இட்லி கெடாமல் இருக்க "கதிர்வீச்சு தொழில்நுட்பம்"
ஹைதராபாத்:
தமிழகத்தின் பாரம்பரிய மிக்க உணவான இட்லி ஒரு மாதம் வரை கெட்டுப் போகாமல் இருப்பதற்கான புதியமுறையை பாபா அணு ஆராய்ச்சி நிலையம் கண்டுபிடித்துள்ளது.
தமிழகத்தில் மட்டுமல்லாமல் தென்னிந்திய மாநிலங்களிலும் புகழ்பெற்ற இட்லியை ஒருநாள் மட்டுமேவைத்திருந்து சாப்பிடலாம். குளிர்சாதனப் பெட்டியில் வைத்தாலும் கூட இரண்டு நாட்களில் அது கெட்டுப்போய்விடும்.
இட்லி உருவாகக் காரணமான மாவு ஓரே நாளில் புளித்துப் போய்விடும். அவ்வாறு புளிக்கும்போது அதில்வளரும் பாக்டீரியாக்கள்தான் ஓரிரு நாட்களிலேயே இட்லியைக் கெட்டுப் போகச் செய்கின்றன.
இதையடுத்து அந்த பாக்டீரியாக்களை வளர விடாமல் தடுக்கும் ஆராய்ச்சிகளில் மும்பையில் உள்ள பாபா அணுஆராய்ச்சி நிலையம் ஈடுபட்டது.
அதன்படி கதிர்வீச்சு மூலம் இந்த பாக்டீரியாக்களைக் கொல்வதற்கான தொழில்நுட்பத்தை இந்த ஆராய்ச்சிநிலையம் கண்டுபிடித்துள்ளது. மாவு அதிகமாகப் புளிப்பதற்கு முன்பே "காமா" அணுக்கதிர் வீச்சு மூலம்பாக்டீரியாக்கள் கொல்லப்படுகின்றன.
இதனால் மாவு இட்லியாக அவிந்து புளித்த பின்னரும் அதில் பாக்டீரியாக்கள் வளர்வதற்கு இடமே இல்லாமல்போய்விடுகிறது. இதனால் இட்லியை ஒரு மாதம் வரை கெட்டுப் போகாமல் வைத்திருக்கலாம் என்று இந்தத்தொழில்நுட்பத்தைக் கண்டுபிடித்த விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.
இட்லியைத் தவிர மீன், மட்டன் கபாப் உள்ளிட்ட அசைவப் பொருட்களை நீண்ட நாட்களுக்குக் கெடாமல்வைப்பதற்கான தொழில்நுட்பங்களையும் பாபா அணு ஆராய்ச்சி நிலைய விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.
போர்க் காலத்தில் படையினருக்கு கொடுக்கப்படும் உணவுப் பொருட்கள் பல வாரங்கள் ஆனாலும் கெடாமல்இருக்கச் செய்யும் ஆராய்ச்சிகளின் ஒரு பகுதியாகத் தான் இந்த இட்லி ஆராய்ச்சியும் நடந்தது.


