For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

காஷ்மீரில் 100 பேர் படுகொலைக்கு பாகிஸ்தான் தான் காரணம்

By Staff
Google Oneindia Tamil News

டெல்லி:

காஷ்மீர் மாநிலத்தில் லஷ்கர்-ஈ-தொய்பா என்ற அமைப்புத் தீவிரவாதிகள் 101 பேரைப் படுகொலை செய்ததற்கு பிரதமர் வாஜ்பாய் கடும் கண்டனம்தெரிவித்துள்ளார். இப்படுகொலைச் சம்பவத்திற்குப் பாகிஸ்தான்தான் காரணம் என்றும் அவர் குற்றம்சாட்டினார்.

காஷ்மீர் மாநிலத்தில் அமர்நாத் குகைக்கோவிலுக்குள் சென்ற பக்தர்கள் 25 பேர் செவ்வாய்க்கிழமை இரவு தீவிரவாதிகள் சுட்டுக்கொன்றனர்.இச்சம்பவம் பாகல்ஹாம் என்ற இடத்தில் நடந்தது.

இதுதவிர வேறு சில இடங்களிலும் தீவிரவாதிகள் அப்பாவிப் பொதுமக்களைச் சுட்டுக்கொன்றனர்.

பாகல்ஹாம் உள்பட 8 இடங்களில் நடந்த மூர்க்கத்தனமான தாக்குதல்களில் மொத்தம் இதுவரை 101 பேர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.

யாத்திரிகர்கள், கூலித்தொழிலாளர்கள், வீட்டிலிருக்கும் பெண்கள், குழந்தைகள் என்று அப்பாவிகளைப் படுகொலை செய்துள்ளனர் பயங்கரவாதிகள். இதுபாகிஸ்தானின் உத்தரவுப்படியோ அல்லது அவர்களின் தூண்டுதலின் பேரிலோதான் இப்படுகொலைச் சம்பவம் நடந்திருக்க வேண்டும்.

ஹிஸ்புல் முஜாஹிதின் அமைப்பு பேச்சுவார்த்தைக்கு அழைத்ததையும், அதை நாம் ஏற்றுக்கொண்டதையும் பாகிஸ்தான் ஏற்கவில்லை. இதனால் தான் பிறதீவிரவாத அமைப்புகளைத் தூண்டிவிட்டு வேடிக்கை பார்க்கிறது பாகிஸ்தான்.

இந்தப் படுகொலைகளைப் பார்த்து பயந்து நாம் நமது முயற்சிகளைக் கைவிட மாட்டோம்.

யாத்திரிகர்களுக்குப் பாதுகாப்பு:

அமர்நாத் யாத்திரைக்குச் செல்லும் யாத்திரிகர்களுக்குத் தேவையான அனைத்துப் பாதுகாப்புக்களையும் செய்திருக்கிறோம். அந்த பாதுகாப்புக்களைமேலும் பலப்படுத்துவோம்.

பயத்தில் பயங்கரவாதிகள்:

ஹிஸ்புல் முஜாஹிதின் அமைப்புடன் பேச்சுவார்த்தை நடத்தத் தயார் என்று நாம் அறிவித்துவிட்டதால் காஷ்மீரில் உள்ள பிற பயங்கரவாதிகள் பயந்து விட்டார்கள்.அதன் விளைவுதான் இந்தத் தாக்குதல். அமர்நாத் யாத்திரிகர்களுக்கு அளிக்கும் பாதுகாப்பு மேலும் வலுப்படுத்தப்படும் என்றார் பிரதமர் வாஜ்பாய்.

ஜனாதிபதி அதிர்ச்சி:

காஷ்மீரில் செவ்வாய்க்கிழமை இரவு தொடங்கி புதன்கிழமை அதிகாலை வரை நடந்த படுகொலைச் சம்பவம் குறித்து ஜனாதிபதி கே.ஆர்.நாராயணன்அதிர்ச்சி தெரிவித்துள்ளார்.

அவர் இது குறித்து வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், அப்பாவிப் பொதுமக்கள், பக்தர்கள், மற்றும் கூலித்தொழிலாளர்கள் படுகொலைசெய்யப்பட்டதற்கு தான் கடும் கண்டனம் தெரிவிப்பதாகவும், அவர்களது குடும்பத்திற்கு தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவிப்பதாகவும் கூறியுள்ளார்.

