கர்நாடகத்துக்கு உதவ சு.சுவாமியை சந்தித்த ரஜினி
சென்னை:
கொளத்தூர் மணி மீதான வழக்குகளை வாபஸ் பெறும் கர்நாடக அரசின் முடிவை எதிர்த்து நீதிமன்றம் செல்ல சுப்பிரமணியம்சுவாமி திட்டமிட்டதையடுத்து அவரைச் சந்தித்து முடிவை மாற்றச் செய்துள்ளார் ரஜினி.
நாகப்பாவை விடுவிக்க வேண்டுமானால் கொளத்தூர் மணி தான் தூதுவராக வர வேண்டும் என வீரப்பன் நிபந்தனைவிதித்துள்ளான். அவனது 12 நாள் நாளையுடன் முடிவடைகிறது. இதனால் கர்நாடக அரசு படாதபாடுபட்டு அவருக்கு ஜாமீன்கிடைக்கச் செய்துள்ளது.
ஆனால், வழக்குகளை வாபஸ் பெற்றால் தான் காட்டுக்குள் போவேன் என்று மணி நிபந்தனை விதித்ததால் அதற்கும் கர்நாடகஅரசு ஒப்புக் கொண்டுள்ளது. விரைவில் வழக்குகளை வாபஸ் வாங்குவதாக உறுதியளித்துள்ளது.
இதை எதிர்த்து வீரப்பனால் கொல்லப்பட்ட போலீஸ் அதிகாரி ஷகீல் அகமதின் தந்தை அப்துல் கரீம் உச்ச நீதிமன்றத்தில்வழக்குத் தொடரப் போனார். பதறிப் போன கர்நாடக அரசும் நாகப்பா குடும்பத்தினரும் அவரை சமாதானப்படுத்திவிட்டன.மடாதிபதிகள் மூலமும் கரீமுடன் பணியாற்றிய உயர் அதிகாரிகள் மூலமும் அவரை சமாதானப்படுத்திவிட்டனர்.
ஆனால், கொளத்தூர் மணி மீதான வழக்குகளை வாபஸ் பெறுவதை தமிழக முதல்வர் ஜெயலலிதாவும் ஜனதா கட்சித் தலைவர்சுப்பிரமணியம் சுவாமியும் எதிர்த்து வருகின்றனர்.
கர்நாடகம் தனது முடிவை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும்பட்சத்தில் அதை எதிர்த்து வழக்குத் தொடர சுப்பிரமணியம் சுவாமிமுடிவு செய்துள்ளார். இத் தகவலை அறிந்த கர்நாடக முதல்வர் கிருஷ்ணா ரஜினியின் உதவியை நாடியுள்ளார்.
இதையடுத்து தான் ரஜினி அவரை நேற்று சந்தித்தார். கொளத்தூர் மணி காட்டுக்குச் செல்வதில் தாமதம் ஏற்பட்டால் நாகப்பாவின்உயிருக்கு ஆபத்து ஏற்படும் என்பதால் இந்த விஷயத்தில் உதவுமாறு சுவாமியிடம் ரஜினி கோரிக்கை வைத்தார்.
சுவாமியும் அதனை ஒப்புக் கொண்டுவிட்டதாகக் கூறப்படுகிறது.
நேற்று இந்தச் சந்திப்புக்குப் பின் நிருபர்களிடம் பேசிய சுவாமி, நானும் ரஜினியும் அரசியல் பேசியது உண்மை தான்.ஆன்மிகவாதியான ரஜினி அரசியலுக்கு வர வேண்டும் என்றார்.
முன்னதாக ஜனதா கட்சி வெளியிட்ட அறிக்கையில், ரஜினியும் சுவாமியும் நதிகள் இணைப்பு குறித்து விவாதித்தாகக்கூறப்பட்டது.
அவர்கள் பேசியது முழுக்க முழுக்க வீரப்பன் மற்றும் கர்நாடகத்தின் பிரச்சனைகள் குறித்துத் தான்.
ராஜ்குமார் கடத்தப்பட்டபோதும் ரஜினி தலையிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. நக்கீரன் கோபால் மூலம் வீரப்பனுக்கு அவரேபேசி ஒரு கேசட்டும் அனுப்பியது நினைவுகூறத்தக்கது.
-->


