For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

40 தொகுதியிலும் நாங்களே போட்டி: ஏன் முடிவு செய்தார் ஜெயலலிதா!

By A K Khan
Google Oneindia Tamil News

-ஏ.கே.கான்

வரும் நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவுடனோ, காங்கிரசுடனோ கூட்டணி அமைக்க மாட்டோம். தமிழகம், புதுவை உள்ளிட்ட 40 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிடுவோம் என அக் கட்சியின் பொதுச் செயலாளர் ஜெயலலிதா அறிவித்துள்ளார். இதில் மிகவும் மிரண்டு போய் இருப்பது தா.பாண்டியன் போன்ற 'பக்க வாத்தியங்கள்' தான்.

ஆண்டுதோறும் வழக்கமாக நடக்கும் வானகரம் ஸ்ரீவாரு வெங்கடாசலபதி திருமண மண்டபத்தில்தான் இந்த ஆண்டும் அதிமுக பொதுக் குழு கூட்டம் நடந்தது. மண்டபத்தின் நுழைவு வாயில் முகப்பில் நாடாளுமன்ற முகப்பில் அதிமுக கொடி பறப்பது மாதிரி 'செட்' போட்டிருந்தார்கள். இது, பார்த்திபன் கனவு மாதிரி ஜெயலலிதாவின் 'டெல்லிக் கனவு' குறித்து மறைமுகமாக ஜாடை செய்தது.

கடந்த ஆண்டு பொதுக் குழு கூட்டம் நடந்த நேரத்தில்​தான் சசிகலா அண்ட் குடும்பம் கட்சியில் இருந்து கட்டம் கட்டப்பட்டிருந்தது. ஆனால், இந்தமுறை அவர் வருவார் என அதிமுகவினர் எதிர்பார்த்தனர். ஆனால் காரில் தனியே வந்து இறங்கி அங்கு கூடியிருந்த அதிமுகவினரை ஆரம்பத்திலேயே குழம்ப வைத்தார் ஜெயலலிதா.

3 நிமிடம் நடந்த செயற்குழு:

3 நிமிடம் நடந்த செயற்குழு:

முதலில் செயற் குழுக் கூட்டம் தொடங்குவதாக அறிவிக்கப்பட்டது. அது நடந்தது எவ்வளவு நேரம் தெரியுமா?. 3 நிமிடங்கள்!.

இதையடுத்து பொதுக் குழு கூட்டம் நடப்பதாக அறிவிக்கப்பட்டதும். வரிசையாக 25 தீர்மானங்கள் வாசிக்கப்பட்டன. இதில் 21 தீர்மானங்களில் ஜெயலலிதாவுக்கு பாராட்டு மழை பெய்தது.

ஜெயலலிதாவின் பேச்சு...

ஜெயலலிதாவின் பேச்சு...

இதையடுத்து ஜெயலலிதா பேசுகையில் தான் பாஜக, காங்கிரசுடன் கூட்டணி இல்லை. காவிரி விவகாரத்தில் தமிழகத்தின் உரிமையைக் காக்க நாம் தனியாகப் போட்டியிட்டு 40 தொகுதிகளிலும் வெற்றி பெற வேண்டும். அப்போதுதான் மத்தியில் நமது அதிகாரத்தைச் செலுத்த முடியும். அதற்காக நீங்கள் அயராது பாடுபடுங்கள் என்று குண்டைப் போட்டார்.

உடனே கை தட்டிவிட்டாலும் அதிமுகவினரிடையே பெரும் குழப்பமே மிஞ்சியது. அம்மா என்ன சொல்றாங்க.. தனித்துப் போட்டின்னா கடந்த சட்டமன்றத் தேர்தலில் நம்மோடு இருந்த இடதுசாரிகள், சரத்குமார், கொங்கு கட்சிகள், இஸ்லாமிய கட்சிகளுடன் கூட கூட்டணி இல்லையா?. நம்மை விட நன்றாக ஜால்ரா அடிக்கும் தா.பாண்டியனும் இல்லையா..? என்ற குழப்பத்தோடு அவர்கள் கலைந்து சென்றனர்.

