தமிழகத்தில் இன்று
காத்மாண்டு:
ஒற்றைக் கொம்புடைய காண்டாமிருக (ரைனோசரஸ்) இனத்தின் எண்ணிக்கை, நேபாளத்தில் அதிகரித்துள்ளது.
1994-ம் ஆண்டு 466 காண்டாமிருகங்கள் மட்டுமே நேபாளத்தில் இருந்தன. ஆனால் இப்போது 512 காண்டாமிருகங்கள் உளளதாக ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது.
உலகிலேயே ஒற்றைக் கொம்புடைய காண்டா மிருகங்கள் இந்தியாவில்தான் அதிகம் உள்ளன. அதற்கு அடுத்த இடத்தில் நேபாளம் உள்ளது. இந்தியாவில்மொத்தம் 1300 காண்டாமிருகங்கள் உள்ளன.
கடந்த ஏப்ரல் மாதம் நேபாளத்தில் காண்டாமிருகங்களின் எண்ணிக்கை குறித்த கணக்கெடுப்பு நடந்தது. இதில் மத்திய நேபாளத்தில் உள்ள சித்வான் பகுதியில் 544காண்டாமிருகங்கள் இருப்பதும், மேற்கு இமாலயப் பகுதியிலுள்ள பர்தியா பகுதியில் 67 காண்டாமிருகங்கள் இருப்பதும் தெரிய வந்தது.
இந்தியாவுக்கு அருகே, சுக்லபட்னா வன விலங்கியல் பூங்காவில் ஒரு காண்டா மிருகம் காணப்பட்டது. நேபாள தேசிய பூங்காக்கள் மற்றும் வன விலங்குகள்பாதுகாப்புத் துறை அதிகாரி தீர்த்தா மான் மாஸ்கி கூறுகையில், காண்டாமிருகங்களைப் பாதுக்காக நேபாள அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவருகிறது. அதற்குக் கிடைத்த பலன்தான் இப்போது அவற்றின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதற்குக் காரணம் என்றார்.
1972-ம் ஆண்டு காண்டாமிருகப் பாதுகாப்புத் திட்டத்தை நேபாள அரசு அறிமுகப்படுத்தியது. 1950-ம் ஆண்டு நேபாளத்தில் 800 காண்டா மிருகங்கள் இருந்தன.ஆனால் 1960-ல் இந்த எண்ணிக்கை 108 ஆக குறைந்தது. இதையடுத்து காண்டாமிருகங்களைப் பாதுகாக்க இந்தத் திட்டம் அமல்படுத்தப்பட்டது.
நேபாளச் சட்டப்படி, காண்டாமிருகம் உள்பட வனவிலங்குகளை வேட்டையாடினால், 15 ஆண்டு சிறைத் தண்டனையும், 1400 டாலர் அபராதமும் விதிக்கப்படும்.