கர்நாடகத்திற்கு மின்சாரம் கொண்டு செல்லும் டவர் குண்டு வைத்துத் தகர்ப்பு
விழுப்புரம்:
விழுப்புரம் மாவட்டம் திருநாவலூர் அருகே தொப்பையன் குளம் பகுதியில் உயர் அழுத்த மின்சார கோபுரம்குண்டு வைத்துத் தகர்க்கப்பட்டது.
தமிழக காவிரி மீட்புக் குழு என்ற அமைப்பு இந்தத் தாக்குதலை நடத்தியதாகத் தெரியவந்துள்ளது.
நெய்வேலி மின் நிலையத்தில் இருந்து ஸ்ரீபெரும்புதூர் வழியாக கர்நாடகத்துக்கு மின்சாரம் கொண்டு செல்லும்அதிக சக்தி வாய்ந்த மின்சார டவர்களில் ஒன்று தான் தகர்க்கப்பட்டுள்ளது.
இந்த குண்டு வெடிப்பில் மின் கோபுரம் முற்றிலுமாகச் சேதமடைந்தது.
நேற்று நள்ளிரவில் மோட்டார் சைக்கிளில் வந்த 3 பேர் இந்த கோபுரத்துக்கு குண்டு வைத்துவிட்டு தப்பியுள்ளனர்.இதைப் பார்த்த அப் பகுதி கிராமவாசிகள் சிலர் அவர்களைப் பிடிக்க முயன்றுள்ளனர். ஆனால் அவர்கள் தப்பிவிட்டனர்.
இதையடுத்து அவர்கள் உடனடியாக போலீசாருக்குத் தகவல் தந்தனர். இரவு ரோந்தில் இருந்த போலீசார் உடனேசம்பவ இடத்துக்கு விரைந்து வந்துவிட்டனர்.
வெடிகுண்டு நிபுணர்களும் வந்து சேர்ந்தனர். மேலும் வெடிகுண்டுகள் ஏதும் உள்ளதா என அவர்கள்சோதனையிட்டனர். பிற டவர்களிலும் சோதனை நடத்தப்பட்டது. ஆனால், குண்டுகள் ஏதும் இல்லை.
இரு மாநிலங்களுக்கு இடையிலான மின் இணைப்பில் துண்டிப்பு ஏற்பட்டதை நெய்வேலி மின் கட்டுப்பாட்டுஅறையின் கருவிகள் மூலம் அறிந்து கொண்ட மின நிலைய அதிகாரிகளும் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர்.
குண்டு வெடிப்பால் சேதமடைந்த மின் கோபுரத்தில் இருந்து பிற டவர்களுக்குச் செல்லும் மின்சாரத்தைஅதிகாரிகள் துண்டித்தனர். அதிலிருந்து செல்லும் மின்சாரம் உடனடியாக வேறு கேபிள்கள் வழியாக கொண்டுசெல்லப்பட்டது.
இதனால் மின் சப்ளை உடனே சரி செய்யப்பட்டுவிட்டது. இதன் காரணமாக கர்நாடகத்தில் மின் சப்ளைபாதிக்கப்படவில்லை. இந்த குண்டு வெடிப்பால் கோபுரத்தின் கீழ் பகுதி முழுவதும் மண்ணுக்குள் இறங்கி விட்டது.
நெய்வேலி அனல் மின் நிலையத்திலிருந்து இந்த டவர்கள் வழியாகத்தான் கர்நாடகாவுக்கும், ஆந்திராவுக்கும்மின்சாரம் போகிறது.
சம்பவம் நடந்த இடத்தில் சிவப்பு மையால் எழுதப்பட்டிருந்த துண்டுப் பிரசுரங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
அதில் கூறப்பட்டிருந்ததாவது:
கர்நாடகத்திற்கு நெய்வேலி மின்சாரம் தரக் கூடாது. காவிரி நடுவர் மன்ற உத்தரவுப்படி நடந்து கொள்ளுமாறுகர்நாடகத்தை மத்திய அரசு வலியுறுத்த வேண்டும். காவிரி நீர் தமிழகத்திற்குத் தான் சொந்தம்.
இப்படிக்கு
தமிழ்நாடு காவிரி மீட்புக் குழு
என்று எழுதப்பட்டிருந்தது.
இது காவிரியை வைத்து புதிதாக உருவான தமிழ் இயக்கமாக இருக்கலாம் என்று போலீஸார் சந்தேகிக்கிறார்கள்.தலைமறைவான நபர்கள் குறித்து தீவிர விசாரணை நடந்து வருகிறது.
இந்த வழக்கு விசாரணையை க்யூ பிராஞ்ச் போலீசார் தங்கள் வசம் எடுத்துக் கொண்டுள்ளனர்.
சம்பவம் நடந்த இடத்தை டி.ஐ.ஜி. விஜய்குமார், மாவட்ட காவல்துறைக் கண்காணிப்பாளர் அபய் குமார் ஆகியோர்பார்வையிட்டர்.
மின் கோபுரம் குண்டு வைத்து தகர்க்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-->