மேலும், பொதுமக்கள் அனைவரும் நாட்டின் ஒருமைப்பாட்டைக் கட்டிக்காக்கும் வகையில் நடந்து கொள்ள வேண்டும்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்:

காஷ்மீரில் வாழும் அனைத்துத் தரப்பு மக்களையும் கொன்று குவிக்கும் எண்ணத்தில் இப்படுகொலையில் இறங்கியுள்ளது தீவிரவாதக் கும்பல் . அவர்களதுகனவு பலிக்காது.

ஹிஸ்புல் முஜாஹிதின் அமைப்பின் போர்நிறுத்தம் தான் பிற பயங்கர வாதிகளை ஆத்திரம் கொள்ள வைத்துள்ளது.

காஷ்மீரில் இயல்பு வாழ்க்கை திரும்பவும், வன்முறை ஏற்படாதவாறு தடுக்கவும் மத்திய அரசு உடனடி நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்றுகடுங்கண்டனம் தெரிவித்துள்ளது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி.

பாகிஸ்தான் தலைவர்களுடன் பேசுவேன்-கிளின்டன்:

இந்த காஷ்மீர் படுகொலைகளுக்கு அமெரிக்க அதிபர் கிளின்டன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

பிரதமர் வாஜ்பாயை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசிய அவர், ஒரே நாள் இரவில் காஷ்மீரில் இப்படுகொலைகள் நடந்திருப்பது மிகவும்துயரமானது. இது குறித்து தான் உடனடியாக பாகிஸ்தான் தலைவர்களுடன் பேசுவேன் என்று உறுதியளித்தார்.

கடந்த மார்ச் மாதத்தில் தான் இந்தியாவுக்கு வந்திருந்தபோது காஷ்மீரில் செட்டிசிங்கபுராவில் சீக்கியர்கள் படுகொலை செய்யப்பட்டதையும் கிளின்டன்நினைவுகூர்ந்தார்.

சோனியா குற்றச்சாட்டு:

எதிர்கட்சித் தலைவர் சோனியா காந்தி கூறுகையில் அமர்நாத் செல்லும் பக்தர்களுக்கு அரசு போதிய பாதுகாப்பு அளிக்கத் தவறி விட்டதாகக் குற்றம்சாட்டினார்.

காஷ்மீரில் மீண்டும் அமைதி திரும்ப அரசு எடுத்து வரும் நடவடிக்கைகளைப் பாராட்டுவதாகவும் சோனியா கூறினார்.

எதிர்கட்சிகளுடன் பிரதமர் ஆலோசனை:

முன்னதாக காஷ்மீர் படுகொலை குறித்து பிரதமர் வாஜ்பாய் எதிர்கட்சித் தலைவர்களுடன் ஆலோசனை நடத்தினார்.

இக்கூட்டத்தில் காஷ்மீரில் அமைதி திரும்புவதற்கான நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கப்பட்டது. இக்கூட்டத்தில் உள்துறை அமைச்சர் அத்வானி,வெளியுறவுத்துறை அமைச்சர் ஜஸ்வந்த் சிங், எதிர்கட்சித் தலைவர் சோனியா காந்தி, மாதவராவ் சிந்தியா, கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்கள் சோம்நாத்சாட்டர்ஜி, ரூப் சந்திரா, முன்னாள் பிரதமர் குஜ்ரால் தேசிய வாதக் காங்கிரஸ் கட்சித் தலைவர் சரத்பவார் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

கடும் பாதுகாப்புடன் துவங்கியது அமர்நாத் யாத்திரை:

கடுமையான போலீஸ் பாதுகாப்புடன் அமர்நாத் யாத்திரை துவங்கியது. பெஹல்காமிலிருந்து 1000 க்கும் மேற்பட்ட யாத்திரிகர்கள் அமர்நாத் சென்றனர்.

அங்குள்ள கோவிலில் தரிசனம் செய்துவிட்டு 4000 க்கும் மேற்பட்டோர் ஜம்மு திரும்பி விட்டனர்.

யு.என்.ஐ.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X