பெட்ரோல், செல்போன், வாகனங்கள் மீதான வரிகள் அதிகரிப்பு
சென்னை:
தமிழக அரசு இன்று தாக்கல் செய்த பட்ஜெட்டில் ரூ.430 கோடிக்கான புதிய வரிகள் விதிக்கப்பட்டுள்ளன.
தமிழக நிதி அமைச்சர் பொன்னையன் இன்று சட்டசபையில் 2003-04ம் ஆண்டுக்கான பட்ஜெட்டைத் தாக்கல்செய்தார்.
ரூ.865.15 கோடி பற்றாக்குறையுடன் தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்த பட்ஜெட்டில், ரூ.430 கோடிக்கான புதியவரிகள் விதிக்கப்பட்டுள்ளன.
பெட்ரோல், டீசலுக்கு கூடுதல் வரி:
பெட்ரோல் மற்றும் டீசல் ஆகியவற்றுக்கான வரிகளை தமிழக அரசு உயர்த்தியுள்ளது.
பெட்ரோல் வரி 29.4 சதவீதத்திலிருந்து 30 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. டீசல் வரியும் 25 சதவீதமாகஅதிகரித்துள்ளது.
மேலும் வெள்ளை பெட்ரோலின் வரி 4 சதவீதத்திலிருந்து ஒரேயடியாக 25 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது.கெரசின் வரியும் உயர்ந்துள்ளது.
இந்தக் கூடுதல் வரிகள் மூலம் ரூ.200 கோடி அதிக வருமானம் கிடைக்கும் என்று பொன்னையன் அறிவித்தார்.
தொலைபேசி, செல்போன்களுக்கு வரி:
தொலைபேசி மற்றும் செல்போன் ஆகியவற்றுக்கான வாடகைக் கட்டணத்திற்கு 12.5 சதவீத வரிவிதிக்கப்பட்டுள்ளது.
வாகன வரிகள் உயர்வு:
இதற்கிடையே வாகனங்களின் வரிகளும் உயர்த்தப்பட்டுள்ளன.
50 முதல் 75 சி.சி. திறன் கொண்ட மோட்டார் சைக்கிள்களுக்கு ஆயுள் கால வரியாக ரூ.1,500 செலுத்த வேண்டும்.175 சி.சி. திறன் கொண்ட மோட்டர் சைக்கிள்களுக்கு ரூ.2,500ம், 175 சி.சி. திறனுக்கு மேற்பட்ட மோட்டார்சைக்கிள்களுக்கு ரூ.300ம் ஆயுள் கால வரி விதிக்கப்படுகிறது.
புறநகர், விரைவுப் பேருந்துகளுக்கு இருக்கை ஒன்றுக்கு காலாண்டுக்கு ரூ.500 செலுத்த வேண்டும். நகரப்பேருந்துகளுக்கு இருக்கை ஒன்றுக்கு காலாண்டுக்கு ரூ.357 வரி கட்ட வேண்டும். கல்வி நிறுவன பேருந்துகளுக்குரூ.150 வழங்க வேண்டும்.
பெருநகரப் பேருந்துகளுக்கு இருக்கை ஒன்றுக்கு காலாண்டுக்கு ரூ.100 செலுத்த வேண்டும். மேக்ஸிகாப் போன்றவாடகைக் கார்களுக்கு இருக்கை ஒன்றுக்கு ஒரு காலாண்டுக்கு ரூ.500 வரி செலுத்த வேண்டும்.
பசுமை வரி: மிகவும் பழைய வாகனங்களால் சுற்றுச் சூழல் மாசு ஏற்படுகிறது. இதைத் தவிர்க்க 15 ஆண்டுபழமையான மோட்டார் சைக்கிள்கள், தலா ரூ.500 வீதம் ஐந்து ஆண்டுகளுக்கு கட்ட வேண்டும். பிற மோட்டார்வாகனங்களுக்கு 5 ஆண்டுக்கு ரூ.1,000 பசுமை வரி செலுத்த வேண்டும்.


