For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

இந்தி அல்லது சமஸ்கிருதம் வந்தால் மீண்டும் ஒரு இந்தி எதிர்ப்புப் போராட்டம்- க. பொன்முடி

Google Oneindia Tamil News

சென்னை: இந்தி அல்லது சமஸ்கிருதம் திணிக்கப்பட்டால் மீண்டும் ஒரு இந்தி எதிர்ப்பு போராட்டம் வெடிக்கும் என்று திமுக மூத்த தலைவர்களில் ஒருவரும் முன்னாள் உயர் கல்வித்துறை அமைச்சருமான க. பொன்முடி எச்சரிக்கை விடுத்துள்ளார்.முன்னாள் துணைவேந்தர் பாலகுருசாமியின் இந்தி ஆதரவு கருத்துக்கும் அவர் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக க. பொன்முடி வெளியிட்ட அறிக்கை:

முன்னாள் துணைவேந்தர் பாலகுருசாமி, தான் ஒரு கல்வியாளர் என்ற நிலை தாண்டி, பழுத்த அரசியல்வாதி போல், தனது இந்தி மொழி மீதான விருப்பத்தை வெளியிட்டு, மத்திய அரசின் மும்மொழிக் கொள்கைக்குச் சிவப்புக் கம்பளம் விரித்துள்ளார்.

புதிய கல்விக் கொள்கைக்கு 100% பச்சைக் கொடி காட்டியுள்ளார். அவர்தம் விருப்பப்படி, பள்ளிகளில் இந்தி இல்லை என்றால்:

(அ) தேசப்பற்று, தேசிய ஒற்றுமை மற்றும் தேசிய நல்லிணக்கம் போன்றன அழிந்துவிடுமாம்

(ஆ) தனிமனிதனின் அறிவும் ஆளுமையும் சரிந்து விடுமாம்;

(இ) மாநிலங்களுக்கிடையேயான வேலைவாய்ப்பு மற்றும் வியாபாரத்தின் வாய்ப்புகள் குறைந்து விடுமாம்;

(ஈ) நாட்டு மக்களிடையே நல்லெண்ணம் இல்லாததாகி விடுமாம்

(உ) உலகளவிலான பன்னாட்டு மற்றும் உள்நாட்டு வேலைவாய்ப்புகள் இருக்கவே இருக்காதாம்.

இவ்வளவு நீண்ட அனுபவமும், கல்வி அறிவும் உடைய பாலகுருசாமிக்கு - தேசப்பற்று, நாட்டு மக்களிடையே நல்லெண்ணம், பன்னாட்டு நிறுவனங்களில் வேலைவாய்ப்பு என்பதன் இலக்கணமும், பொருளும் புரியாமல் இருப்பது அல்லது புரிந்தும் யாரையோ திருப்திப்படுத்த தெரியாமல் இருப்பது போல் எழுதி இருப்பது, மிகுந்த வருத்தத்திற்குரியது; கண்டனத்துக்குரியது.

Former Minister Ponmudi statement on Hindi Imposition

இப்படிப்பட்ட கருத்துடையவர், இந்தி மொழி மீது காதல் உள்ளவர், அண்ணா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக இருந்த போதே அன்றைய ஆட்சியாளர்களிடம் சொல்லி இருக்கலாம் அல்லது பல்கலைக்கழகம் தன்னாட்சி கொண்ட நிறுவனம்தானே ! தைரியமும் துணிவும் இருந்திருந்தால், இந்தியை ஒரு விருப்ப மொழியாக அறிமுகப்படுத்தி இருக்கலாம். அன்று பதவி முக்கியம்; இன்று பதவி பெறுவது முக்கியம்!

