For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

தமிழகத்தில் இன்று

By Staff
Google Oneindia Tamil News

இலங்கைப் பிரச்சினை பற்றி நாளொரு தத்துவமும், பொழுதொரு விளக்கமும் அள்ளி வீசி, தமிழக முதல்வர் மக்களைப் படாதபாடு படுத்தி வருகிறார். இப்படிதனது சித்தாந்தங்களின் மூலம் மக்களை அவர் படுத்துகிற பாட்டுக்கு நிகராக ஒன்றைக் கூற வேண்டும் என்றால், அது அவர் படுகிற பாடுதான்.அவருடைய சித்தாந்தங்களில் அவரே சிக்கித் தவிக்கிற போது, நம்முடைய தவிப்பை நாம் சகித்துக் கொள்ள வேண்டியதுதான்.

இவ்விஷயத்தில் அவர் செய்து பார்க்காத சாகசம் இல்லை. ஓட்டம், துள்ளல், பொடிநடை, திடீர் பாய்ச்சல், எகிறி அடித்தல், தாவிக் குதித்தல், எம்பிக்குத்துதல், குனிந்து தப்புதல், வழுக்கி நழுவுதல், சாய்ந்து சமாளித்தல், ஓங்கி முட்டுதல், தாங்கி தட்டுதல், கரடிப்பிடி, கத்திரிப் பிடி ... என்று அவர் காட்டிவருகிற வித்தைகள் ஒன்றா இரண்டா? இந்த வகையில் அவர் செய்து காட்டியுள்ள சமீபத்திய ஸ்டண்ட் - அவருடைய செக்கோஸ்லோவேக்கியா பேச்சு.

செக்கோஸ்லோவேக்கியா, செக் - ஸ்லோவேக்கியா என்று இரு நாடுகளாகப் பிரிந்தது போல், இலங்கையும் இரு நாடுகளாக வேண்டும் என்றுகூறியிருக்கிறார் முதல்வர். அதாவது ஈழம் உருவாக்கப்பட வேண்டும் என்பது அவர் கருத்து. இந்திய அரசோ, இலங்கை பிளவுபடுவதும், ஈழம்உருவாவதும் இந்திய நலனுக்கு உகந்தவை அல்ல என்று கூறியிருக்கிறது. தமிழக முதல்வரோ ஈழம் உருவாக வேண்டும் என்கிறார். அதே சமயத்தில்மத்திய அரசின் நிலைதான் தனது நிலையும் என்றும் சொல்கிறார். இந்த வியாக்கியானங்கள் ஏற்படுத்திய குழப்பத்திலிருந்து மீள்வதற்காக, அவர் ஒருபுதிய விளக்கம் தந்து அருளி இருக்கிறார். செக்கோஸ்லோவேக்கியா யோசனையை நான் சொன்னது இலங்கை அரசுக்குத்தானே ஒழிய, இந்திய அரசுக்குஅல்ல என்று சொல்லி விட்டார்.

அதாவது, இந்திய நலனுக்கு உகந்தது அல்ல என்று மத்திய அரசு எதைக் கருதுகிறதோ - அதைச் செய்துவிடுமாறு இலங்கைக்கு முதல்வர் யோசனைசொல்லியிருக்கிறார். ஆனால், மத்திய அரசின் நிலையும் இவரின் நிலையும் ஒன்றேதான்? தலை சுற்றுகிறது.

முதல்வர் முதலில் பேசி, பிறகு விளக்கி, பின்னர் மறுத்து, அடுத்து மீண்டும் விளக்கியுள்ள இந்த செக்கோஸ்லோவேக்கியா சமாச்சாரம்தான் என்ன?சரித்திர குறிப்புகள் கூறுகிற விவரங்களை சுருக்கமாகப் பார்ப்போம்.

பொஹிமியா, மொரேவியா, ஸைலேஷியா, ஸ்லோவேக்கியா - ஆகிய பகுதிகளைக் கொண்டு முதலாவது உலக யுத்தத்திற்குப் பிறகு ஒரு நாடு சிருஷ்டிசெய்யப்பட்டது. பின்னர் மேற்கத்திய நாடுகள் சில ஒன்று சேர்ந்து அந்த செக்கோஸ்லோவேக்கியாவின் ஒரு பகுதியைப் பிரித்து, ஜெர்மனிக்குகொடுத்துவிட்டன. வேறு கட்டத்தில் செக்கோஸ்லோவேக்கியா முழுவதும் ஹிட்லரின் கட்டுப்பாட்டுக்குள் வந்தது. ஆக செக் பகுதிகளும்,ஸ்லோவேக்கியப் பகுதிகளும் வெவ்வேறாக இருந்தவை; ஆஸ்திரிய - ஹங்கேரி சாம்ராஜ்யம் உருவான போது, செயற்கையாக சில பகுதிகள் ஒன்றுசேர்க்கப்பட்டன. முதல் உலக யுத்தத்திற்குப் பிறகு, கத்தோலிக்க ஸ்லோவேக்கியாவும், ப்ராட்டஸ்டன்ட் செக்கும் ஒன்று இணைக்கப்பட்டன. அதன்பிறகுதான், ஹிட்லரின் தலையீடு, இப்படிப் பல கைகள் மாறி இறுதியில், 1992-ல் செக்கும், ஸ்லோவேக்கியாவும் தனித் தனி நாடுகளாகப் பிரிந்தன.

