்கும்' வேலையை பாஜகவும் காங்கிரசும் மூன்றாவது அணியின் முக்கிய கட்சியான இடதுசாரிகளும் ஆரம்பித்துவிட்டனர்.
ஆந்திராவில் மூன்றாவது அணியில் உள்ள சந்திரபாபு நாயுடுவை வளைக்கும் வேலை மூத்த பாஜக தலைவர் வெங்கையா நாயுடுவிடம் தரப்பட்டுள்ளது. அந்தக் கூட்டணியில் இருந்து தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதியை அருண் ஜேட்லி 'பேசி' பாஜக கூட்டணிக்குள் நேற்று முன் தினமே இழுத்து விட்டார்.
ஜெயலலிதாவை கூட்டணிக்குள் கொண்டு வரும் பணி குஜராத் முதல்வரும் ஜெயலலிதாவின் நண்பருமான நரேந்திர மோடியிடம் தரப்பட்டுள்ளது. அவரும் வேலையை ஆரம்பித்துவிட்டார்.
அதே நேரத்தில் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் தேர்தலுக்குப் பின் தனது கூட்டணியில் நீடிப்பார் என்று காங்கிரஸ் நிச்சயமாக நம்பவில்லை. தன்னை பிரதமராக முன் நிறுத்துவார்கள் என்ற நம்பிக்கையோடு இடதுசாரிகளுடன் ஒட்டி உறவாடி வருகிறார் பவார்.
அதே போல ஒரிஸ்ஸா முதல்வரான பிஜூ பட்நாயக், மாநிலத்தில் சட்டசபை தேர்தலில் வெல்ல பாஜக கூட்டணி சரிப்படாது என்பதால் அவர்களை வெட்டிவிட்டார். ஆனால், மீண்டும் மத்தியில் பாஜகவை ஆதரிப்பதில் அவருக்கு பெரிய சிக்கல் ஏதும் இல்லை. அவருக்கு மீண்டும் வெள்ளைக் கொடியை ஆட்ட ஆரம்பி்த்துவிட்டது பாஜக. ஆனால், அவரை தங்கள் பக்கம் இழுக்க காங்கிரசும் இடதுசாரிகளும் மொய்த்து வருகின்றனர்.
நிதிஷ்குமார் பிகாரி்ல் வாக்குப் பதிவு முடியும் வரை நரேந்திர மோடியுடன் மேடையேற மாட்டேன் என்றவர் தேர்தல் முடிந்தவுடன் கைகோர்த்துவிட்டார். அவரது ஆதரவு நமக்கே என்று பாஜக நம்பிக் கொண்டுள்ளது. ஆனால், இடதுசாரிகளும் காங்கிரசும் அவரையும் விடுவதாக இல்லை.
இப்படியாக மத்தியில் ஆட்சியைப் பிடிக்க மாநிலக் கட்சிகளை தேசியக் கட்சிகள் காலைப் பிடிக்காத குறையாக கெஞ்சி வருகின்றன. ஆனால், இன்று காலை தங்களுடன் இருக்கும் மாநிலக் கட்சித் தலைவர் மாலையில் தங்களுடன் இருப்பாரா என்று தெரியாத நிலையில் இருட்டில் கபடி விளையாடிக் கொண்டுள்ளன தேசியக் கட்சிகள்.
குறைந்தபட்சம் 160 முதல் 180 சீட்கள் வரை பிடிக்கும் தேசியக் கட்சியால் தான் உதிரிகளை இழுத்து ஒரு கூட்டணியை அமைத்து மெஜாரிட்டிக்கு பக்கத்தில் போக முடியும். ஆனால், இந்த மேஜிக் நம்பரைக் கூட காங்கிரஸ், பாஜகவால் தொட முடியுமா என்பது சந்தேகமாகவே உள்ளது.
அதே நேரத்தில் 100 இடங்கள் வரை பிடித்தால் போதும் பாஜகவைக் காட்டி பயமுறுத்தியே, காங்கிரசின் ஆதரவை வலுக்கட்டாயமாகப் பெற்று, மூன்றாவது அணியின் அரசை அமைத்துவிட முடியும் என இடதுசாரிகள் நம்பிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், வாக்கு எண்ணிக்கை நடக்கும் 16ம் தேதி காலை 9 மணிக்கு மேல் இந்தக் கூட்டணியில் இடதுசாரிகள் தவிர வேறு எந்தக் கட்சி இருக்கும் என்பது அவர்களுக்கே தெரியாது.
இப்படி காங்கிரஸ், பாஜக, இடதுசாரிகள் ஆள் பிடிக்கும் விளையாட்டில் ஈடுபட்டிருக்க.. மாயாவதி, ஜெயலலிதா, சரத்பவார் போன்றோர் பிரதமர் கனவிலும் மிதப்பதும் உண்மை.
ஆனால், எந்தக் கூட்டணிக்கும் மெஜாரிட்டி கிடைக்காமல் போய், வேறு வழியில்லாமல் ஏதாவது இரு கூட்டணிகள் சேர்ந்து தான் ஆட்சியமைக்க முடியும் என்ற நிலை வந்தால் (அப்படிப்பட்ட நிலை தான் வரப் போகிறது என்கிறார்கள்), முக்கிய தலைவர் யாரையும் பிரதமராக்க கட்சிகள் ஒப்புக் கொள்ளாவிட்டால் (மாயாவதியை ஜெயலலிதா ஏற்க மாட்டார்..) அரசியலில் தேய்மானத்தில் உள்ள யாருக்காவது யோகம் அடிக்கலாம்.
அதாவது, அவரை ஆதரிக்கும் எந்தக் கட்சிக்கும் சவாலாக இல்லாத, யாரோ ஒருவர் கூட... 'Survival of the weakest' என்ற 'உல்டா' தத்துவப்படி பிரதமராக்கப்படலாம். நம்ம தேவ கெளடா பிரதமர் ஆனது மாதிரி!.
(கட்டுரையாளர் தட்ஸ்தமி்ழ் ஆசிரியர்)












Click it and Unblock the Notifications