அரசுப் பள்ளி மாணவர்களுக்கு, இந்தியை பாடமாகப் படிக்க வைக்க வேண்டும் என்பது அவர்தம் வாதம். அதாவது, தற்போது அரசுப் பள்ளியில் பாகம் ஒன்றில் தமிழும் பாகம் இரண்டில் ஆங்கிலமும் மொழிப் பாடங்களாக அளிக்கப்படுகிறது. பாகம் மூன்று ஒன்றை உருவாக்கி, அதில் இந்தி சமஸ்கிருதம் போன்ற, நான்கு அல்லது ஐந்து மொழிப் பாடங்களை தெரிவுகளாக வைத்து, விருப்பமான மொழியைத் தேர்வு செய்து படிக்க வைக்க வேண்டும் என்கிறார். பூனைக்குட்டி வெளியே வந்துவிட்டது; சமஸ்கிருதத்துக்கு நேரடியாக வக்காலத்து வாங்காமல் மறைமுகமாகச் சொல்லப்படுகிறது; இந்தியால் பலன் உண்டு என்று சொல்லி சமஸ்கிருதத்தைப் படிக்க வைக்க வேண்டும் என்பதுதான் மறைமுக சமஸ்கிருதத் திணிப்பு.

தமிழ்நாட்டுப் பள்ளிகளில் கல்லூரிகளில் பல்கலைக்கழகங்களில் படித்தவர்களில், வேலைவாய்ப்பைப் பெற்று வெளிநாடுகளில் பணி புரிவோர் ஏறக்குறைய 15 சதவீதமாகவும், தமிழ்நாட்டிலேயே பணிபுரிவோர் சுமார் 80% பேராகவும் உள்ளனர். தமிழ்நாட்டைத் தாண்டி பிற மாநிலங்களில் பணியாற்றுவோர், நம் மாநிலத்தில் பணி கொடுக்கப்பட்டு பணி மாறுதல் நிமித்தம் அல்லது பணி உயர்வு நிமித்தம் வெளிமாநிலங்களுக்குப் போகின்றவர்கள் மட்டும்தான். ஆனால், அப்படியானவர்களின் எண்ணிக்கை மிக மிகக் குறைவு.

வெளிநாட்டு வேலைக்கு ஆங்கிலம் பேசுவதும் எழுதுவதும் அவசியம் என்று தற்போது பள்ளி முதல் கல்லூரி வரை மிகுந்த அக்கறை எடுத்துக் கொண்டு, ஆங்கிலம் பேசவும் எழுதவும் கற்பிப்பதற்காக ஒவ்வொரு கல்வி நிறுவனங்களும், கங்கணம் கட்டிக் கொண்டு பயிற்சிகளை அளித்து வருகின்றன. இந்த நிலையில் இங்கே இந்திமொழி எங்கே தேவைப்படுகிறது?

மத்திய அரசுப் பணிகளுக்குத் தேர்வு எழுதும்போது, ஆங்கிலத்திலும் தமிழிலும் எழுதலாம் என்ற விதிமுறை வந்த பிறகு, தற்போது தாய்மொழி தமிழ் மொழியில் எழுதி, சிவில் சர்வீஸ் தேர்வுகளில் பெருமளவில் வெற்றி பெறுகின்றனர் தமிழ்நாட்டு மாணவர்கள். இதில் எங்கே "இந்தி" உதவுகிறது அல்லது இந்திக்கல்வி தேவைப்படுகிறது?

மாநில உரிமைகளை பாதுகாக்க முன்னெப்போதும் இல்லாத வகையில் தேவைப்படுகிறார் கருணாநிதி- மு.க.ஸ்டாலின்மாநில உரிமைகளை பாதுகாக்க முன்னெப்போதும் இல்லாத வகையில் தேவைப்படுகிறார் கருணாநிதி- மு.க.ஸ்டாலின்

மொழி என்பது அறிவு அல்ல. பல மாநிலங்களுக்கு இடையே சரக்குந்து ஓட்டுபவர் சரளமாக பலமொழிகள் பேசுவார். தாய்மொழிக்கல்வி வழியில் பெறும் அறிவே ஒருவரை உயர்த்தும். பணியின் தேவைக்கேற்ப எந்த மொழியையும் எந்தக் காலத்திலும், யாராலும் கற்றுக்கொள்ள முடியும். இந்தி தெரிந்தால் மட்டுமே இந்தியா முழுக்க வேலை செய்ய முடியும் என்பது மிகவும் போலியான காரணம்.

