• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

அப்துல் கலாம் மீது விழுந்த தாயின் கண்ணீர் துளிகள்!!

By A K Khan
|

-ஏ.கே.கான்

அப்துல் கலாம்.....

எங்கே இருந்து ஆரம்பிப்பது... இந்த மாமனிதர் குறித்த குறிப்புகளை

அவரது அக்னி சிறகுகள் புத்தகத்தில் Embodiment of Love என்ற தலைப்பில் தனது தாயார் குறித்து அந்த மகான் சொன்னதை வைத்து கலாம் யார் என்பதை கொஞ்சம் வலியோடு உணரலாம்..

அதில் கலாம் சொல்கிறார்..

1941ம் வருடம்.. இரண்டாம் உலகப் போர் கொழும்புவை எட்டிவிட்டதால் ராமேஸ்வரத்திலும் போர் மேகங்கள். ராமேஸ்வரத்தில் எங்களின் பெரிய கூட்டுக் குடும்பம் வசித்த அந்த சிறிய வீட்டின் கதவையும் போரின் தாக்கம் தட்டியது. இதனால் உணவில் ஆரம்பித்து எல்லாவற்றுக்கும் தட்டுப்பாடு.

kalam house Rameswaram

10 வயதான நான் வழக்கமாக காலை 4 மணிக்கு எழுந்து குளித்துவிட்டு எனது ஆசிரியரிடம் கணக்குப் பாடம் கற்கச் செல்வேன். எனது ஆசிரியர் மிக வித்தியாசமானவர். வருடத்துக்கு 5 பேருக்கு மட்டும் இலவசமாக டியூசன் எடுப்பார். குளிக்காமல் வந்தால் கூட சேர்க்கவே மாட்டார். இதனால் எனது தாயார் எனக்கு முன் எழுந்து என்னை குளிப்பாட்டி, தயார் செய்து படிக்க அனுப்பி வைப்பார்.

5.30 மணிக்கு திரும்பி வருவேன். எனக்காக என் தந்தை காத்திருப்பார். வந்தவுடன் என்னை பள்ளிவாசலுக்கு அழைத்துச் செல்வார். தொழுகை முடிந்ததும் திருக்குரான் வாசிக்க அரபிப் பள்ளிக்கு செல்வேன்....

(இதன் பிறகு அந்தச் சிறுவன் அப்துல் கலாம் கூறுவது தான் யாருக்கும் கண்ணீரை வரவழைத்துவிடும்... ஏழ்மையான குடும்பம் என்பதால் 10 வயதிலேயே வீட்டிற்காக ஏதாவது பணம் ஈட்ட வேண்டிய சூழல். இதனால் பேப்பர் போடும் வேலையை செய்துள்ளார் கலாம்)

கலாம் தொடர்கிறார்...

திருக்குரான் ஓதிவிட்டு ராமேஸ்வரம் ரோடு ரயில் நிலையத்துக்கு 3 கிலோ மீட்டார் தூரம் ஓடுவேன். அது போர் நேரம் என்பதால் மதுரை- தனுஷ்கோடி ரயில் அந்த ரயில் நிலையத்தில் நிற்காது. பேப்பர் பண்டல்களை தூக்கி பிளாட்பாரத்தில் வீசுவார்கள். அதை அள்ளி எடுத்துக் கொண்டு ராமேஸ்வரம் நகரின் வீடுகளுக்கு பேப்பர்களைப் போடுவேன். மற்றவர்களுக்கு முன் பேப்பர் போட்டுவிட வேண்டும் என்று தினமும் முனைப்போடு இருப்பேன். இதனால் வேக வேகமாக ஓடுவேன்.

