போரை நிறுத்த சவுதி அரேபியா அமைதி திட்டம்
ரியாத்:
ஈராக் போரை முடிவுக்குக் கொண்டு வர சவுதி அரேபியா ஒரு ரகசிய அமைதித் திட்டத்தை வழிமொழிந்துள்ளது.
ஈராக் மற்றும் அமெரிக்க நாடுகளிடம் இத் திட்டத்தை சவுதி கூறியுள்ளது. சவுதி வெளியுறவுத்துறை அமைச்சர் செளத் அல் பாசல் ரியாத்தில்நிருபர்களிடம் பேசுகையில், நாங்கள் ஒரு திட்டத்தைக் கூறியுள்ளோம். இரு நாடுகளிடம் இருந்தும் பதிலை எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறோம். அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் காலின் பாவலிடமும் இது தொடர்பாக பேசியுள்ளேன் என்றார்.
ஆனால், திட்ட விவரத்தைக் கூற மறுத்துவிட்டார்.
இந் நிலையில் அது போன்ற திட்டம் எதையும் சவுதி எங்களுக்குத் தரவில்லை என அமெரிக்க வெளியுறவுத்துறை மறுத்துள்ளது. இதனால்இத் திட்டத்தை அமெரிக்கா நிராகரித்துவிட்டதாகத் தெரிகிறது.
தனது அமைதித் திட்டம் குறித்து எகிப்து அதிபர் ஹோஸ்னி முபாரக்கிடமும் அல் பாசல் பேசினார்.
நாட்டினருக்கு சதாம் உத்தரவு:
இதற்கிடையே தனது நாட்டின் ஆதிவாசி இனத் தலைவர்கள், சமூகத் தலைவர்களுக்கு ஈராக் அதிபர் சதாம் ஹூசேன் அனுப்பியுள்ளசெய்தியில், அமெரிக்காவுக்கு எதிராக புனிதப் போரைத் தொடங்குமாறு உத்தரவிட்டுள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள செய்தியில், ஆயுதங்களை ஏந்திப் போராட உங்களுக்கு இன்னும் வரவில்லை என்று காத்திருக்காதீர்கள். இந்தச்செய்தியையே உத்தரவாக ஏற்றுக் கொள்ளுங்கள். எங்கெல்லாம் முடியுமோ எப்படி எல்லாம் முடியுமோ அவ்வாறெல்லாம் அமெரிக்க,பிரிட்டிஷ் படைகளைத் தாக்குங்கள்.
ஐ.நாவுக்கு பாக் கோரிக்கை:
ஈராக் மீதான அமெரிக்கத் தாக்குதல் தவறானது என பாகிஸ்தான் கூறியுள்ளது. இதில் ஐ.நா. தலையிட்டு உடனே போரை தடுத்து நிறுத்தவேண்டும் என பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் குர்ஷித் மெஹமூத் கசூரி கூறினார்.
அவர் ஜெர்மன், பிரான்ஸ் நாடுகளின் ஐ.நா. தூதர்களுடன் இணைந்து இந்தக் கோரிக்கையை விடுத்துள்ளார்.
அமெரிக்க கோரிக்கை: ஜப்பான் நிராகரிப்பு
டோக்கியோவில் உள்ள ஈராக்கிய தூதரகத்தை மூடுமாறு அமெரிக்கா விடுத்த கோரிக்கையை ஜப்பான் நிராகரித்துவிட்டது.
இந்தப் போரில் அமெரிக்காவை ஜப்பான் ஆதரித்து வருவது குறிப்பிடத்தக்கது.