இந்தி மட்டுமே தெரிந்த மாநிலங்களில் இருந்துதான் அதிக அளவில் மக்கள் வேலையின்றி புலம்பெயர்ந்து பல்வேறு மாநிலங்களுக்குச் செல்வதை நாம் கண்கூடாகக் கண்டுள்ளோம். அப்படியானவர்கள் கூட அங்கே இந்தி தெரியும் என்ற காரணத்தால் வேலை பெறுவதில்லை. உடல் உழைப்பு மூலமாக மட்டுமே வேலை பெறுகின்றனர். நமது தமிழ்நாட்டில் இளைஞனை வட இந்திய மாநிலங்களின் புகைவண்டி நிலையங்களில் 'சாயா' (டீ) விற்கத் தயார்படுத்த வேண்டுமென்றால் அவனுக்கு இந்தி கற்றுக் கொடுக்கலாம்.

இன்று உச்சநீதிமன்றத்தில், டெல்லியில் மிகப்பெரிய அளவில் பேசப்படுகின்ற வழக்கறிஞர்கள் பலர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள்; டெல்லியில் உள்ள மத்திய அரசு உயர் பதவியில் இருக்கின்றவர்கள் பலர் தமிழர்கள்; அவர்களுடன் ஆங்கிலத்தில் பேச உரையாட வழியில்லாதவர்கள், இந்தி மட்டுமே தெரிந்தவர்கள், அவர்களின் இயலாமையை வெளிக்காட்டிக் கொள்ளாமல், நம்மை, இந்தி படிக்க வைக்க வேண்டும் என்று நினைக்கிறார்கள்; நம்மவர்கள் சிலரும் அதற்கு ஜால்ரா போடுகிறார்கள். இந்தி படிக்கவில்லை என்றால் தேசியப் பற்று தேசிய ஒற்றுமை இல்லாமல் ஆகிவிடுமாம்.

இந்தித்தான் இந்தியன் என்பதற்கான அளவுகோலா?.. இது இந்தியாவா? இந்தித்தான் இந்தியன் என்பதற்கான அளவுகோலா?.. இது இந்தியாவா? "இந்தி"- யாவா?.. முக ஸ்டாலின் கேள்வி

ஆகஸ்ட் 8, 2020 அன்று பாரதப் பிரதமர் நரேந்திர மோடி பல்கலைக்கழக மானியக் குழு ஏற்பாடு செய்திருந்த "புதிய கல்விக் கொள்கை - 2020" விளக்கக் கூட்டத்தில், இந்திய அளவில் அனைத்து துணை வேந்தர்களிடையேயும் உரையாற்றினார்.

அன்று முழுப்பேச்சையுமே, இந்தியில் நிகழ்த்தினார். கலந்து கொண்ட 880 துணைவேந்தர்களுக்கும் ஆங்கிலம் நிச்சயம் தெரியும். ஏறத்தாழ 65% துணைவேந்தர்களுக்கு இந்தி தெரியாது. இவர்கள் மத்தியில் பிரதமர் தமது உரையை ஆங்கிலத்தில் நிகழ்த்தினால், அது தேசப்பற்று மற்றும் தேச ஒற்றுமைக்கு குந்தகமாகி விடுமா ? இல்லையே? பிரதமர் மட்டுமல்ல, மனித வள மேம்பாட்டு அமைச்சரும் இந்தியில்தான் உரை நிகழ்த்தினார்.

1923-ஆம் ஆண்டுக்கு முன்புவரை சென்னை மாகாணத்தில் மருத்துவப்படிப்பு படிக்க சமஸ்கிருதக் கல்வி அவசியம் என்ற நிலை இருந்தது. மருத்துவக் கல்வி ஆங்கிலத்தில்தான் கற்பிக்கப்பட்டது என்றாலும், சமஸ்கிருதம் படித்தவர்கள் மட்டுமே மருத்துவம் படிக்க முடியும் என்ற அநீதியான நிலை இருந்தது. ஆனால், 1923-இல் பனகல் அரசர் பனங்கன்டி இராமராயநிங்கார் அவர்கள், தமது பெருமுயற்சியால், மருத்துவக் கல்லூரியில் சேர்ந்து பயில சமஸ்கிருதமொழி தெரிந்திருத்தல் அவசியம் என்றிருந்த அநீதியான விதியை நீக்கி அரசு ஆணை பிறப்பித்தார். சமஸ்கிருதம் படித்தவர்கள் மட்டுமே மருத்துவக் கல்வி படிக்கவேண்டும், மற்றவர்கள் படிக்கக்கூடாது என்ற வன்ம உணர்வே அதற்குக் காரணம் என்பதை அறிந்து கொண்டதாலேயே, அன்றைய முதல்வர், "மருத்துவக் கல்லூரியில் பயில மாணவர்கள் சமஸ்கிருதம் அறிந்திருக்க வேண்டியதில்லை" என்ற வரலாற்றுச்சிறப்பு மிக்க ஆணையைப் பிறப்பித்தார்.

