வைகோ மீதான பொடா வழக்கு: ஆதாரம் கிடைக்காமல் திணறும் போலீசார்
சென்னை:
பொடா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள மதிமுக பொதுச் செயலாளர் வைகோவுக்கு எதிரானஆதாரங்களைத் திரட்ட முடியாமல் தமிழக போலீஸார் திணறி வருகிறார்கள். இதனால் இது தொடர்பான புலன்விசாரணை தற்போது நடைபெறவில்லை.
விடுதலைப்புலிகளை ஆதரித்துப் பேசியதாக கடந்த ஆண்டு ஜூலை 11ம் தேதி வைகோ கைது செய்யப்பட்டு,பின்னர் வேலூர் சிறையில் அடைக்கப்பட்டார். அவருடன் மேலும் 8 மதிமுக பிரமுகர்களும் கைதுசெய்யப்பட்டனர்.
கடந்த ஜனவரி மாதம் அவர்கள் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது. கடந்த ஆண்டு திருமங்கலத்தில்நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் வைகோ உள்ளிட்டவர்கள் பேசியவற்றை வீடியோ மற்றும் ஆடியோஆதாரங்களாகப் போலீசார் பொடா நீதிமன்றத்தில் சமர்ப்பித்தனர்.
இவை மட்டுமில்லாமல் புலிகளுக்கு ஆதரவாக வைகோ நிதி திரட்டினார் என்றும், வெளிநாடுகளுக்கு பயணம்மேற்கொண்டார் என்றும் இவை குறித்து விரிவான விசாரணை நடைபெறும் என்றும் போலீஸ் அதிகாரி ஒருவர்கூறியிருந்தார்.
ஆனால் இவை தொடர்பாக எந்த விதமான ஆதாரமும் போலீசாருக்கு இதுவரை கிடைக்கவே இல்லை. இதற்கானஆதாரங்களைத் தேடி போலீசார் எவ்வளவோ அலைந்தும் கிடைக்காததால் தற்போது வைகோ உள்ளிட்டவர்கள்மீதான புலன் விசாரணை முழுவதுமாக முடங்கிப் போய் உள்ளது.
மேற்கொண்டு என்ன நடவடிக்கைகளை மேற்கொள்வது என்றும் தெரியாமல் போலீசார் விழித்துக்கொண்டிருப்பதாகத் தெரிகிறது.
பல்வேறு சர்ச்சைகளைக் கிளப்பியுள்ள பொடா சட்டத்தின் 21ம் பிரிவின் கீழ்தான் வைகோ உள்ளிட்டவர்கள் மீதுகுற்றப்பத்திரிக்கைகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இந்தப் பிரிவை எதிர்த்துதான் உச்ச நீதிமன்றத்தில் வைகோவழக்கு தொடர்ந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
உச்ச நீதிமன்றத்தில் இந்த வழக்கு இன்னும் நிலுவையில் உள்ளதால்தான் வைகோ மீதான அடுத்தகட்டநடவடிக்கைகளை போலீசார் நிறுத்தி வைத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
இவ்வழக்கு வரும் 25ம் தேதி உச்ச நீதிமன்றத்தில் மீண்டும் விசாரணைக்கு வருகிறது. அதன் பின்னர்தான் வைகோமீதான பொடா வழக்கும் சூடு பிடிக்குமா அல்லது மேலும் தணியுமா என்பது தெரிய வரும்.