இதோடு இலங்கை நிலையை ஒப்பிட்டு, இதே போல தீர்வு காண வேண்டும் என்கிறார் முதல்வர். ஆனால் செக்கோஸ்லோவேக்கியா செயற்கையாகஉருவாக்கப்பட்டு, பிளந்து, சேர்ந்து, இறுதியில் பிரிவினை கண்ட நாடு: அங்கே பயங்கரவாதம் எழவில்லை; அங்கே எந்த தீவிரவாத அமைப்பும்அமைச்சர்களையும், மற்றவர்களையும் கொலை செய்யவில்லை; செக்கிலோ, ஸ்லோவேக்கியாவிலோ எந்த ஓரு அமைப்பும் தன் மக்களையே கொன்றுவிடவில்லை; தலைவர்களைக் கொல்லவில்லை; நிறைய ஸ்லோவேக்கியர்கள் செக்கில் இருக்கிறார்கள் என்றோ, நிறைய செக் பிரதேச மக்கள்ஸ்லோவேக்கியாவில் இருக்கிறார்கள் என்றோ கூற முடியாது. இந்த அம்சங்கள் எல்லாவற்றிலும் செக்கோஸ்லோவேக்கிய நிகழ்ச்சிகள், இலங்கைநிகழ்ச்சிகளுக்கு நேர் எதிரானவை. ஆகையால் செக்கோஸ்லோவேக்கிய உதாரணம், இலங்கைப் பிரச்சனைக்கு பொருந்தக் கூடியது அல்ல.

அப்படிஇருந்தும் கூட தமிழக முதல்வர் செக்கோஸ்லோவேக்கிய உதாரணத்தைக் கூறுவானேன்? ஈழம் தோன்ற வேண்டும் என்று மறைமுகமாகசொல்வதற்கு இதை ஒரு வழியாக அவர் கையாண்டிருக்கிறார், அவ்வளவே!

அவர்தான் என்ன செய்வார் பாவம்? தமிழ்ப்பற்றைக் காட்ட இப்போது ஹிந்தி எதிர்ப்பு மேடை இல்லை; வட நாட்டு எதிர்ப்பு மேடை அர்த்தமற்றதாகிவிட்டது; ஆங்கில எதிர்ப்பு மூலம் தமிழ்ப்பற்றைக் காட்டலாம் என்று பார்த்தால், அதுவும் சரிப்பட்டு வரவில்லை. என்னதான் செய்வது? இலங்கைப்பிரச்சனையில் ஈழ கோஷமிட்டால் தமிழ்ப்பற்றைக் காட்டிக் கொள்ள முடியும் எனும் போது, ஈழ மேடை ஏறுவது அவசியமாகி விடுகிறது.இல்லாவிட்டால் வைகோவும், ராமதாஸுமே தமிழ்ப்பற்று உள்ளவர்கள் என்று ஆகிவிடும். அதனால்தான் முதல்வர்செக்கோஸ்லோவேக்கியாவில் புகுந்து இருக்கிறார்.

அதே சமயத்தில் மத்திய அரசுக்கு விரோதமான நிலையை எடுத்தோ, விடுதலைப் புலி ஆதரவை மீண்டும் துவங்கியோ, தன்னுடைய பதவிக்கும் மத்தியஅரசில் தனது கட்சி வகிக்கும் பங்கிற்கும் ஆபத்தைத் தேடிக் கொள்ளவும் அவர் தயாராக இல்லை. இதனால் விளக்கம், விளக்கத்திற்கு விளக்கம்,விளக்கத்தின் விளக்கத்திற்கு விரிவுரை ... என்று அவர் பல சாகசங்களைச் செய்ய வேண்டி இருக்கிறது.

ஆக, இலங்கைப் பிரச்சனையில் முதல்வர் தோற்றுவித்து வரும் கருத்து குழப்பத்திற்கு ஒரே ஒரு காரணம்தான் இருக்கிறது. அவரைப் பொறுத்தவரையில்பதவி கூழுக்கும் ஆசை. தமிழ் மீசைக்கும் ஆசை. திணறுகிறார். நமது அனுதாபங்கள் அவருக்கு உரித்தாகுக.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X