குழந்தை நீதி கதைகள்: தூக்கி போட்ட சின்ன விஷயம் கூட எப்படி உதவுது பார்த்தீங்களா? யார் இந்த டொனால்ட்!
சென்னை: Kids story in Tamil:
ஹலோ சுட்டிஸ், எப்படி இருக்கீங்க.. இந்த கோடையில் உங்களுக்கெல்லாம் எதாவது செய்யணும்னு ஆசை இருக்கா. செடிகள் நடுவது, சுவற்றில் வண்ணங்கள் வரைவது அப்படி எதாவது இருந்தால் கண்டிப்பா இந்த கதையை படிங்க.
பள்ளியில் கோடை விடுமுறை அறிவிச்சாங்க. அப்போ அந்த வகுப்பின் ஆசிரியர், அடுத்த வருடமும் நான்தான் உங்களுக்கு வகுப்பு ஆசிரியை ஆகையால் உங்க எல்லோருக்கும் ஒரு அசைன்மென்ட் தருகிறேன். கண்டிப்பாக எல்லோரும் செய்ய வேண்டும் என்றார். அந்த வகுப்பு மாணவர்கள் சொல்லுங்க மிஸ் சொல்லுங்க, என மிகவும் ஆர்வமாக அது என்ன என்று கேட்க, ஆசிரியை சொன்னார் இந்த கோடை முடிந்து நீங்கள் வரும்போது உங்கள் கைகளில் அழகான பூந்தொட்டி இருக்க வேண்டும். முக்கியமாக அதை நீங்களே செடியாக வாங்கி ஒரு மாதம் முழுவதும் பராமரிக்க வேண்டும்.

மேலும் அந்த செடியை நீங்கள் பராமரித்த விதத்தை பற்றி நான் கேட்பேன். பள்ளி திறந்ததும் ஒருநாளில் நீங்கள் வளர்த்த அழகான பூ செடியை கொண்டு வர வேண்டும். யார் நன்றாக வளர்த்து பூக்கள் நிறைத்து கொண்டு வருகிறார்களோ அவர்களுக்கு நான் பரிசு தருவேன் என்றார். அது பெரிய செடியாக இருக்க வேண்டியது இல்லை. ஒரு சின்ன பூந்தொட்டியில் அழகான பூக்களுடன் நன்றாக பராமரித்தால் போதும் என்றார்.
அவ்வளவு தான், மாணவ மணிகள் குஷியாகி அருகில் இருக்கும் செடி கடைகளுக்கு சென்று தங்களுக்கு பிடித்த பூ செடிகளை சின்னதாக வாங்கினர். அனைவரும் வீட்டுக்கு எடுத்து கொண்டு போய் நன்றாக பேணி வளர்த்தார்கள். அந்த பள்ளியில் டொனால்ட் படித்தான். அவனுக்கு அம்மா மட்டும் தான் இருந்தார். அவர் பார்க்கும் வேலைக்கு இவனை படிக்கச் வைப்பதே கடினமாக இருந்தது.
இந்நிலையில் அம்மாவை கஷ்டப்படுத்த டொனால்ட் விரும்பவில்லை. அதனால் என்ன செய்வது என யோசித்து கொண்டிருந்தான். அப்போது ஒரு பழக்கடை அருகில் வீணாய் போன ஆப்பிள் மற்றும் ஆரஞ்சுகளை பார்த்தான். அவனுக்கு ஒரு யோசனை வந்தது, உடனே எடுத்துக்கொண்டான். பின்பு வழியில் மரங்களை பார்த்தான் அதில் ஆர்கான் மரத்தின் கிளையை நொறித்து கொண்டான். மேலும் கான்கர் மரத்தின் கிளைகளையும் நொறித்தான்.
இவற்றை வைத்து பராமரிக்க பூந்தொட்டி வேண்டுமே என யோசித்தான். அவனது வீட்டின் அருகில் இருந்த ஒரு வயதான பெண்மணியின் பூந்தொட்டி கடைக்கு சென்றான். அங்கு பூந்தொட்டிகள் விலை அதிகமாக இருந்தது. அவன் அம்மாவிடம் சொல்லி இதை வாங்க முடியும் என்று அவனுக்கு தோன்றவில்லை. ஆகையால் அந்த வயதான பெண்மணியிடம் உங்களுக்கு உதவாது என இருக்கும் பூந்தொட்டிகள் எனக்கு தர முடியுமா என பணிவாக கேட்டான்.
