வைகோ: மத்திய அரசின் திருத்தப்பட்ட மனு நீதிமன்றத்தில் ஏற்பு
டெல்லி:
பொடா சட்டத்தின் கீழ் வைகோ கைது செய்யப்பட்டது தவறு என்று கூறி மத்திய பா.ஜ.க. அரசு தாக்கல் செய்த திருத்தப்பட்ட மனுவை இன்றுஉச்ச நீதிமன்றம் ஏற்றுக் கொண்டது.
பொடா சட்டத்தில் உள்ள பேச்சுரிமையை மறுக்கும் 21வது பிரிவை எதிர்த்து மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வழக்குத்தொடர்ந்துள்ளார். இதில் பதில் மனு தாக்கல் செய்த மத்திய அரசு வைகோ கைது செய்யப்பட்டது சரி தான் என்று கூறியது.
இதற்கு அத்வானி- ஜெயலலிதாவுக்கு இடையிலான ரகசிய அரசியல் உறவு தான் காரணம் என்று வைகோவே குற்றம் சாட்டினார். மத்தியஅரசின் இந்தச் செயலுக்கு திமுக தரப்பில் இருந்து கடும் எதிர்ப்பு கிளம்பியதையடுத்து மனுவைத் திருத்திக் கொள்ள உள்துறை அமைச்சகம்முன் வந்தது.
இந்தத் தவறுக்கு ஜூனியர் வழக்கறிஞர்கள் மீது பழியைப் போட்டது மத்திய அரசு. இதையடுத்து வைகோ கைது செய்யப்பட்டது தவறுஎன்று கூறி மத்திய அரசின் வழக்கறிஞர் சோலி சொராப்ஜி புதிய மனுவைத் தாக்கல் செய்தார்.
ஆனால், இரண்டே நாளில் புதிய மனு தாக்கல் செய்ய வேண்டிய அவசியம் என்ன? முதலில் ஏன் ஒரு மனுவைத் தாக்கல் செய்தீர்கள்?திடீரென ஏன் நிலையை மாற்றினீர்கள் என உச்ச நீதிமன்றம் விளக்கம் கேட்டது.
இதையடுத்து இன்று விளக்கமான மனுவை சோலி சொராஜி தாக்கல் செய்தார். அதில், மத்திய அரசின் நிலையைத் தவறாகப் புரிந்துகொண்டு முதலில் மனு தாக்கல் செய்யப்பட்டுவிட்டது. வைகோ கைது செய்யப்பட்டதை நியாயப்படுத்தும் அந்த மனுவில் உள்ள 12 மற்றும்13வது பாராக்களை நீக்கிவிடுமாறு அதில் சொராப்ஜி கூறியிருந்தார்.
இதைத் தொடர்ந்து மத்திய அரசின் திருத்தப்பட்ட மனுவை உச்ச நீதிமன்றம் ஏற்றுக் கொள்வதாக நீதிபதிகள் ராஜேந்திர பாபு, மாத்தூர்ஆகியோர் அடங்கிய டிவிஷன் பெஞ்ச் அறிவித்தது.


