தண்டுக்கீரை.. அப்பறம் பருப்புக்கீரை.. அடேங்கப்பா ஆச்சரியத்தை கிளப்பும் கீரை விதைகள்.. வரப்பிரசாதம்
சென்னை: கீரைகள் எந்த அளவுக்கு பயன்களை தருகிறதோ, அதுபோலவே நன்மைகளை தரக்கூடியது அந்த கீரைகளின் விதைகளும்.. அந்தவகையில், ஒருசில கீரை வகைகளை பற்றி பார்ப்போம்.
அரைக்கீரையை எடுத்து கொண்டால், மிகவும் சூட்டை கிளப்ப கூடிய தன்மை வாய்ந்தது.. அதனால்தான், காய்ச்சல், குளிர், கபம் போன்ற நோய்களை தீர்ப்பதில் இந்த கீரைக்கு பெரும்பங்கு உண்டு.

அரைக்கீரை: இந்த கீரையுடன் சுக்கு மிளகு, இஞ்சி, மஞ்சள் சேர்த்து கஷாயம் போல வைத்து குடித்தால், ஜன்னி, வலிப்பு நோய், குளிர்காய்ச்சல் நீங்கும்.. நெஞ்சில் உள்ள சளியும் கரைந்துவிடும். தாம்பத்ய வாழ்க்கை சிறப்புற இந்த அரைக்கீரையை அடிக்கடி சமைத்து சாப்பிட வேண்டும் என்பார்கள்.. ரத்த சோகை, வாயு பிரச்சனை, வாத நோய் பிரச்சனை, மலச்சிக்கல், சுவாச கோளாறுகள் உள்ளவர்களுக்கு இந்த கீரை அருமருந்தாகும்.
இந்த கீரையின் விதைகளிலும் ஏராளமான சத்துக்கள் ஒளிந்திருக்கின்றன.. கீரை விதைகளை மாவு போல அரைத்து, கோதுமை மாவுடன் கலந்து சப்பாத்தி செய்து சாப்பிடலாம்.. இந்த விதைகள் கெட்ட கொழுப்பை குறைக்கக்கூடியது.. எனவே, இதயநோய் வராமல் தடுக்கின்றன என்பதை ஆய்வுகள் நிரூபித்துள்ளன.
தலைமுடி வளர்ச்சி: அரைக்கீரையிலிருந்து தைலம் தயாரிப்பார்கள்.. இந்த தைலம் தலைமுடி வளர்ச்சிக்கு மிகவும் நல்லது.. கண்ணுக்கும் குளிர்ச்சியை தருகிறது.. ஒருவேளை, இந்த விதையின் தைலம் கிடைக்காவிட்டால், அரைக்கீரை விதையையே, நல்லெண்ணெய்யில் சேர்த்து காய்ச்சி, அதை வடிக்கட்டி தலைக்கு தடவினாலே போதும்.. பளபள தலைமுடி அடர்ந்து கிடைக்கும்.
அதேபோல, தண்டுக்கீரையை எடுத்துக் கொண்டால், கல்லீரல், சிறுநீரகம், குடல் என அனைத்து முக்கிய பாகங்களில் ஏற்படும் பிரச்சனைகளை இந்த கீரை சீர்செய்கிறது.. அல்சர் புண்களை ஆற்றுகிறது.. மலச்சிக்கலையும் தீர்க்கிறது. புற்றுநோய்களிலேயே மிக மோசமான, வயிற்றுப்புற்றுநோய் பாதிப்பை தடுப்பதில் பெரும்பங்கு இந்த தண்டுக்கரைக்கு உண்டு.
தண்டுக்கீரை: அதேபோல, மஞ்சள் காமாலையால் பாதிக்கப்பட்டவர்கள், கல்லீரல் பாதிப்புகள் கொண்டவர்கள், இந்த தண்டுக்கீரையை சேர்த்து கொள்ள வேண்டும். சிறுநீரகங்களில் படியும் கற்கள் கரைந்துவிடும்.. நச்சுக்கள் வெளியேறும்..
