மேட்டூர் அணை வறண்டது: குடிநீருக்குக் கூட தண்ணீர் இல்லை
மேட்டூர்:
மேட்டூர் அணை வறண்டு நீர் மட்டம் அடிமட்டத்தைத் தொட்டுவிட்டதால் குடிநீர் வினியோகத்துக்காகதிறந்துவிடப்பட்ட நீர் நிறுத்தப்பட்டுவிட்டது.
தமிழகத்தில் மழைப் பொழிவே இல்லாமல் போனதாலும், கர்நாடகம் நீர் தர மறுத்துவிட்டதாலும் மேட்டூர் அணைவறண்டு கொண்டே வந்தது. அணையின் பெரும்பாலான நீர் சம்பா பயிரைக் காப்பாற்ற திறந்துவிடப்பட்டது.
தொடர்ந்து நீர் கிடைக்காததால் சம்பாவும் தப்பவில்லை. இந் நிலையில் கொஞ்ச நஞ்சம் இருந்த நீர் சேலம்,தஞ்சாவூர், திருச்சி ஆகிய நகரங்களுக்கு குடிநீர்த் தேவைக்காக திறந்துவிடப்பட்டு வந்தது.
ஆனால், நேற்றிலிருந்தே நீர் மட்டம் அடிமட்டத்தைத் தொட்டுவிட்டது. இப்போது அணையில் வெறும் 27.63 அடிதான் நீர் உள்ளது. இது சேறும் சகதியுமான நீர் என்பதால் இதை குடிநீர்த் தேவைக்கும் கூட திறந்துவிட முடியாது.
1996ம் ஆண்டுக்குப் பிறகு மேட்டூரில் நீர் மட்டம் இந்தளவுக்குக் குறைந்துள்ளது இதுவே முதல்முறையாகும்.
இதனால் காவிரிப் படுகை மாவட்டங்களில் குடிநீர்ப் பஞ்சம் தலைதூக்கும் அபாயம் எழுந்துள்ளது.


