என்ன வேணா பண்ணுங்க.. ஆனா இப்படி மட்டும் தங்கத்தில் முதலீடு பண்ணாதீங்க.. எச்சரித்த வல்லுநர் !
சென்னை: இந்தியாவின் சவரன் தங்கப் பத்திரத் திட்டம் (SGB) மிக மோசமான திட்டம், இதைவிட முட்டாள்தனமான திட்டம் இருக்க முடியாது என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.
இந்தியாவின் சவரன் தங்கப் பத்திரத் திட்டம் (SGB), தங்க இறக்குமதியைக் கட்டுப்படுத்தும் ஒரு புதுமையான தீர்வாக அறிமுகப்படுத்தப்பட்டது. ஆனால், "ஃபண்டூ ப்ரொஃபசர்" என்று பிரபலமாக அறியப்படும் முதலீட்டாளரும் கல்வியாளருமான சஞ்சய் பக்ஷி, இந்தத் திட்டத்தை கடுமையாக விமர்சித்துள்ளார்.

உலகின் மோசமான தங்க சேமிப்பு திட்டம்
X சமூக வலைதளத்தில் பக்ஷி, இத்திட்டத்தை "உலகின் மிக மோசமான அரசு கடன் திட்டங்களில் ஒன்று" என்று வர்ணித்துள்ளார். இதன் வடிவமைப்பில் உள்ள அதிக கடன் செலவு மற்றும் மோசமான இடர் மேலாண்மையே இவரின் விமர்சனத்திற்குக் காரணம்.
"கடன் வாங்குவதற்கான உண்மையான செலவு ஆண்டுக்கு 19% ஆக உள்ளது. இந்தத் திட்டத்தை வடிவமைத்தவர்கள், உலகின் மிக மோசமான அரசு கடன் திட்டங்களில் ஒன்றைப் உருவாக்கியதற்காக விருது பெற வேண்டும்" என்று பக்ஷி குறிப்பிட்டுள்ளார்.
சவரன் தங்கப் பத்திர திட்டம்
இந்திய ரிசர்வ் வங்கி, இந்திய அரசின் சார்பாகச் சவரன் தங்கப் பத்திர திட்டத்தை (Sovereign Gold Bond - SGB) 2015-ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தியது. தங்கத்தை நேரடியாக வாங்குவதற்கு ஒரு மாற்று வழியாக இது உருவாக்கப்பட்டது. பாரம்பரியமாக, இந்தியர்கள் தங்கத்தை ஒரு பாதுகாப்பான முதலீடாகக் கருதுகின்றனர். ஆனால், அதைச் சேமிப்பதும் பாதுகாப்பதும் சில சமயங்களில் ஆபத்தாக அமையலாம்.
இந்தச் சிக்கலுக்குத் தீர்வாக, சவரன் தங்கப் பத்திர திட்டம் உருவானது. இத்திட்டத்தின் கீழ், நகைகள் அல்லது நாணயங்களாகத் தங்கத்தை வாங்குவதற்குப் பதிலாக, காகித வடிவிலோ அல்லது டிஜிட்டல் வடிவிலோ தங்கத்தில் முதலீடு செய்ய வழிவகை செய்யப்பட்டுள்ளது.
இந்தத் திட்டத்தின் மூலம், பொதுமக்கள் தங்கப் பத்திரங்களை வாங்கலாம். இந்த பத்தரங்களின் மதிப்பு தங்கத்தின் விலையுடன் இணைக்கப்பட்டுள்ளது. குறைந்தபட்சம் ஒரு கிராம் தங்க மதிப்பில் இருந்து இந்தப் பத்திரங்களை வாங்கலாம். இந்தப் பத்திரங்களின் முதிர்வு காலம் 8 ஆண்டுகள். இருப்பினும், முதலீட்டாளர்கள் 5 ஆண்டுகளுக்குப் பிறகு வெளியேற அனுமதிக்கப்படுகிறார்கள்.
சவரன் தங்கப் பத்திர திட்டத்தின் முக்கிய அம்சங்களில் ஒன்று, தங்கத்தின் விலை உயர்வுக்கு இணையாக, அரசு ஆண்டுக்கு 2.5% நிலையான வட்டியை (ஆறு மாதங்களுக்கு ஒருமுறை வழங்கப்படும்) வழங்குகிறது. முதிர்ச்சியின் போது, முதலீட்டாளர்களுக்குத் தங்கத்தின் சந்தை மதிப்பு பணமாக வழங்கப்படும். இது நேரடியாகத் தங்கமாக வழங்கப்படாது.
சவரன் தங்கப் பத்திரங்களின் நன்மைகள்:
பாதுகாப்பு: அரசு ஆதரவுடன் வருவதால், இவை திருட்டு அல்லது தூய்மையின்மை போன்ற அபாயங்களில் இருந்து விடுபடுகின்றன.
கூடுதல் வருமானம்: தங்கத்தின் விலை உயர்வைத் தவிர, முதலீட்டாளர்கள் ஆண்டுக்கு 2.5% வட்டி ஈட்டலாம். இது தங்க நகைகளில் சாத்தியமற்றது. வரி + தங்கம் விலை உயர்வு என்ற இரண்டு வருமானம் கிடைக்கும்.
வரிச் சலுகைகள்: முதிர்வு காலம் வரை (8 ஆண்டுகள்) பத்திரங்களை வைத்திருந்தால், மூலதன ஆதாயங்கள் (தங்க விலை உயர்வால் கிடைக்கும் லாபம்) வரி விலக்கு பெறுகின்றன. இது மற்ற முதலீடுகளை விட ஒரு பெரிய நன்மை.
செய்கூலி இல்லை: நகைகள் வாங்கும்போது செய்கூலி செலுத்த வேண்டும். ஆனால், சவரன் தங்கப் பத்திரங்களில், நேரடியாகத் தங்கத்தின் மதிப்பில் முதலீடு செய்யப்படுகிறது.
சவரன் தங்கப் பத்திரங்களின் குறைபாடுகள்:
நீண்ட கால முதலீடு : முதிர்வு காலம் 8 ஆண்டுகள் என்பதால், இது நீண்ட காலமாகத் தோன்றலாம். 5 ஆண்டுகளுக்குப் பிறகு வெளியேற முடிந்தாலும், இது பலன்களை குறைக்கிறது.
சந்தை அபாயம்: எதிர்காலத்தில் தங்கத்தின் விலை குறைந்தால், பத்திரங்களின் மதிப்பும் குறையும்.
நேரடி தங்கம் இல்லை: சில முதலீட்டாளர்கள் தனிப்பட்ட பயன்பாட்டிற்காகத் தங்கத்தை நேரடியாக வைத்திருக்க விரும்புகிறார்கள். சவரன் தங்கப் பத்திரங்கள் முதிர்வில் பணமாக மட்டுமே வழங்குகின்றன.
வேறு சிக்கல்கள்: சவரன் தங்கப் பத்திரங்கள் பங்குச் சந்தைகளில் பட்டியலிடப்பட்டிருந்தாலும், வர்த்தக அளவு குறைவாகவே உள்ளது. இதனால் இவற்றை விரைவாக விற்பது கடினமாக இருக்கலாம்.












Click it and Unblock the Notifications