தமிழகத்தில் இன்று
இறந்த பறவைக்கு இறுதிச் சடங்கு
கொழும்பு:
மின்சாரம் தாக்கி இறந்த பறவைக்கு இலங்கையில் இறுதிச் சடங்கு நடந்தது. இதில், புத்த பிட்சுக்கள், மாணவர்கள் உள்பட நூற்றுக்கணக்கானவர்கள்கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.
இச் சம்பவம் மதாரா நகருக்கு அருகே உள்ள ஈலியகோடா என்ற நகரில் நடந்துள்ளது.
ஈலியகோடாவில் ஒரு பள்ளியை நடத்தி வரும் பியாசிரி பிராஜ்னரத்னே ஒரு மைனா பறவையை வளர்த்து வந்தார். பள்ளி மாணவர்களும் அப் பறவை மீதுமிகுந்த அன்பு வைத்திருந்தனர்.
இந் நிலையில், சில நாட்களுக்கு முன் மின்சாரம் தாக்கி அந்த பறவை இறந்தது. இறந்த மைனாவுக்கு என்றென்றும் நினைவில் நிற்கும்படி புத்த மதசடங்குப்படி இறுதிச் சடங்கு செய்ய பிராஜ்னரத்னேவும் பள்ளி மாணவர்களும் முடிவு செய்தனர்.
இதையடுத்து, ஈலியகோடாவில் உள்ள புத்த பிட்சுக்களுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. இறுதிச் சடங்கில் கலந்து கொள்ளும்படி ஈலியகோடா நகரமக்களுக்கும் வேண்டுகோள் விடுக்கப்பட்டது.
இறந்த மைனாவுக்கு ஏற்றபடி தனி சவப்பெட்டி செய்யப்பட்டது. புத்த பிட்சுக்கள், மாணவர்கள் ஈலியகோடா நகர மக்கள் எனநூற்றுக்கணக்கானவர்கள் இறுதிச் சடங்கில் கலந்து கொண்டனர்.
பின்னர் புத்த மத சடங்குப்படி அனைத்து நடவடிக்கைகளும் முடிந்து சவப்பெட்டியில் மைனாவின் உடல் வைக்கப்பட்டு பூமியில் புதைக்கப்பட்டது.
பிராணிகள் மீது அன்பு காட்டவேண்டும் என்பதை வலியுறுத்தி இத்தகைய புதிய முயற்சியில் ஈடுபட்டதாக பிராஜ்னரத்னே தெரிவித்தார்.