வைத்திலிங்கத்தின் '292' பேச்சு:

வைத்திலிங்கத்தின் '292' பேச்சு:

ஜெயலலிதாவின் திட்டம் தான் என்ன என்று யோசித்தால் பொதுக் குழுவில் பேசிய அமைச்சர் வைத்திலிங்கத்தின் பேச்சில் அதற்கு பதில் இருப்பது புரிகிறது.

அவர் பேசுகையில், நாட்டில் 6 மாநிலங்கள்தான் இந்தியப் பிரதமரைத் தீர்​மானிக்கின்றன. 80 எம்பிக்கள் கொண்ட உத்தரப் பிரதேசம், 48 எம்பிக்கள் கொண்ட மகாராஷ்டிரம், 42 எம்பிக்கள் கொண்ட ஆந்திரா, 42 எம்பிக்கள் கொண்ட மேற்கு வங்கம், 40 எம்பிக்கள் கொண்ட பிகார், எம்பிக்கள் கொண்ட தமிழ்நாடு-புதுச்சேரி ஆகியவை தான் இந்த மாநிலங்கள். இந்த 6 மாநிலங்களில் மட்டும் 292 தொகுதிகள் உள்ளன. இந்தத் தொகுதிகளைக் கைப்பற்றுபவரோ அல்லது இங்கு வெல்பவர்களின் ஆதரவு உள்ளவரே அடுத்த ஆட்சியை அமைக்க முடியும்.

பாஜக, நிதிஷ்குமார், இடதுசாரிகள், ஜெகன் மோகன் கூட்டணி:

பாஜக, நிதிஷ்குமார், இடதுசாரிகள், ஜெகன் மோகன் கூட்டணி:

ஆனால், இந்த மாநிலங்களில் உள்ள உள் அரசியலை நாம் பார்க்க வேண்டும். மம்தா பானர்ஜியை இடதுசாரிகள் ஏற்க மாட்டார்கள். இடதுசாரிகளை மம்தா ஏற்க மாட்டார். நரேந்திர மோடியை நிதிஷ் குமாருக்குப் பிடிக்காது. நிதிஷ் குமாரை மோடி ஏற்க மாட்டார்.

மாயவதியை முலாயம் சிங் ஏற்க மாட்டார். முலாயமை மாயாவதி ஏற்க மாட்டார். ஆனால், எல்லோரும் ஏற்றுக்கொள்ள கூடிய ஒரே தலைவர் அம்மாதான் (பெரும் கைத்தட்டல்).

அம்மாவை காங்கிரஸ் ஆதரிக்க முன் வராது. ஆனால் பாஜக, நிதிஷ்குமார், இடதுசாரிகள் மற்றும் ஜெகன் மோகன் ரெட்டி ஆகியோரின் ஆதரவோடு அம்மா தான் அடுத்த பிரதமர். இப்படி ஒரு கூட்டணிக்கு அம்மா தலைமை ஏற்பார் என்றார் வைத்தி.

வி.பி.சிங் பிரதமரானது மாதிரி:

வி.பி.சிங் பிரதமரானது மாதிரி:

கிட்டத்தட்ட 1989ம் ஆண்டு பாஜகவும் இடதுசாரிகளும் சேர்ந்து தேசிய ஜனநயாகக் கூட்டணியின் தலைவரான வி.பி.சிங்கை பிரதமராக்கியது மாதிரி இந்த முறையும் காங்கிரஸை வீழ்த்த பாஜகவும் இடதுசாரிகளும் சேர்ந்து ஜெயலலிதாவை பிரதமராக்கப் போகிறார்கள் என்பதே அதிமுகவின் கணக்கு.

நான் தான் அடுத்த பிரதமர் என்று ஜெயலலிதாவின் நண்பரான நரேந்திர மோடி மறைமுகமாகக் கூற ஆரம்பித்திருக்கும் நிலையில், ஜெயலலிதாவின் அனுமதி இல்லாமல் வைத்திலிங்கம் நிச்சயம் இப்படிப் பேசியிருக்க முடியாது என்பதைப் பார்க்கும்போது, ஸ்ரீவாரு வெங்கடாசலபதி திருமண மண்டபத்தின் வெளியே நாடாளுமன்ற செட் மீது அதிமுக கொடி பறந்ததற்கான அர்த்தத்தை நாம் புரிந்து கொள்ள முடியும்.

