தாராள விதிமுறை மீறல்களால் தான் அதிமுக வெற்றி: கருணாநிதி
சென்னை:
சாத்தான்குளத்தில் ஆளுங்கட்சியினரின் அதிகார துஷ்பிரயோகத்திற்குக் கிடைத்துள்ள வெற்றிதான்அதிமுகவின் வெற்றி என்று திமுக தலைவர் கருணாநிதி கருத்து தெரிவித்துள்ளார்.திமுக தலைமையகமான அண்ணா அறிவாலயத்தில் நிருபர்களிடம் கருணாநிதி பேசுகையில்,
சாத்தான்குளத்தில் அதிமுகவினர் கோடிக்கணக்கில் வாரி இறைத்துள்ளனர். தேர்தல் விதிமுறைகளும்தாராளமாக மீறப்பட்டுள்ளன. இதுகுறித்து தேர்தல் ஆணையம் விளக்கம் கேட்டபோது தலைமைச்செயலாளர் பொய்யான விளக்கத்தை அளித்தார்.
தேர்தல் பிரச்சாரத்தின் போது சாத்தான்குளம் தொகுதி மக்களுக்கு ஜெயலலிதா அளித்தவாக்குறுதிகள் அதிமுகவிற்குச் சொந்தமான "நமது எம்.ஜி.ஆர்" பத்திரிக்கையில்வெளியிடப்பட்டுள்ளது. அவர் எந்த அளவுக்கு தேர்தல் விதிமுறைகளை மீறும் வகையில்வாக்குறுதிகளை அளித்துள்ளார் என்பது அதைப் பார்த்தாலே தெரியும்.
ஆனால் தேர்தல் கமிஷனுக்கு முற்றிலும் தவறான விளக்கத்தையே தலைமைச் செயலாளர்அளித்துள்ளார். அந்த விளக்கத்தில் உள்ளவை அனைத்தும் வடிகட்டின பொய்.
சாத்தான்குளம் தேர்தலில் அதிமுக வெற்றி பெற்றதை எதிர்த்து வழக்கு தொடரப்பட்டால் அப்போதுஅனைத்து உண்மைகளும் தெரிய வரும்.
முன்னாள் திமுக அமைச்சர் பொன்முடி கைது செய்யப்பட்ட சம்பவம் குறித்து, திமுகவின் உயர்மட்டத்தலைமை கூடி விவாதித்து தக்க பதில் நடவடிக்கை எடுப்பது பற்றி முடிவு செய்யும்.
பொடா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள வைகோ விடுதலை தொடர்பாக சில கட்சித்தலைவர்களுடன் ஏற்கனவே பேசியுள்ளேன். வைகோ கைதை எதிர்த்து பா.ஜ.க. தலைவர்களும் ஒருகோடி கையெழுத்து இயக்கத்தில் கையெழுத்திட்டுள்ளனர். அவர்களுடனும் விரைவில் பேசுவோம்என்றார் கருணாநிதி.
தேர்தல் முடிவு- ராமதாஸ் வேதனை:
இதற்கிடையே சாத்தான்குளம் தேர்தல் முடிவுகள் குறித்து பாமக நிறுவனரான டாக்டர் ராமதாஸ் கடும்அதிருப்தியும் வேதனையும் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில்,
தேர்தல் நடைமுறைகள் குறித்து மக்களுக்கு நம்பிக்கை இழப்பு அதிகரித்து வருவதை சாத்தான்குளம்தேர்தல் முடிவு நிரூபித்துள்ளது.
இது மக்கள் தீர்ப்பு அல்ல. மக்கள் முடிவும் அல்ல என்று அவ்வறிக்கையில் கூறியுள்ளார் ராமதாஸ்.
இதற்கிடையே தமிழக பா.ஜ.க. செயலாளரான எச். ராஜா கூறுகையில், "மதவாதத்தைக் கையில்எடுத்துக் கொண்டு சாத்தான்குளம் தேர்தலில் காங்கிரஸ் போட்டியிட்டது. ஆனால் காங்கிரஸின் இந்தமுடிவை மக்கள் தகர்த்து எறிந்து விட்டனர்" என்றார்.


