விவசாயிகள் பந்த்: ஸ்தம்பித்தன காவிரி டெல்டா மாவட்டஙகள்
தஞ்சாவூர்:
காவிரியில் தண்ணீர் பெற்றுத் தர தமிழக அரசு முயல வேண்டும், பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு வேலை வாய்ப்புக்கு ஏற்பாடு செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று தஞ்சாவூர், நாகப்பட்டிணம், திருவாரூர் மாவட்டங்களில் இன்று முழு அடைப்புப் போராட்டம் நடந்தது.
இதனால் இந்த மாவட்டங்களில் இயல்பு வாழ்க்கை பெருமளவில் பாதிக்கப்பட்டது. இந்த பந்தையொட்டி சாலை மறியலில் ஈடுபட முயன்ற திமுக, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி எம்.எல்.ஏக்களும் பல்வேறு விவசாய சங்கங்களின் தலைவர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் ஆயிரக்கணக்கான விவசாயிகளும் கைதாகியுள்ளனர்.
விவசாயிகளின் நிலைமை மிக மோசமாக இருப்பதால் அவர்களுக்கு இலவச மதிய உணவு வழங்க தமிழக அரசு முன் வந்துள்ளது. ஆனால், இது போன்ற திட்டங்களால் விவசாயிகளின் பிரச்சனை தீராது எனவும், காவிரி நீர் கிடைக்க வழி செய்ய வேண்டும் அல்லது போரிங் மூலம் ஆழ்குழாய் கிணறுகள் அமைத்து நிரந்தரமாக தண்ணீர் தட்டுப்பாட்டைப் போக்க வழிவகை காண வேண்டும் என விவசாய சங்கங்கள் கோரியுள்ளன.
மதிய உணவுத் திட்டத்தால் பிரச்சனை நிரந்தரமாகத் தீராது என்று அவர்கள் கூறியுள்ளனர். அரசு இத் திட்டத்தை அறிவித்தாலும் அதையும் மீறி இன்று காவிரி டெல்டா மாவட்டங்களில் திட்டமிட்டபடி விவசாயிகள் பந்த் நடந்தது.
இந்த பந்தையொட்டி மூன்று மாவட்டங்களிலும் அரசு பஸ் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. கடைகள் முழுவதும் அடைக்கப்பட்டன. தனியார் பஸ்களும் இயக்கப்படவில்லை. ஆட்டோக்கள், டாக்சிகளும் இயங்கவில்லை.
இதனால் இந்த மூன்று மாவட்டங்களுமே ஸ்தம்பித்துப் போயின. இது தவிர திருச்சி மாவட்டத்தின் சில பகுதிகளும் கடலூர் மாவட்டத்தின் சில பகுதிகளிலும் இந்த பந்த் நடத்தப்பட்டது. தஞ்சாவூரில் போராட்டம் நடத்திய திமுக விவசாய அணித் தலைவர் கே.பி.ராமலிங்கம், விவசாயச் சங்கப் பொதுச் செயலாளர் துரை மாணிக்கம் உள்ளிட்ட ஆயிரக்கணக்கான விவசாயிகள் கைது செய்யப்பட்டனர்.
சிதம்பரத்தில் திமுக எம்.எல்.ஏக்களான எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், துரை சரவணன் உள்ளிட்ட 500 விவசாயிகள் கைது செய்யப்பட்டனர்.
திருவாரூரில் திமுக எம்.எல்.ஏ. அசோகன் தலைமையில் போராட்டத்தில் ஈடுபட்ட 1,000 விவசாயிகள் கைதாகினர்.
அதே போல திருத்துரைப்பூண்டியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் எம்.எல்.ஏ. ஜி. பழனிச்சாமியும் அவருடன் போராட்டம் நடத்திய 2,000 விவசாயிகளும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மன்னார்குடியில் இந்திய கம்யூனிஸ்ட் எம்.எல்.ஏ. சிவபுண்ணியம் தலைமையில் 800 விவசாயிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தற்கொலை: திமுக சிறிய உதவி
இதற்கிடையே திருவாரூர் மாவட்டம் பாளையக்கோட்டை பகுதியில் கடன்தொல்லை காரணமாக தற்கொலை செய்து கொண்ட விவசாயி சண்முகத்தின் குடும்பத்திற்கு திமுக சார்பில் சிறிய நிவாரண உதவி வழங்கப்பட்டது.
திமுக சார்பில் இக் குடும்பத்துக்கு 1 மூட்டை அரிசி, ஒரு மாதத்திற்குத் தேவையான பலசரக்குப் பொருட்கள், ரூ. 2000 ரொக்கம் ஆகியவை வழங்கப்பட்டன.
-->


