கிருஷ்ணா மீதான அவமதிப்பு வழக்கு: இன்று விசாரணை இல்லை
டெல்லி:
காவிரி விவகாரத்தில் கர்நாடக முதல்வர் கிருஷ்ணா மீது தமிழக அரசு தொடர்ந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கு விசாரணையை இன்று உச்சநீதிமன்றம் எடுத்துக் கொள்ளவில்லை.
தண்ணீர் திறந்துவிடுமாறு இருமுறை உச்சநீதிமன்றம் உத்தரவிட்டும் அதை கர்நாடக முதல்வர் மதிக்காமல் இருந்து வந்தார். அதனால் அவர்மீது இரு அவமதிப்பு வழக்குகள் தொடர்ந்தது தமிழக அரசு.
இதையடுத்து நீதிமன்றத்தில் மன்னிப்பு கேட்டு நீரையும் திறந்துவிட்டார். பின்னர் இவ்வளவு தான் இதற்கு மேல் நீரைத் திறந்துவிட முடியாதுஎன்று கர்நாடகம் மக்கர் செய்ய ஆரம்பித்தது தனி கதை.
நீதிமன்றத்தில் மன்னிப்பு கேட்டதால் கிருஷ்ணா மீதான அவமதிப்பு வழக்கில் தீர்ப்பை நீதிபதிகள் கடந்த மாதம் 22ம் தேதிக்கு ஒத்திவைத்தனர். அன்றைய தினம் நடந்த விசாரணையில் 29ம் தேதி காவிரி ஆணையக் கூட்டம் நடத்தப் போவதாக மத்திய அரசு நீதிமன்றத்தில்தெரிவித்தது.
இதையடுத்து அக் கூட்டத்தில் நல்ல முடிவு எட்டப்படும் என்று நம்பிக்கை தெரிவித்த நீதிபதிகள் கிருஷ்ணா மீதான தீர்ப்பை மீண்டும் டிசம்பர்5ம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.
ஆனால், கடந்த மாதம் 29ம் தேதி கூட்டப்பட்ட காவிரி ஆணையக் கூட்டத்தில் கடைசி நேரத்தில் தமிழக முதல்வர் ஜெயலலிதா கலந்துகொள்ளவில்லை. இதனால் கூட்டமே ஒத்தி வைக்கப்பட்டுவிட்டது.
காவிரி ஆணையக் கூட்டம் நடக்காததால் இன்று உச்ச நீதிமன்றம் கிருஷ்ணா மீதான அவமதிப்பு வழக்கை எடுத்துக் கொள்ளவே இல்லை.
இக் கூட்டம் நடந்த பின்னர் தான் அவமதிப்பு வழக்கை உச்ச நீதிமன்றம் எடுக்கும் என்று தெரிகிறது. இதனால் மீண்டும் உடல் நலக் குறைவுஎல்லாம் சொல்லி காவிரி ஆணையக் கூட்டத்தை ஜெயலலிதாவால் புறக்கணிக்க முடியாது.
-->


