அயோத்தியில் சர்ச்சைக்குரிய நிலமும் வேண்டும்: வி.எச்.பி.
டெல்லி:
இதுவரை அயோத்தியில் சர்ச்சைக்கு அப்பாற்பட்ட நிலத்தை தங்களிடம் ஒப்படைக்கக் கோரி வந்த விஸ்வ இந்து பரிஷத்இப்போது சர்ச்சைக்குரிய நிலத்தையும் ஒப்படைக்க வேண்டும் என்று கூறியுள்ளது.
பாபர் மசூதி இடிக்கப்பட்ட பின்னர் அந்த இடத்தையும் (80 * 40 சதுர அடி நிலம்) அதைச் சுற்றியுள்ள 67 ஏக்கர் நிலத்தையும்மத்திய அரசு தனது கட்டுப்பாட்டில் கொண்டு வந்தது.
பிரச்சனைக்கு பேச்சுவார்த்தை மூலமோ அல்லது நீதிமன்றம் மூலமோ இறுதித் தீர்ப்பு வரும் வரை இந்த இடத்தில் எந்த மதவழிபாடும் செய்யவோ, கட்டடம் கட்டவோ கூடாது என்று உத்தரவிடப்பட்டுள்ளது.
இந் நிலையில் சர்ச்சைக்கு அப்பாற்பட்ட 67 ஏக்கர் நிலத்தை எங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என விஸ்வ இந்து பரிஷத் மத்தியபா.ஜ.க. அரசுக்கு கெடு விதித்தது. 4 வட மாநிலங்களில் சட்டமன்றத் தேர்தல் வருவதால் பா.ஜ.கவுக்கு மறைமுகமாக உதவவேவி.எச்.பி. இந்தப் பிரச்சனையை இப்போது கிளப்புவதாகக் கருதப்படுகிறது.
வி.எச்.பியின் கோரிக்கையை ஏற்று அந்த நிலத்தை விடுவிக்கவும் அதை அவர்களிடம் ஒப்படைக்கவும் தயார் என்று பா.ஜ.க.அரசும் அறிவித்தது. ஆனால், இதில் சட்டச் சிக்கல்கள் வரலாம் என்பதால் இதை எப்படிச் செய்வது என்று சட்ட அமைச்சர்அருண்ஜேட்லி ஆலோசனைகள் நடத்தி வருகிறார்.
நிலத்தை விஸ்வ இந்து பரிஷத்திடம் தருவதில் எந்தத் தவறும் இல்லை என்று உச்ச நீதிமன்றத்திலும் பா.ஜ.க. அரசு ஒரு மனுவைத்தாக்கல் செய்துள்ளது.
இதில் ஒருவேளை நீதிமன்ற எதிர்ப்பு ஏதும் வந்தால் தங்களுக்கு சர்ச்சைக்குரிய நிலம் கிடைக்காது என்பதால் தங்களதுநெருக்குதலை அதிகரிக்க வி.எச்.பி. திட்டமிட்டுள்ளது.
சர்ச்சைக்குரிய இடத்தையும் சேர்த்துக் கேட்டால் நிச்சயம் சர்ச்சைக்குள்ளாகாத நிலமாவது தங்களிடம் கட்டாயம் வந்துசேர்ந்துவிடும் என வி.எச்.பி. கணக்குப் போடுகிறது.
சர்ச்சைக்குரிய நிலத்தை எங்களிடம் தராவிட்டால் நாட்டில் உள்ள ஆயிரக்கணக்கான மசூதிகளையும் எங்களிடம் தருமாறுநாங்கள் கோருவோம் என வி.எச்.பியின் செயலாளர் பிரவீன் தொகாடியா கூறியுள்ளார்.
இன்று டெல்லியில் நிருபர்களிடம் பேசிய அவர், சர்ச்சைக்குரிய நிலத்தை ராம ஜென்ம பூமி அறக்கட்டளையிடம் (வி.எச்.பியின்பிரிவு) ஒப்படைக்க வேண்டும். இல்லாவிட்டால் ஆயிரக்கணக்கான மசூதிகளையும் கேட்டு நாங்கள் போராட்டம்தொடங்குவோம் என்றார்.
மிக மோசமான மத மோதல்களை விளைவிக்கும் பேச்சைப் பேசி வருவதால் தொகாடியாவை மத்தியப் பிரதேசத்துக்குள்நுழையவே அந்த மாநில அரசு தடை விதித்துவிட்டது குறிப்பிடத்தக்கது.


