For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

வீரப்பனின் 10 நிபந்தனைகள்

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

சந்தனக் கடத்தல் வீரப்பன் விதித்துள்ள 10 கோரிக்கைகளும், தமிழக, கர்நாடக மாநில அரசுகள் அளித்துள்ள பதில்களும் வருமாறு:

கோரிக்கை 1: காவிரிப் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும். அதற்கு முன்பு, வி.பி.சிங் காலத்தில் அமைக்கப்பட்ட நடுவர் மன்றத்தின்இடைக்காலத் தீர்ப்பில் கூறியுள்ளபடி 205 டி.எம்.சி. காவிரி நீரை உடனடியாக தமிழகத்திற்கு திறந்து விட வேண்டும். எதிர்காலத்தில் இந்தப் பிரச்சினையில்,எந்தக் குழப்பமும் இருக்கக் கூடாது.

பதில்: காவிரி இடைக்காலத் தீர்ப்பைப் பொறுத்தவரை அதை நிறைவேற்றுவதற்காக பிரதமர் வாஜ்பாய் தலைமையில் காவிரி நதி நீர் ஆணையம்அமைக்கப்பட்டுள்ளது. தீர்ப்பின்படி 205 டி.எம்.சி.நீர் முறையாக வழங்கப்படுகிறதா என்பதைக் கண்காணிக்கவே இந்த ஆணையம். காவிரி நடுவர்மன்றத்தின் இறுதித் தீர்ப்பு விரைவில் வரவுள்ளது.

கோரிக்கை 2: 1991-ம் ஆண்டு காவிரிக் கலவரத்தில் இறந்த தமிழர்களின் குடும்பத்தினருக்கு உரிய இழப்பீட்டுத் தொகை வழங்கப்பட வேண்டும்.அத்துடன், கர்நாடகத் தமிழர்களின் உயிருக்கும், உடைமைக்கும் உத்தரவாதம் தரப்பட வேண்டும்.

பதில்: 1991ம்- ஆண்டு டிசம்பர் மற்றும் 1992-ம்ஆண்டு ஜனவரி வரையிலான காலத்தில் நடந்த காவிரிக் கலவரத்தில் பாதிக்கப்பட்டவர்களின்விண்ணப்பங்களைப் பரிசீலித்து நிவாரணம் வழங்குமாறு, 1999-ம் ஆண்டு வெளியான சுப்ரீம் கோர்ட் தீர்ப்பில் கூறப்பட்டது. இதுதொடர்பாக கர்நாடகமற்றும் தமிழக அரசுகள் அமைத்த காவிரி கலவர நிவாரண ஆணையத்தின் பணிமுறைகள் குறித்தும் சுப்ரீம் கோர்ட் தெளிவாக வழிமுறைகள்வகுத்துள்ளது. ஓய்வு பெற்ற நீதிபதிகள் இந்த ஆணையத்தில் உள்ளனர்.

இந்த ஆணையம் மூலம் பாதிக்கப்பட்டவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் பெறப்பட்டு அவை முறையாகப் பரிசீலிக்கப்படும். இந்தப் பணி முடிந்ததும் அனைத்துவிவரங்களும் சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்யப்படும். பின்னர் சுப்ரீம் கோர்ட் உத்தரவின்படி உரிய நிவாரணம் வழங்கப்படும்.

14.5.1999-ம் ஆண்டு கர்நாடகம் தனது காவிரிக் கலவர ஆணையத்தை அமைத்தது. இதன் மூலம் 10,000 பேரிடமிருந்து விண்ணப்பங்கள்வரவேற்கப்பட்டுள்ளன. இவற்றில் 2000 விண்ணப்பங்கள் தமிழகத்திலிருந்து கர்நாடகத்திற்கு மாற்றப்பட்டவை.

12 மாதங்களில் இப்பணிகள் முடியும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் கடுமையான வேலைப் பளு காரணமாக 2001-ம் ஆண்டு மே 31-ம் தேதிவரை காலக் கெடு நீட்டிக்கப்பட்டது.

கோரிக்கை 3: கர்நாடகத்தில் கன்னடர்களுக்கு அடுத்து அதிகம் உள்ளது தமிழர்கள்தான். எனவே தமிழை கூடுதல் ஆட்சி மொழியாக கர்நாடக அரசுஅறிவிக்க வேண்டும்.

பதில்: மத்திய அரசின் முந்தைய உத்தரவின்படி ஒரு மாநிலத்தில், 15 சதவீதத்திற்கும் அதிகமாக மொழிச் சிறுபான்மையர் உள்ள பகுதியில், அந்தமொழியில்தான் அரசு உத்தரவுகள் மற்றும் பிற இருக்க வேண்டும் என்று தெளிவாக கூறப்பட்டுள்ளது. இது தமிழகம், கர்நாடகம் உள்பட அனைத்துமாநிலங்களிலும் ஏற்கனவே அமலில் இருந்து வருகிறது.

கோரிக்கை 4: பெங்களூரில் அமைக்கப்பட்டுள்ள திருவள்ளுவர் சிலையைத் திறக்க கர்நாடக அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பதில்: பெங்களூரில் திருவள்ளுவர் சிலையும், சென்னையில் சர்வக்னர் சிலையையும் திறக்க இரு மாநில முதல்வர்களும் ஒத்துக் கொண்டுள்ளனர். இந்த சிலைகளின்திறப்பு விழாவில் இரு மாநில முதல்வர்களும் கலந்து கொள்வார்கள்.

கோரிக்கை 5: தமிழ்நாடு மற்றும் கர்நாடக மாநில அதிரடிப்படைகள் செய்த கொடுமைகள் குறித்து விசாரிக்க நீதிபதி சதாசிவா கமிஷன் அமைக்கப்பட்டது.இருப்பினும், இந்த கமிஷன் நியமனத்திற்கு கர்நாடக உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்தது. இந்தத் தடையை நீக்க கர்நாடக அரசு விரைவானநடவடிக்கை எடுக்க வேண்டும்.

