லாரி மோதி ரோந்து சென்ற சப்-இன்ஸ்பெக்டர், காவலர் பலி
உடுமலைப்பேட்டை:
உடுமலைப்பேட்டையில் மோட்டார் சைக்கிளில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த சப்-இன்ஸ்பெக்டரும், ஹோம் கார்ட்ஸ் காவலரும் லாரிமோதி உயிரிழந்தனர்.
இன்று அதிகாலை இச் சம்பவம் நடந்தது. பாபர் மசூதி இடிக்கப்பட்டு 10 ஆண்டுகள் ஆகும் நிலையில் ரம்ஜான் பண்டிகையும் வருவதால்மாநிலத்தில் தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
போலீசாரின் ரோந்தும் அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்தப் பணியில் ஹோம் கார்ட்ஸ் காவலர்களும் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
மாநிலம் முழுவதும் இரவு முழுவதும் முக்கிய பகுதிகளில் போலீசார் ஜீப், வேன்கள், மோட்டார் சைக்களிகள், சைக்களிகளில் ரோந்துப்பணியில் ஈடுபட்டிருந்தனர்.
நேற்று இரவு உடுமலைப்பேட்டை காவல் நிலையத்தில் இருந்து ஒரு சப்-இன்ஸ்பெக்டரும் ஹோம் கார்ட்ஸ் காவலர் ஒருவரும் மோட்டார்சைக்கிளில் ரோந்து சென்றனர். இவர்கள் இன்று அதிகாலை 3 மணியளவில் நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தபோது பின்னால் வந்தலாரி அவர்கள் மீது மோதியது.
இதில் பின்னால் அமர்ந்திருந்த ஹோம் கார்ட் காவலர் அந்த இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தார். சப்-இன்ஸ்பெக்டர் பலத்தகாயங்களுடன் தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். ஆனால், சிகிச்சை பலனின்றி இறந்தார்.
இவர்கள் மீது லாரியை மோதிய டிரைவர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டான். வேறு வாகனங்களில் வந்தவர்களும் பொது மக்களும் தான்சப்-இன்ஸ்பெக்டரை மருத்துவமனையில் சேர்த்தனர்.
பலியான ஹோம் கார்ட் காவலர் தமிழக மின் வாரியத்தில் பணியாற்றி வந்தார்.
இன்னொரு விபத்தில் 4 பேர் பலி:
இந் நிலையில் கோவை மாவட்டத்தில் நடந்த இன்னொரு விபத்தில் 4 பேர் இறந்தனர். 5 பேர் காயமடைந்தனர்.
சூலூர் அருகே வேன் மீது லாரி மீது மோதியதில் இச் சம்பவம் நடந்தது. இதில் 4 பேரும் சம்பவ இடத்திலேயே இறந்தனர்.
மாடுகளை ஏற்றி வந்த அந்த லாரி கேரளாவுக்குச் சென்று கொண்டிருந்தது. அப்போது எதிரே வந்த வேன் மீது லாரி மோதியது.
-->