My Mother: Embodiment of Love by Dr Abdul Kalam

பேப்பர் போட்டுவிட்டு 8 மணிக்கு வீட்டுக்கு ஓடி வருவேன்.. மிக எளிமையான காலை உணவு தான் எங்கள் வீட்டில் எப்போதும். அதிலும் கூட எனக்கு கொஞ்சம் அதிகம் தருவார் என் தாயார். நான் படித்துக் கொண்டே (பேப்பர் போடும்) வேலையும் பார்க்கிறேன் இல்லையா.. எனக்கு ஓட சக்தி வேண்டுமே, அதற்காக...

ஒரு நாள் இரவு என் வீட்டில் நடந்த சம்பவத்தை நான் இங்கே பகிர்வது அவசியம் என்று நினைக்கிறேன்.. இரவு அனைவரும் உண்டு கொண்டு இருந்தோம். நான் என் தாயார் சப்பாத்தி தரத் தர சாப்பிட்டுக் கொண்டே இருந்தேன். சாப்பிட்டு முடித்தபின் என் அண்ணன் என்னை வீட்டுக்கு வெளியே அழைத்துச் சென்றார்..

கலாம், நீ என்ன காரியம் செய்கிறாய்.. அம்மா நீ சாப்பிட சாப்பிட சப்பாத்தி தந்து கொண்டே இருக்கிறார். அவர் தனக்காக போட்ட சப்பாத்தியையும் உணக்கே தந்துவிட்டார். நீயும் எல்லாவற்றையும் தின்றுவிட்டாய். இனி வீட்டில் மாவும் இல்லை, சப்பாத்தியும் இல்லை.. கொஞசம் பொறுப்பாக நடந்து கொள். இது கஷ்டமான காலம். தாயாரை பசியில் வாட விடாதே என்றார்.

இந்த விவரத்தை கொஞ்சமும் உணராமல் சாப்பிட்ட எனக்கு கை கால்கள் நடுங்கிவிட்டன. என்ன காரியம் செய்துவிட்டோம் என கலங்கிப் போனேன். ஓடிப் போய் என் தாயாரை கட்டிக் கொண்டேன். அவரிடம் தான் தியாகம் கற்றேன்.

காலை 4 மணிக்கு எழுந்து படிக்க, பேப்பர் பண்டல் தூக்க, அதை வினியோகிக்க, பள்ளிவாசல் செல்ல, பள்ளிக்கூடம் செல்ல, மாலையில் பேப்பருக்கான பணம் வசூலிக்க என ஓடிக் கொண்டே இருப்பேன். ஆனாலும், இரவு 11 மணி வரை படிப்பேன். நான் சாதிப்பேன் என என் தாயார் நம்பியிருக்க வேண்டும்.

இதனால் அந்தக் கஷ்டத்திலும் எனக்கு தனியாக ஒரு மண்ணெண்ணெய் விளக்கைத் தந்து 11 மணி வரை படிக்க என் தாயார் உதவினார். அது மட்டுமல்ல, அவரும் என்னோடு விழித்திருப்பார்.. பின்னர் என்னை தூங்க வைத்துவிட்டே அவர் உறங்குவார்...

என் தாயார் அன்பும் கருணையும் நிறைந்தவர். எல்லாவற்றுக்கும் மேலாக ஒரு புனிதத் தன்மை கொண்டவர். 5 வேலை தொழுகை புரிவார். அவர் தொழுகை செய்யும்போது ஒரு புனித தேவதை மாதிரி எனக்குத் தெரிவார்.

இவ்வாறு சொல்லும் கலாம் தனது தாயாருடன் ஒரு முழு இரவு நாளில் நடந்த சம்பவத்தை ஒரு கவிதையாய் வடித்துள்ளார். இதுவும் விங்ஸ் ஆப் பயர் புத்தகத்தில் இருக்கிறது. அந்தக் கவிதையில் தனக்காக தனது தாயார் பட்ட கவலை, குடும்பத்திற்காக தினமும் காலை 4 மணி முதல் ஓட்டமே வாழ்க்கையாக்கிக் கொண்ட தனது இளைய மகனுக்காக அந்தத் தாயார் விட்ட கண்ணீரை கவிதையாய் சொல்கிறார் கலாம். இதைப் படிப்போர் யாரும் கண்ணீர் விடாமல் இருக்க முடியாது....

