ஜெ.க்கு கூடுதல் செயலர் நியமனம்: ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் மீண்டும் பந்தாட்டம்
சென்னை:
தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் கூடுதல் செயலாளராக வெங்கடரமணன் நியமிக்கப்பட்டுள்ளார். மேலும் பலஐ.ஏ.எஸ். அதிகாரிகள் திடீர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த ஆண்டு அதிமுக ஆட்சிக்கு வந்ததிலிருந்து அமைச்சர்கள் மட்டுமில்லாமல் ஐ.ஏ.எஸ். மற்றும் ஐ.பி.எஸ்.அதிகாரிகளும் அடிக்கடி பந்தாடப்பட்டுக் கொண்டிருக்கின்றனர்.
பல அரசு அதிகாரிகள் தாங்கள் எப்போது வேண்டுமானாலும் இடமாற்றம் செய்யப்படலாம் என்ற "கிலி"யுடன்தான் அரைகுறையாகப் பணிபுரிந்து வருகின்றனர்.
இந்நிலையில் தற்போதும் பல ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதுகுறித்து தமிழகஅரசின் தலைமைச் செயலாளரான சுகவனேஸ்வர் பிறப்பித்துள்ள உத்தரவின் விவரம்:
தமிழக வீட்டு வசதி வாரியத்தின் மேலாண்மை இயக்குநராகவுள்ள கே.என். வெங்கடரமணன் முதல்வரின் கூடுதல்செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
ஊரக வளர்ச்சித் துறை செயலாளரான எல்.என். விஜயராகவனும், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல்துறையின் செயலாளரான சாந்தா ஷீலா நாயரும் ஒருவருக்கொருவர் தங்கள் பதவிகளை மாற்றிக் கொள்கின்றனர்.
தமிழக மகளிர் முன்னேற்றக் கழகத்தின் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநரான லீனா நாயர் கைத்தறி மற்றும்துணி நூல் ஆணையாளராக மாற்றப்படுகிறார்.
தமிழக தொழில் வழிகாட்டி மற்றும் ஏற்றுமதி மேம்பாட்டு நிறுவனத்தின் இயக்குநரான நிரஞ்சன் மார்டி நிலச்சீர்திருத்தத் துறையின் ஆணையாளராகிறார்.
தமிழக செய்தித் தாள் மற்றும் காகித நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநராக பி. ராம மோகன ராவ்நியமிக்கப்படுகிறார். மறு உத்தரவு வரும் வரை அவர் ஏற்கனவே கவனித்து வந்த கடல்சார் வாரியத்தின் துணைத்தலைவர் மற்றும் தலைமைச் செயல் அலுவலர் பொறுப்புக்களையும் தமிழக சாலைத் திட்டத்தின் திட்ட அலுவலர்பொறுப்பையும் தொடர்ந்து கவனித்துக் கொள்வார்.
உயர் கல்வித் துறையின் முன்னாள் செயலாளராக இருந்த ஆர். ஸ்ரீராம் தமிழக சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின்தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். இவர் கடந்த சில நாட்களாக எந்த விதப் பதவியும் கொடுக்கப்படாமல் நிறுத்திவைக்கப்பட்டிருந்தார்.
இவரைப் போலவே நிறுத்தி வைக்கப்பட்டோர் பட்டியலில் இருந்த கைத்தறி மற்றும் துணி நூல் இயக்ககத்தின்முன்னாள் இயக்குநரான டி.என். ராமநாதனுக்கு தமிழக தொழில் வழிகாட்டி மற்றும் ஏற்றுமதி மேம்பாட்டுநிறுவனத்தின் இயக்குநர் பொறுப்பு அளிக்கப்பட்டுள்ளது.
பெரியகுளத்தில் உதவி கலெக்டராகப் பணிபுரிந்து வரும் சி. விஜயராஜ் குமார், திருவள்ளூர் மாவட்டத்தின் கூடுதல்கலெக்டர் மற்றும் ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட அலுவராக மாற்றப்படுகிறார்.
இப்பணியைக் கவனித்து வந்த ஆர். ஜெயா மத்திய அரசுப் பணிக்கு மாற்றப்பட்டுள்ளார்.
-->