திராவிட கட்சிகள்:

திராவிட கட்சிகள்:

தமிழகத்தில் கடந்த 25 வருடங்களுக்கு மேலாக திமுக, அதிமுக ஆகிய இரண்டு திராவிடக் கட்சிகள் தான் ஆட்சி புரிந்து வருகின்றது. இதில் அதிமுக நிறுவனர் டாக்டர் எம்.ஜி.ராமசந்திரன் இதய தெய்வம், புரட்சித் தலைவர் என்ற அடைய மொழியோடு சாகும் வரை முதல்வராகவே இருந்தார். ஆனால், மத்திய அரசில் கடந்த பல வருடமாக, உதாசீனம் செய்யப்பட்டு வந்த தமிழகத்தை திரும்பி பார்க்க வைதத்து திமுகதான். மத்தியில் பல அமைச்சர்களை பெற்று தமிழக திட்டங்களுக்காக வலுவான லாபி செய்தது.

'டெட் வெயிட்' பாஜக:

'டெட் வெயிட்' பாஜக:

தேசிய கட்சிகளான அகில இந்திய காங்கிரஸ் கட்சியும், பாரதீய ஜனதா கட்சியும் தமிழகத்தில் தங்களை வலுவாக தளம் அமைத்துக் கொள்ள முடியவில்லை. இதில் தலைவர்களே அதிகம். தொண்டர்கள் ரொம்ப கம்மி. ஏதாவது ஒரு கட்சியோடு கூட்டணி சேர்ந்து கரை சேருவது காங்கிரஸ் மரபு. அதையே தான் பாஜகவும் செய்தது. ஆனால், காங்கிரசுக்காவது 4, 5 சதவீத வாக்குகள் உண்டு. தமிழகத்தைப் பொறுத்தவரை பாஜக ஒரு 'டெட் வெயிட்'. தூக்கிச் சுமப்பவருக்கு நாக்கு தான் தள்ளும், கூடுதல் வாக்குகள் ஏதும் கிடைக்காது.

திமுக-காங்கிரஸ்-தேமுதிக:

திமுக-காங்கிரஸ்-தேமுதிக:

காங்கிரஸ் விட்டாலும் அதை திமுக விடப் போவதில்லை (இதற்கு 2ஜி உள்பட பல காரணங்கள்). இதனால் அடுத்த நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ்-திமுக கூட்டணி தொடரவே போகிறது. இந்தக் கூட்டணிக்குள் எப்படியாவது விஜய்காந்தின் தேமுதிகவையும் கொண்டு வந்துவிட வேண்டும் என்பது கருணாநிதியின் ஆவல். அது நடக்கவும் நிறைய வாய்ப்பிருக்கிறது. இவர்களை ஒன்று சேர்க்காமல் ஜெயலலிதாவும் ஓய மாட்டார் போலிருக்கிறது... இதில் வைகோவை கருணாநிதி சேர்க்க மாட்டார். காங்கிரஸ் இருப்பதால் இடதுசாரிகள் வர மாட்டார்கள். தன்னை சேர்க்கவே மாட்டார்கள் என்பது ராமதாசுக்கே தெரியும்.

அதிமுகவுக்கு மிஞ்சி இருப்பது...

அதிமுகவுக்கு மிஞ்சி இருப்பது...

