சென்னை விமான நிலையததில் அதிகாரிகள்- கடத்தல் கும்பல் அடிதடி
சென்னை:
சென்னை விமான நிலையத்தில் அதிகாரிகளுக்கும் கடத்தல் கும்பலுக்கும் இடையே அடிதடி நடந்தது.
இன்று காலை சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானத்தில் இருந்து 26 பேர் இறங்கினர். இதில் சிலர் சென்னை பர்மாபஜாரில் உள்ள வெளிநாட்டுப் பொருள்கள் விற்கும் கடைகளுக்கு சிங்கப்பூரில் இருந்து எலெக்ட்ரானிக்கருவிகளைக் கொண்டு வந்திருந்தனர்.
இந்தப் பொருள்களை வாங்கிச் செல்ல பர்மா பஜார் வியாபாரிகள் விமான நிலையத்தின் வெளியே காத்திருந்தனர்.
சிங்கப்பூரில் இருந்து வந்தவர்களை கஸ்டம்ஸ் அதிகாரிகளுடன், வருமானவரித்துறை புலனாய்வு அதிகாரிகளும்சேர்ந்து சோதனையிட்டனர். இந்தச் சோதனை நெடுநேரம் நீடித்தது.
இதனால் பர்மா பஜார் வியாபாரிகள் விமான நிலையத்துக்குள் புகுந்தனர். அங்கு சோதனையில் ஈடுபட்டிருந்தஅதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இது கைகலப்பாக மாறியது. இரு தரப்பினரும் பயங்கரமாகஅடித்துக் கொண்டனர்.
இதையடுத்து விமான நிலையப் பாதுகாப்புப் பணியில் இருந்த மத்திய தொழில்துறை பாதுகாப்புப் படை போலீசார்பர்மா பஜார் வியாபாரிகளைத் தாக்கினர். இதில் பலருக்கும் ரத்தக் காயம் ஏற்பட்டது.
இந்தச் சண்டையால் விமான நிலையமே அல்லோலகல்லோலப் பட்டது. விமானம் ஏற வந்த பயணிகளும்,வழியனுப்ப வந்தவர்களும் சிதறி ஓட வேண்டிய நிலை ஏற்பட்டது.
இச் சம்பவம் தொடர்பாக 6 பர்மா பஜார் வியாபாரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சிங்கப்பூரில் இருந்து வந்தவர்கள் எதையோ கடத்தி வந்திருக்க வேண்டும் என்று தெரிகிறது. இதனால் தான்பிரச்சனையே வந்ததாகவும் தெரிகிறது. குருவிகள் என்று சங்கேத பாஷையில் அழைக்கப்படும் இவர்கள்வெளிநாடுகளுக்குப் போய் அங்கு கடத்தல் மன்னர்கள் தரும் பொருள்களை வாங்கி வந்து இந்தியாவில் உள்ளஅவர்களது ஆட்களிடம் ஒப்படைப்பர். அடிக்கடி பல நாடுகளுக்கும் பறந்து கொண்டிருப்பர்.
விமான நிலைய கண்காணிப்புகள், சோதனைகளையும் மீறி கடத்தலை துல்லியமாகச் செய்து முடிக்கும் திறன்உடையவர்கள் இவர்கள்.