அதற்குப் பிறகுதான், கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தமிழ்நாடு பகுதிகளில், பிற்படுத்தப்பட்டவர்கள், தாழ்த்தப்பட்டவர்கள், இசுலாமியர்கள், கிறித்தவர்கள் என அனைத்துத் தரப்பினரும் மருத்துவக் கல்வி பயிலும் வாய்ப்பினைப் பெற்றனர்.

1857-ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட சென்னைப் பல்கலைக்கழகத்தில் 1923 வரை, அதாவது நீதிக்கட்சியின் சார்பாக பனகல் அரசர் ஆட்சிக்கு வரும் வரை, சமஸ்கிருதம் உள்ளிட்ட பல்வேறு மொழிகள் கற்பிக்கப்பட்ட போதிலும், தமிழ்வழிக் கல்வி இல்லாமல் இருந்தது. அதுவரை, குறுகிய நோக்கம் கொண்ட கூட்டத்தின் ஆதிக்கத்தில் இருந்த பல்கலைக்கழக ஆட்சி மன்றக்குழுவில், உறுப்பினர்களை அதிகப் படுத்தியும், எல்லா வகுப்பினருக்கும்,பொது நிறுவனங்களுக்கும், கல்வி நிறுவனங்களுக்கும் பிரதிநிதித்துவம் இருக்கும்படியும், சென்னைப் பல்கலைக்கழகச் சட்டம் 1923-ஆம் ஆண்டு பனகல் அரசரால் நிறைவேற்றப்பட்டது. இதன் மூலம் சென்னைப் பல்கலைக்கழகத்தில், குறிப்பிட்ட சமூகத்தினரின் ஆதிக்கத்திற்கு கடிவாளம் போடப்பட்டது. 1927-1928-ஆம் ஆண்டிற்குப் பின்னர்தான் தமிழ்மொழிக்கல்வி மூலமாக மாணவர்கள் பட்டம் பெற முடிந்தது.

கனிமொழி போட்ட கனிமொழி போட்ட "ஹிந்தி வெடிகுண்டு".. விடுமா பாஜக.. "இந்தி இல்லாமல் இந்தியா இல்லை" பதில் முழக்கம்

சமஸ்கிருதம் சார்ந்த இத்தகைய ஒடுக்குமுறைகளையும், அநீதிகளையும் போராடிக் களைந்த நமது மாநிலம், மும்மொழிக் கொள்கையை அனுமதிப்பதன் மூலம் மீண்டும் அத்தகைய அடிமைத்தளையில் சிக்க வேண்டுமா? இந்தியை துணைக்கழைத்துக் கொண்டு புழக்கடை வழியாக மீண்டும் வரும் சமஸ்கிருதத்தை நாம் அனுமதிக்க வேண்டுமா?

தற்போது பாடச் சுமையின் காரணமாக, அரசுப் பள்ளி மாணவர்கள் "நீட்" போன்ற தேர்வுகளுக்குத் தங்களைத் தயார் படுத்திக்கொள்ள அல்லற்படுகின்றனர். சமூகநீதிப்படியான வாய்ப்புகள் மறுக்கப்படுவதால், அப்படியான மாணவர்களின் மருத்துவராகும் கனவு, பகல் கனவாகி விட்டது இதற்கு மேலும் ஒரு பாடம் - அதுவும் இந்தி அல்லது சமஸ்கிருதம் என்று வருமானால், மற்றுமொரு இந்தி எதிர்ப்புப் போராட்டத்திற்கு இளைஞர் பட்டாளம் தள்ளப்படும் என்பது திண்ணம். இவ்வாறு பொன்முடி கூறியுள்ளார்.

English summary
Former Minister K Pondmudi issued a statement on the Hindi Imposition and New Education Policy.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X