அந்த பெண்மணியும் அவனின் பரிதாப நிலையை எண்ணி ஓரமாக வைத்திருந்த சில பூந்தொட்டிகளை காண்பித்தார். அதில் உனக்கு உபயோகப்படும் தொட்டிகள் இருந்தால் எடுத்துக்கொள் என்றார். அவன் சந்தோசமாக எடுத்துக்கொண்டு வீட்டிற்கு சென்றான். அது உடைந்தெல்லாம் போகாததால் அவன் அதை சுத்தம் செய்தான். பின்பு அதில் மண்களை நிரப்பி ஆப்பிள் மற்றும் ஆரஞ்சு விதைகளை விதைத்தான். மேலும் கொண்டு வந்த மரக்கிளைகளையும் நட்டு வைத்தான்.
தினமும் தண்ணீர் ஊற்றி பராமரித்தான். ஆனால் எந்த முன்னேற்றமும் இல்லை. பள்ளியும் திறக்கும் நாள் நெருங்கியது. ஆனால் டொனால்ட் மனம் தளரவில்லை. பள்ளி திறந்ததும் மாணவர்கள் தாங்கள் வளர்த்த செடிகள் எப்படி பூத்திருக்கிறது என பெருமை பாடி கொண்டிருந்தார்கள். சிலரோ அன்றுதான் புதிதாக நன்றாக பூத செடிகளை வாங்கினார்கள். டொனால்ட் செடி எந்த முன்னேற்றம் இல்லை. அதனால் அவன் அமைதியாக இருந்தான்.
ஆசிரியை வந்தார். அனைவரது செடிகளும் தயாராக இருக்கிறதா என்று கேட்டார். எல்லோரும் ஒரே சத்தமாக ஆமாம் மிஸ் என்றார்கள். சரி இன்னும் 10 நாட்களில் உங்கள் பூ செடிகளை கொண்டு வரவேண்டும் என்றார். மாணவர்களும் சரி மிஸ் என உரக்க கூறினர். டொனால்ட் அமைதியாக இருப்பதை பார்த்த ஆசிரியை நீ எதுவும் செய்யவில்லையா என்றார். அவன் அதற்கும் பதில் கூறவில்லை.
அந்த பத்து நாட்கள் வருவதற்குள் அதை பற்றி மட்டுமே பேச்சாக இருந்தது. டொனால்டின் செடி மெல்லமாக முளைத்து தலை தூக்க ஆரம்பித்தது. நட்டு வைத்த கிளைகளிலும் தளிர் விட்டு டொனால்டின் நம்பிக்கையை அதிகரித்தன. அந்த நாளும் வந்தது. அந்த வகுப்பே பூக்கோலமாய் இருந்தது.
அதில் டொனால்டின் செடியை பார்த்து அனைவரும் சிரித்தார்கள் ஏன்னெனில் இது பூச்செடிக்கான போட்டி நீ பூவே இல்லாத செடியை கொண்டு வந்துள்ளாய் என கேலி செய்தார்கள். அவன் சோகமாய் அமர்ந்தான். ஆசிரியை வந்ததும் ஒவ்வொருவரும் தங்களது செடியை காண்பித்து அதை எப்படி வளர்த்தார்கள் என்றும் கூறினார்கள்.
டொனால்ட் அவனது செடிகளை ஆசிரியையிடம் காண்பித்தான். மேலும் இதை அவன் எப்படி செய்தேன் என்பதையம் கூறினான். ஆசிரியை இப்பொது பரிசு அறிவிக்க வேண்டிய நேரம், பூ செடிகளுக்கான போட்டி என்பதால் லிண்டா இந்த பரிசை வெல்கிறாள். அவள் கொண்டு வந்த இந்த பிங்க் நிற பூக்கள் மட்டும் அல்ல அவள் பராமரித்து கொண்டு விதத்திற்காக இந்த பரிசு. இதை கேட்டதும் டொனால்ட் சோகமானான்.
ஆசிரியை இன்னும் ஒரு பரிசு கூட இருக்கிறது என்றார். எல்லோரும் ஆர்வமாக பார்க்க, ஆமாம் தன்னால் முடிந்த அளவுக்கு எதாவது செடி என்று அவன் கடினமாக உழைத்து கொண்டு வந்துள்ளதால் டொனல்டிற்கு ஒரு பரிசு உள்ளது என்றார் ஆசிரியை. டொனால்ட் மகிழ்ச்சியில் துள்ளினான். மற்ற மாணவர்களும் அவனது உழைப்பை பெருமையாக பார்த்தார்கள்.
அவன் சந்தோசமாக அவன் அம்மாவுடன் இதை கூறினான். அவன் ஞாபகமாக அந்த செடிகளை பள்ளியில் நட்டார்கள். இன்றும் அவன் வளர்ந்து பெரிய ஆள் அனாலும் அவன் கொண்டு வந்த செடிகள் மரமாக அவன் பள்ளியில் அவன் பெயரை வரும் மாணவர்களுக்கு சொல்லி கொண்டே உள்ளன.












Click it and Unblock the Notifications