இந்த கமிஷன் அறிக்கையை பகிரங்கமாக வெளியிட வேண்டும். பொதுமக்கள் அனைவருக்கும் கிடைக்கும் வகையில் இதை வெளியிட வேண்டும்.மேலும், அதிரடிப்படை நடவடிக்கையின்போது உயிரிழந்த ஒவ்வொருவரின் குடும்பத்திற்கும் ரூ. 10 லட்சமும், கற்பழிக்கப்பட்டவர்களுக்கு தலா ரூ. 10லட்சமும் வழங்க வேண்டும். பாதிக்கப்பட்ட பிறருக்கு தலா ரூ. 5 லட்சம் வழங்க வேண்டும்.

இந்தக் குற்றங்களுக்குக் காரணமான காவல்துறை அதிகாரிகள் மீதான புகார் நிரூபிக்கப்பட்டு அவர்களுக்கு உரிய தண்டனை வழங்க வேண்டும்.

பதில்: வீரப்பனைப் பிடிப்பதற்காக அமைக்கப்பட்ட கூட்டு அதிரடிப்படை வீரர்கள் மீதான கொடுமைகள் குறித்து விசாரிப்பதற்காக 18.6.1999-ம்ஆண்டு தேசிய மனித உரிமைக் கமிஷன் 2 பேர் கொண்ட விசாரணைக் குழுவை நியமித்தது. இந்தக் குழு, தேசிய மனித உரிமைக் கமிஷனுக்கு வந்த புகார்கள்குறித்து விசாரித்தது. குழுவின் உறுப்பினர்களாக கர்நாடக உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி சதாசிவா, முன்னாள் சி.பி.ஐ. டைரக்டர் சி.வி.நரசிம்மன் ஆகியோர்நியமிக்கப்பட்டனர்.

தேசிய மனித உரிமைக் கமிஷன் உத்தரவை ஏற்று கர்நாடக அரசு இந்த விசாரணைக் குழுவுக்குத் தேவையான அனைத்து வசதிகளையும் செய்து கொடுத்தது.இந்தக் குழு அதிரடிப்படை வீரர்கள் மீதான புகார்களை விசாரித்து, என்ன நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அரசுக்குப் பரிந்துரைக்கும்.

இதுவரை மூன்று முறை இக்குழு விசாரணைக் கூட்டம் நடத்தியுள்ளது. இந்தக் குழுவை நியமித்ததை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது.இதையடுத்து இடைக்காலத் தடை விதிக்கப்பட்டது. இதை நீக்க கர்நாடக அரசு நடவடிக்கை மேற்கொள்ளும். அதன் பிறகு குழுவின் இறுதி விசாரணைஅறிக்கையை, தேசிய மனித உரிமைக் கமிஷன் கர்நாடக அரசிடம் வழங்கும். அதில் கூறப்படும் பரிந்துரைகளை பரிசீலித்து உரிய நடவடிக்கையை அரசுஎடுக்கும்.

கோரிக்கை 6: கர்நாடக ஜெயில்களில் தடா சட்டத்தில் அடைக்கப்பட்டுள்ள அப்பாவிக் கைதிகளை விடுதலை செய்ய வேண்டும்.

பதில்: தடா சட்டத்தில் கைதாகி ஜெயில்களில் உள்ள கைதிகள் மீதான வழக்குகள் உடனடியாக ரத்து செய்யப்படும். அதன் பிறகு அவர்கள் விடுதலைசெய்யப்படுவார்கள்.

கோரிக்கை 7: கொல்லப்பட்ட 9 எஸ்.சி, எஸ்.டி மக்களின் குடும்பத்தினருக்கு போதுமான நிவாரணம் வழங்கப்பட வேண்டும்.

பதில்: பாதிக்கப்பட்ட எஸ்.சி, எஸ்.டி. மக்கள் குறித்து தகவல் சேகரிக்கப்படும். அதன் பிறகு அவர்களுக்குரிய நிவாரணத் தொகை வழங்கப்படும்.

கோரிக்கை 8: பச்சைத் தேயிலை பறிப்புக்கு வழங்கப்படும் குறைந்தபட்ச விலையை உடனடியாக ரூ. 15 ஆக அதிகரிக்க வேண்டும்.

பதில்: மத்திய அரசும், தமிழக அரசும் தேயிலைத் தொழிலாளர்களின் பிரச்சினையைத் தீர்க்க பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.

கோரிக்கை 9: தமிழ்நாடு ஜெயில்களில் உள்ள 5 பேரை விடுவிக்க வேண்டும்.

பதில்: சாதகமாக பரிசீலிக்கப்படும்.

கோரிக்கை 10: தமிழ்நாட்டில் மாஞ்சோலைத் தொழிலாளர்களின் பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்கு முன்பு கர்நாடகம் மற்றும் தமிழகத்தில் உள்ள காபிமற்றும் டீ எஸ்டேட்களில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச தினக் கூலியாக ரூ. 150 வழங்க வேண்டும்.

பதில்: தமிழகத்தில் தற்போது தினக்கூலியாக ரூ. 74.62 வழங்கப்பட்டு வருகிறது. கேரளம், மேற்கு வங்காளம் ஆகிய மாநிலங்களை விடதமிழகத்தில்தான் கூடுதல் கூலி வழங்கப்பட்டு வருகிறது.

இருப்பினும், இக்கோரிக்கை குறித்து கர்நாடகம் மற்றும் தமிழகம் ஆகியஇரு மாநில அரசுகளும் பேசி முடிவு காணும்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X