இதனால் அதிமுகவுக்கு மிஞ்சி இருப்பது பாஜகவும் இடதுசாரிகளும் மதிமுகவும் பாமகவும் தான். இதில் பாஜகவை கூட்டணியில் சேர்த்துக் கொண்டால் கிடைக்கும் வாக்குகளும் கிடைக்காமல் போய்விடும் என்பதால் இப்போதே 'நோ' சொல்லிவிட்டார் ஜெயலலிதா. சுப்பிரமணிய சாமியோடு சேர்ந்து 40 தொகுதிகளிலும் (வேட்பாளர்கள் கிடைத்தால்) தனித்துப் போட்டியிடும் பாக்கியம் ஜெயலலிதா மூலம் பாஜகவுக்குக் கிடைத்திருக்கிறது. தங்களது 'பலத்தை' நிரூபிக்க பாஜகவுக்கு நல்ல வாய்ப்பு. அதை அவர்கள் தவற விடக் கூடாது.

தேர்தலுக்கு முன்னர் தான் கூட்டணி இல்லை என்று ஜெயலலிதா சொல்கிறாரே தவிர, தேர்தலுக்குப் பின் கூட்டணி இல்லை என்று சொல்லவில்லை. அவர் நம்மோடு வருவார் என்பது பாஜகவுக்குத் தெரியும். இதனால் தமிழகத்தில் அதிமுக போட்டியிடும் இடங்கள் எல்லாமே பாஜக போட்டியிடுவது மாதிரி தான்.

பாவப்பட்ட வைகோ:

பாவப்பட்ட வைகோ:

அடுத்ததாக பாவப்பட்ட வைகோ. கடந்த சட்டமன்றத் தேர்தலில் ஜெயலலிதா அவருடன் 'உள்ளே, வெளியே' விளையாட்டை நடத்தி கடைசியில் கழற்றிவிட்டார். இறுதியில் தேர்தலிலேயே போட்டியிடுவதைத் தவிர்த்தது அவருடைய மதிமுக. இந்த முறை ஜெயலலிதா சொன்ன 'தனித்துப் போட்டி' என்ற வார்த்தையில் வைகோவுக்கும் இடமிருந்தால், கூட்டணியில் மதிமுக இல்லை என்றே அர்த்தம்.

பன்னீர்செல்வத்தின் காதிலிருந்தே ரத்தம்...

பன்னீர்செல்வத்தின் காதிலிருந்தே ரத்தம்...

இதே நிலை தான் இடதுசாரிகளுக்கும். இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியாவது பரவாயில்லை. தங்கள் மரியாதையை அப்படியே தக்க வைத்துக் கொண்டுள்ளது. ஆனால், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தான் பாவம். நல்லகண்ணு மாதிரியான ஒரு தலைவர் வழிநடத்திய அந்தக் கட்சியின் இப்போதையே மாநிலத் தலைவரான தா.பாண்டியன், ஜெயலலிதாவுக்கு அடித்து வரும் ஜால்ரா சத்தத்தில் ஓ.பன்னீர்செல்வத்தின் காதிலிருந்தே ரத்தம் வழிந்து கொண்டுள்ளது.

ஜால்ராவை விட்டுவிட்டு 'சங்கு':

ஜால்ராவை விட்டுவிட்டு 'சங்கு':

ஆனாலும் கை வலிக்க வலிக்க, மற்றவர்களின் காது கிழிய கிழிய ஜால்ரா அடித்தும் பலனிருக்காது போலிருக்கிறது மிஸ்டர் தா.பாண்டியன். தனித்துப் போட்டி என்ற ஜெயலலிதாவின் அறிவிப்பு இந்திய கம்யூனிஸ்ட்டுக்கும் பொருந்தினால், தா.பாண்டியன் ஜால்ராவை விட்டுவிட்டு 'சங்கு' ஊத வேண்டிய நிலை வரலாம்.

வேண்டுமானால் வைகோவுக்கு துணையாக நின்று 40 தொகுதிகளிலும் போட்டியிட்டு 'குழி வெட்டலாம்' (வைகோ-மார்க்சிஸிட் கூட்டணி அமைந்தால் அது ஓட்டு வாங்குகிறதோ, இல்லையோ பார்க்க டீசண்டாக இருக்கும், அதில் தா.பாண்டியன் சேர்ந்தால் இவர்களது அதிமுக எதிர்ப்பு என்ற நிலை மழுங்கிவிடும். வழக்கம் போல காங்கிரஸை மட்டுமே தாக்கி ஓட்டு கேட்க வேண்டி வரும்).

