அறிவியல் தமிழ்: 5ம் வகுப்பு வரை புதிய பாடம் அமல்
சென்னை:
தமிழகத்தில் 1ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை அறிவியல் தமிழ் என்ற புதிய பாடம் அறிமுகப்படுத்தப்படவுள்ளது.
மத்தியில் தமிழை ஆட்சி மொழியாக்கினால் தமிழகத்தில் இந்தி மொழியை பள்ளிகளில் பயிற்றுவிக்க நடவடிக்கை எடுக்கப்படும்என்று முதல்வர் ஜெயலலிதா சமீபத்தில் கூறியிருந்தார். இதையடுத்து தமிழகத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியது.
பா.ஜ.கவுடன் சேர்ந்து கொண்டு தமிழகத்தில் இந்தியைத் திணிக்க ஜெயலலிதா முயல்வதாக பல தரப்பினரும் குற்றம் சாட்டினர்.
இந் நிலையில் சட்டமன்றத்தில் இன்று கல்வித் துறைக்கான மானியக் கோரிக்கை தாக்கல் செய்யப்பட்டது.
அப்போது பேசிய காங்கிரஸ் ஜனநாயகப் பேரவையின் எம்.எல்.ஏ. வள்ளல் பெருமாள், தமிழகத்தில் தமிழ் படிப்பது குறைந்துவருகிறது. பல தனியார் பள்ளிகளில் தமிழே சொல்லித் தருவது இல்லை. இதைத் தடுக்கவும் தமிழை போதிக்கவும் மாநில அரசுஎன்ன செய்யப் போகிறது என்று கேட்டார்.
கல்வித் துறைப் பொறுப்பு வகிக்கும் அமைச்சர் செம்மலை பதிலளிக்கையில், தமிழகத்தில் தமிழைப் பயிற்று மொழியாக்கும்திட்டத்தை அமல்படுத்துவதில் சிக்கல் உள்ளது. இது தொடர்பாக உயர் நீதிமன்றத்தில் வழக்கு உள்ளது. எனவே பள்ளிகளில்தமிழை கட்டாயப் பாடமாக்கும் திட்டத்தை அமல்படுத்தமுடியாத நிலை உள்ளது.
எனவே, அதற்கு மாற்றாக 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை உள்ள பாடத் திட்டத்தில் அறிவியல் தமிழ் என்ற புதிய பாடப்பிரிவு சேர்க்கப்படுகிறது. இதை அனைத்துப் பள்ளிகளும் அமல்படுத்த வேண்டும்.
தமிழகத்தில் நடப்பு நிதியாண்டில் 372 ஆரம்பப் பள்ளிகளும், 422 நடுநிலைப் பள்ளிகளும் தொடங்கப்படும் என்றார் அவர்.