இந்த கீரையின் விதைகளை அமராந்த் என்பார்கள்.. புரோட்டீன்களும், நார்ச்சத்தும் நிரம்பி உள்ளதால், உடல் எடையை இந்த விதைகள் குறைக்கின்றன. நரைமுடிகளை போக்க பயன்படுகிறது.. ரத்த சர்க்கரையை சீராக வைத்திருக்க உதவுகிறது. கொலஸ்ட்ரால் அளவை மேம்படுத்த உதவுகிறது. இதனால் இதய ஆரோக்கியம் காக்கப்படுகிறது.
தலைமுடிக்கும், எலும்புக்கும், பற்களுக்கும் வலுவை தரக்கூடியது. உடலில் கொலாஜன் உற்பத்தி செய்வதில் இந்த விதைக்கு பெரும்பங்கு உண்டு.
அமராந்த்: தண்டுக்கீரையின் விதையில் குளூட்டன் என்ற புரதம் இல்லை என்பதால், குளூட்டன் அலர்ஜி உள்ளவர்கள் இந்தக் கீரை விதையை அதிகமாகவே சாப்பிடலாம்.. இந்த விதையை கடைந்து, பாலில் கலந்து குடிக்கலாம்.. சத்தான உணவுகளிலும் கலந்து சாப்பிடலாம். கட்லெட் செய்யலாம். தோசை மாவுடன் கலந்து சாப்பிடலாம்.. விதைகளை மாவாக அரைத்து, கோதுமை மாவுடனும் சேர்த்து சப்பாத்தி செய்யலாம்.
பருப்புக்கீரை விதைகளும், உடலுக்கு பல நன்மைகளை தருகின்றன.. இந்த பருப்பு கீரையின் விதைகளை 4 கிராம் மட்டுமே எடுத்து, அதை கழுவி இளநீரில் கலந்து குடித்தால், வயிற்று எரிச்சல், சீதபேதி நிற்கும்.
முருங்கை விதை: முருங்கையின் விதைகள் ஆண்களுக்கு மிகவும் நல்லது.. இந்த விதையை நெய்யில் வறுத்துப் பொடித்து, பாலுடன் சேர்த்து காய்ச்சிக் குடித்தால் விந்தணுக்கள் அதிகரிக்கும். நரம்புகள் வலுப்பெறும்.
இந்த விதைகளை உலர்த்தி, பொடி செய்து பாலில் கலந்து 48 நாட்கள் சாப்பிட்டு வந்தால், ரத்த சோகை பிரச்சனை நீங்கும்.. இதயத்தை பலப்படுத்தும்.. சர்க்கரை நோய் வந்தவர்களும், முருங்கை விதைகளை பொடி செய்து, சூப் ஆகியவற்றில் மிளகுடன் சேர்த்து சாப்பிடலாம். கால்சியம் அதிகமாக உள்ளதால், பற்களுக்கும், எலும்புகளுக்கும் உறுதித்தன்மையை தரும்.. கொழுப்புகளை அகற்றுவதில் முருங்கை விதை சூப் சிறப்பாக செயல்படுகிறது.. உடலில் நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்கும்.
முருங்கை எண்ணெய்: இந்த முருங்கை விதையிலிருந்து தயாரிப்பதுதான், முருங்கை எண்ணெய்.. சருமத்துக்கும் கூந்தலுக்கும் நிறைய ஆரோக்கியத்தை தரக்கூடியது.. இந்த எண்ணெயிலும், புரோட்டீன், நிறைவுற்ற கொழுப்பு போன்ற சத்துக்கள் இருக்கின்றன..
இப்படி பல்வேறு நன்மைகளை கீரைகளின் விதைகள் தந்தாலும், மருத்துவர்களிடம் முறையான வழிகாட்டுதலுடன் இந்த விதைகளை மருந்தாக எடுத்து கொள்வது ஆரோக்கியத்துக்கு கூடுதல் நன்மை தரும்.












Click it and Unblock the Notifications