தமிழகத்துக்கு தினமும் 4,500 கன அடி நீர் தர கர்நாடகத்துக்கு உத்தரவு
பெங்களூர்:
தமிழகத்துக்கு ஒரு வாரத்துக்கு தினமும் 4,500 கன அடி நீர் விடப்படும் என கர்நாடகம் அறிவித்துள்ளது.
நேற்று முன் தினம் நடக்க இருந்த காவிரி ஆணையக் கூட்டம் இரு மாநில முதல்வர்கள் வராததால் ரத்து செய்யப்பட்டது. இதன்பின்னர் முதல்வர் ஜெயலலிதா, கர்நாடக முதல்வர் கிருஷ்ணாவுடன் பிரதமர் வாஜ்பாய் தனித்தனியே ஆலோசனை நடத்தினார்.
அப்போது குறுவை பயிர்களை முழுவதும் இழந்துவிட்ட தமிழகத்தில் இப்போது 11 லட்சம் ஏக்கரில் பயிரிடப்பட்டுள்ள சம்பாநெல்லைக் காப்பாற்ற முடியாத நிலை உருவாகி இருப்பதை ஜெயலலிதா விளக்கினார். குறைந்தபட்சம் 18.8 டி.எம்.சி. நீரையாவதுதந்தால் தான் 3 லட்சம் ஏக்கரில் உள்ள சம்பா பயிரையாவது காப்பாற்ற முடியும் என்று வாஜ்பாயிடம் தெரிவித்த ஜெயலலிதாஅந்த நீரை விடுவிக்குமாறு உத்தரவிடும்படி கேட்டுக் கொண்டார்.
இதன் பின்னர் வாஜ்பாயைச் சந்தித்த கிருஷ்ணா, தமிழகத்துக்கு 6 டி.எம்.சி. நீரை விடத் தயாராக இருப்பதாகவும், தினமும் 1,200கன அடி நீர் வீதம் பிப்ரவரி மாத இறுதி வரை இந்த நீரை கொஞ்சம் கொஞ்சமாகத் திறந்துவிடுவதாகத் தெரிவித்தார்.
ஆனால், மிகக் குறைவாக நீர் வந்தால் எந்தப் பலனும் இல்லை என தமிழகம் கூறியது. தினமும் 4,500 கன அடி வீதம் குறைந்தது 2வாரங்களுக்காவது நீரைத் திறந்துவிட வேண்டும் என ஜெயலலிதா நேற்று கோரினார்.
இதையடுத்து மத்திய நீர்வளத்துறை அமைச்சகம் இரு மாநில அணைகளின் நீர்மட்டத்தையும் ஆராய்ந்தது. பின்னர் இன்று காலைபிரதமர் வாஜ்பாயிடம் ஒரு கடிதத்தை மத்திய நீர் வளத்துறை அமைச்சர் அர்ஜூன் சரண் சேத்தி கொடுத்தார்.
அதில் தமிழகத்துக்கு கர்நாடகம் தினமும் 4,500 கன அடி நீரை விட வேண்டும். ஒரு வாரத்துக்கு இந்த நீரைத் தொடர்ந்து விடவேண்டும் என்று கூறப்பட்டிருந்தது.
இதையடுத்து கர்நாடக முதல்வர் கிருஷ்ணாவுடன் வாஜ்பாய் பேசினார். தினமும் ஒரு வாரத்துக்கு 4,500 கன அடி நீரை விடுமாறுகேட்டுக் கொண்டார்.
இதை ஏற்று நீரை வழங்க கர்நாடகம் ஒப்புக் கொண்டுள்ளதாக அம் மாநில அமைச்சர் சந்திரே கெளடா இன்று நிருபர்களிடம்தெரிவித்தார்.
-->