''தாய்'' என்ற தலைப்பிலான அந்தக் கவிதை....

''அம்மா...

எனக்கு இன்னும் நினைவிருக்கிறது அந்த நாள்.

எனக்கு வயது 10

அது ஒரு பெளர்ணமி தினம்

என் உலகம் உங்களுக்கு மட்டும் தானே தெரியும், அம்மா

நான் உங்கள் மடியில் படுத்திருக்கிறேன்..

திடீரென நள்ளிரவில் என் கால் முட்டியில் விழுந்த கண்ணீர் துளிகள்

என்னை திடுக்கிட்டு எழ வைத்தன

குழந்தையின் வலிகளை தாய் மட்டும் தானே உணர முடியும் அம்மா!''

ஓடி ஓடி உழைத்துப் படிக்கும் மகனை வருடியபடி கலாமின் தாயார் கண்ணீர் விட அந்தக் கண்ணீரின் வெப்பத்தில் எழுந்து தனது தாயாரை பார்த்த நினைவில் கலாம் எழுதிய கவிதை இது...

அந்தக் கவிதையை இப்படி முடிக்கிறார் கலாம்...

''உங்கள் அன்பும், உங்கள் பாதுகாப்பும், உங்கள் நம்பிக்கையும் எனக்கு பலம் தந்தன

இந்த உலகத்தை அச்சமின்றி எதிர்கொள்ள வைத்த தாயே,

இறுதித் தீர்ப்பு நாளில் நாம் மீண்டும் சந்திப்போம், என் அம்மா''!

அன்பு நிறைந்த தன் தாயாரை பார்க்க கலாம் போய்விட்டார் போல...

இந்த மாபெரும் மனிதரை கடந்த மாதம் பெங்களூரில் ராஜ்பவனில் என் மனைவி, மகளுடன் சந்தித்தேன்.

அந்த அறையில் இருந்த பெரியவர்களிடம் பேசியதை விட முதலாம் வகுப்பு படிக்கும் என் மகளிடம் தான் அதிகமாக பேசினார் குழந்தைகளின் செல்லமான அந்தக் குழந்தை.

My Mother: Embodiment of Love by Dr Abdul Kalam

''What do you want to become?'' என்ற அவரது கேள்விக்கு எனது மகள், ''Teacher'' என பதிலளிக்க.. அட, எனக்கு இருந்த ஆசை தான் உனக்கும் இருக்கா?... என அகம் மகிழ்ந்து சிரித்தார்.

அவரை சந்திக்க மேலும் பலரும் காத்திருக்கவே, மேற்கொண்டு அவரை தொல்லை செய்ய விரும்பாமல் அவரது ''விங்ஸ் ஆப் பயர்'' புத்தகத்தில் ஆட்டோகிராப் வாங்க வேண்டும் என்ற யோசனையை கைவிட்டுவிட்டு வெளியே வந்தோம். என் மகளின் முகத்தில் ஆட்டோகிராப் வாங்க முடியாத கவலை ரேகை.

நாங்கள் அறையை விட்டு வெளியே வந்த சில நொடிகளில் தானும் வெளியே வந்தவர், என் மகள் கையில் இருந்த புத்தகத்தை திறக்கச் சொல்லி ஆட்டோகிராப் போட்டுவிட்டு மகளின் முகத்தில் புன்னகையை வர வைத்துவிட்டுத் தான் திரும்பினார்.

மனிதம்!

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!

 
 
 
English summary
This is the story of my mother who lived ninety three years, a woman of love, a woman of kindness and above all a woman of divine nature. My mother performed Namaz five times everyday. During Namaz, my mother always looked angelic. Every time I saw her during Namaz I was inspired and moved.- A.P.J. Abdul Kalam
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Oneindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Oneindia website. However, you can change your cookie settings at any time. Learn more