அரசு உணவை சாப்பிட்ட பாண்டிச்சேரி மாணவிகள் மீண்டும் மயக்கம்
பாண்டிச்சேரி:
பாண்டிச்சேரியில் பள்ளியில் வழங்கப்படும் இலவச காலை உணவை சாப்பிட்ட மாணவிகளுக்கு மீண்டும் மயக்கமும், வாந்தியும்ஏற்பட்டது. அவர்கள் அனைவரும் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
ராஜிவ் காந்தியின் காலை உணவுத் திட்டம் என்ற பெயரில் சில மாதங்களுக்கு முன் இந்த இலவச சிற்றுண்டித்திட்டத்தை பாண்டிச்சேரி அரசு சில மாதங்களுக்கு முன் அறிமுகப்படுத்தியது.
இத் திட்டத்தின் கீழ் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு பிரட்டும், பாலும் தரப்பட்டு வந்தது. ஆனால், கடந்த செப்டம்பர் மாதம் 20ம்தேதி இந்த சிற்றுண்டியை உண்ட சுமார் 2,000 மாணவ, மாணவிகளுக்கு வாந்தி மற்றும் வாந்தி, மயக்கம் ஏற்பட்டது.
அவர்கள் அனைவரும் சாரைசாரையாக மருத்துவமனைகளுக்குக் கொண்டு வரப்பட்டனர். இதனால் பாண்டிச்சேரி முழுவதும்பதற்றம் ஏற்பட்டது. இதையடுத்து அந்த உணவுத் திட்டம் தாற்காலிகமாக நிறுத்தப்பட்டது.
அது குறித்து விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டது. அந்த விசாரணை அறிக்கையும் தாக்கலாவிட்டது. ஆனால், அது கிடப்பில்போடப்பட்டுள்ளது.
கெட்டுப் போன பால் காரணமாகவே மாணவர்கள் பாதிக்கப்பட்டனர் என்ற விவரம் வெளியானதால் பால் வழங்குவதை அரசுநிறுத்தியது. வெறும் பிரட்டுடன் இந்தத் திட்டம் கடந்த மாதம் 20ம் தேதி மீண்டும் அறிமுகப்படுத்தப்பட்டது.
இந் நிலையில் இன்று காலை இந்த பிரட்டைத் தின்ற லஸ்பேட்டை வள்ளலார் பள்ளியைச் சேர்ந்த 10 மாணவிகள் மயங்கிவிழுந்தனர். அவர்களுக்கு வாந்தியும் ஏற்பட்டது.
இதையடுத்து அவர்கள் அனைவரும் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். தகவல் பரவியதையடுத்து வேறு பள்ளிகளில் பிரட்தருவது நிறுத்தப்பட்டுவிட்டது.
மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ள இந்த மாணவிகளை முதல்வர் ரங்கசாமி நேரில் போய் பார்த்தார். இது குறித்து உயர் மட்டவிசாரணைக்கு உத்தரவிட்டார்.
ஏற்கனவே, இந்த விவகாரத்தில் ஒரு விசாரணை அறிக்கை முதல்வரின் டேபிளில் தூங்கிக் கொண்டிருக்கும் நிலையில் மீண்டும்விசாரிக்க உத்தரவிட்டுள்ளார் முதல்வர்.
இந்த பால் மற்றும் பிரட் வழங்கும் காண்ட்ராக்ட் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர்களுக்கே வழங்கப்பட்டுள்ளது. இவர்கள் தரம்குறைந்த பாலைத் தந்ததால் தான் 2,000 மாணவிகள் மயங்கினர்.
இப்போது பிரட்டில் இவர்கள் கைவரிசையைக் காட்டியுள்ளனர்.
-->