'அரசியல் ஞானி' ராமதாஸ்:

'அரசியல் ஞானி' ராமதாஸ்:

அடுத்தபடியாக நமது பாமக. தா.பாண்டியன் மாதிரி இல்லாமல், தன்னை யாரும் கூட்டணியில் சேர்க்க மாட்டார்கள் என்பதை கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பே உணர்ந்த 'அரசியல் ஞானி' தான் ராமதாஸ். இதனால் தான் நடத்துவது பாட்டாளி மக்கள் கட்சி என்பதையே மறந்துவிட்டு மீண்டும் வன்னியர் சங்க அரசியலுக்குப் போய்விட்டார். கூடவே அனைத்து ஜாதியினரையும் திரட்டி தேர்தலில் நிற்கப் போகிறாராம். தமிழகத்தில் அப்பட்டமாக ஜாதிக் கூட்டணி அமைத்த யாரும், கருணாநிதி உள்பட, வென்றதில்லை. இதற்கு ராமதாசும் விதிவிலக்காக இருக்கப் போவதும் இல்லை.

கூட்டணியில் வைகோ, இடதுசாரிகளை சேர்த்தால் சேர்த்தால் மொத்தமுள்ள 40 இடங்களில் 10 சீட்கள் வரை தர வேண்டி வரும். 30 சீட்கள் மட்டுமே மிஞ்சும். இவர்களால் பெரிய அளவில் தனக்கு லாபமும் கிடைக்கப் போவதில்லை என்பதை உணர்ந்தே தனித்துப் போட்டி என்று அறிவித்துள்ளார் ஜெயலலிதா.

நான் பிரதமர் என்றால்...

நான் பிரதமர் என்றால்...

அதிகபட்ச இடங்களில் போட்டியிட்டு அதிகபட்ச இடங்களை வெல்வதன் மூலம் தான் அடுத்த நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பின் நிலவப் போகும் கலங்கலான அரசியல் குட்டையில் மீன் பிடிக்க முடியும் என்று ஜெயலலிதா கருதுகிறார். காரணம், அடுத்து நாங்கள் ஆட்சிக்கு வரப் போவதில்லை என்று அத்வானியே கூறிவிட்டார். நாம் வெல்ல மாட்டோம் என்று காங்கிரசுக்கு இதைவிட அதிகமாகவே நம்பிக்கை உள்ளது. இதனால் மீண்டும் ஒரு 'மூன்றாவது அணி அரசு' என்ற நாடகம் நடக்கவே போகிறது என்று ஜெயலலிதா உறுதியாக நம்புகிறார்.

குறைந்தபட்சம் 20 தொகுதிகளில் வெற்றி பெற்றால் கூட அடுத்து யார் ஆட்சி அமைப்பது என்பதை நிரூபிக்கும் சக்தியாக நாம் இருக்கலாம் என அவர் கருதுகிறார். அதிலும் தன்னையே பிரதமர் வேட்பாளராக முன் நிறுத்தினால் அதிகபட்ச இடங்களை அதிமுக பெற முடியும் என்றும் அவர் நினைக்கிறார்.

தேர்தலுக்கு இன்னும் ஓரு வருடத்துக்கு மேல் இருப்பதால், இடையில் முதல்வர் ஜெயலலிதாவின் நிலையில் மாற்றங்களும் ஏற்படலாம். 'கரன்ட் கட்' இருட்டில் கடுப்பில் உட்கார்ந்துள்ள மக்கள் என்ன நினைக்கிறார்களோ?!

English summary
The AIADMK would go it alone in the next Lok Sabha elections and win all the 40 seats in Tamil Nadu to assert the state’s rights at the Centre, party head and chief minister J Jayalalithaa said. “We can neither depend on the BJP nor the Congress. We have to chart our own path and decide our future,” she said at the AIADMK general council meet. Jayalalithaa raked up the Cauvery water-sharing dispute with Karnataka to announce the AIADMK’s independent course, hitting the Bharatiya Janata Party’s efforts to woo her for a tie up for the general elections due in 2014.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X