மனித உரிமைகளை பறிக்கிறார் ஜெயலலிதா: பத்திரிக்கையாளர்கள்- கருணாநிதி குற்றச்சாட்டு
சென்னை:
பொடா சட்டத்தைத் திரும்பப் பெற்று மனித உரிமைகளைக் காக்க மத்திய அரசு முன் வர வேண்டும் என திமுகதலைவர் கருணாநிதி கோரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில், ஏதோ அதிமுக ஆட்சியில் தான் தீவிரவாதிகளும் வீரப்பனின்ஆட்களும் கைது செய்யப்பட்டு வருவது போலவும் திமுக ஆட்சியில் தீவிரவாதிகள் கண்டுகொள்ளப்படாமல்விடப்பட்டது போலவும் பொய்யான பிரச்சாரத்தில் ஜெயலலிதா ஈடுபட்டுள்ளார்.
கடந்த 1991ம் ஆண்டுமுதல் 96ம் ஆண்டு வரையிலான அதிமுக ஆட்சிக் காலத்தில் வீரப்பன் கும்பலைச் சேர்ந்த121 பேர் கைது செய்யப்பட்டனர். 96முதல் 2000மாவது ஆண்டு வரையிலான திமுக ஆட்சிக் காலத்தில் 135 பேர்வீரப்பன் ஆட்கள் கைது செய்யப்பட்டனர்.
இதை ஊரறிய திமுகவினர் பிரசாரம் செய்து மக்களிடம் உண்மை நிலவரத்தை எடுத்துக் கூற வேண்டும்.
ஜெயலலிதா போன்ற பொய் புரட்டு பேசும் ஆட்சியாளர்களிடம் பொடா சட்டம் சிக்கிக் கொண்டு படாதபாடுபடுகிறது. அப்பாவிகளையும் தனது அரசியல் எதிரிகளையும் விமர்சிக்கும் பத்திரிக்கையாளர்களையும் உள்ளேதள்ள பொடா சட்டத்தை ஜெயலலிதா பயன்படுத்தி வருகிறார்.
தமிழகத்தில் மனித உரிமைகளை மீண்டும் நிலை நாட்ட வேண்டுமானால் உடனே இந்தச் சட்டத்தை மத்திய அரசுவாபஸ் பெற்றே ஆக வேண்டும் என்று கருணாநிதி கூறியுள்ளார்.
சுஜாதா, வாசந்தி எதிர்ப்பு:
இந் நிலையில் பொடா சட்டத்தின் கீழ் நக்கீரன் ஆசிரியர் கோபால் கைது செய்யப்பட்டதை எதிர்த்து இன்றுசென்னை பத்திரிக்கையாளர்கள் சங்கத்தில் எழுத்தாளர்கள், நிருபர்கள், கலைஞர்களின் கண்டனக் கூட்டம்நடந்தது.
இதில் பேசிய அனைவரும் கோபாலை பொடா சட்டத்தில் தமிழக அரசு கைது செய்திருப்பதை வன்மையானக்கண்டித்தனர். தனி மனித சுதந்திரத்துக்கும் மனித உரிமைகளுக்கும் எதிராக பொடாவை ஜெயலலிதா பயன்படுத்திவருவதாக குற்றம் சாட்டினர்.
எழுத்தாளர் சுஜாதா பேசுகையில், தமிழ் நாட்டில் மட்டுமல்ல இந்தியா முழுவதுமே இந்தச் சட்டம் துஷ்பிரயோகம்செய்யப்பட்டு வருகிறது. இதனால் முதலில் இந்தச் சட்டத்தை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் என்றார்.
எழுத்தாளர் வாசந்தி பேசுகையில், கோபால் பொடா சட்டத்தில் கைது செய்யப்பட்டிருப்பது இந்தச் சட்டத்தைஎப்படியெல்லாம் மிகத் தவறாகப் பயன்படுத்த முடியும் என்பதற்கு உச்சகட்ட எடுத்துக்காட்டு. ஒரு அரசைவிமர்சித்து எழுதினால், தவறுகளைச் சுட்டிக் காட்டினால் பொடாவில் உள்ளே தள்ளுவார்களாம். என்ன அநியாயம்இது என்றார்.
இக் கூட்டத்தில் கருணாநிதியின் மகளும் எழுத்தாளருமான கனிமொழியும் கலந்து கொண்டார்.
சென்னையில் கலைஞர்கள், பத்திரிக்கையாளர்களைக் கூட்டி மாநாடு நடத்தவும் இக் கூட்டத்தில்முடிவுசெய்யப்பட்டுள்ளது.


