பொடாவில் வைகோ கைது செய்யப்பட்டது தவறு: உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு அறிவிப்பு
டெல்லி:
விடுதலைப் புலிகளை ஆதரித்து வைகோ பேசியது பொடா சட்டத்தின் கீழ் குற்றமாகாது என உச்ச நீதிமன்றத்திடம் மத்திய அரசு விளக்கம்தந்துள்ளது.
இதன்மூலம் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ மீதான பொடா வழக்கு நியாயமற்றது என்று நீதிமன்றத்திடம் மத்திய அரசு கூறியுள்ளது.
பொடா சட்டத்தின் சில பிரிவுகள் குறித்து மத்திய அரசிடம் உச்ச நீதிமன்றம் விளக்கம் கேட்டிருந்தது. இந்தச் சட்டத்தின் கீழ் ஒருவர்வாக்குமூலம் தந்தால் அதை முதலில் போலீஸ் அதிகாரி பதிவு செய்ய வேண்டும் அதன் பின்னர் தான் மாஜிஸ்திரேட்டிடம் அந்தவாக்குமூலம் பதிவு செய்யப்படும்.
மாஜிஸ்திரேட்டே ஏன் நேரடியாக வாக்குமூலத்தை பதிவு செய்யக் கூடாது?. எதற்காக போலீஸ் அதிகாரி முதலில் வாக்குமூலம் பெறவேண்டும் என்று விளக்கம் தருமாறு உச்ச நீதிமன்றம் கோரியிருந்தது.
அதே போல பொடா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டவர் ஒரு வருடத்துக்கு முன் ஜாமீன் கோர முடியுமா? முடியாதா? என்பது குறித்தும்விளக்கம் கேட்டிருந்தனர்.
இது தவிர இந்தச் சட்டத்தின் 14வது பிரிவின் கீழ் பத்திரிக்கையாளர்களுக்கு ஏற்பட்டுள்ள பிரச்சனைகள், 21வது பிரிவின் கீழ் (வைகோகைதான பிரிவு) பேச்சுரிமைக்கு ஏற்பட்டு கேடு ஆகியவை குறித்தும் விளக்கம் கேட்டனர்.
இந்தக் கேள்விகளுக்கு இன்று மத்திய அரசின் வழக்கறிஞர் சோலி சொராப்ஜி நீதிமன்றத்திடம் விளக்கம் தந்தார். அவர் கூறுகையில்,
பொடா சட்டத்தின் 14வது பிரிவின்படி தீவிரவாதிகள் நடவடிக்கை குறித்து நிருபர்கள், வழக்கறிஞர்கள் ஆகியோர் தங்களுக்குத் தெரிந்தவிவரங்களை போலீசாரிடம் தெரிவித்தே ஆக வேண்டும். இந்த விஷயத்தில் அவர்களுக்கும் பொது மக்களுக்கும் எந்த வித்தியாசமும்இல்லை.
இது தொடர்பான உண்மைகளை மறைக்கும் அதிகாரம் பத்திரிக்கையாளர்களுக்கு இல்லை. தீவிரவாதிகளிடம் பேட்டி எடுக்கும்போது,தீவிரவாத அமைப்புகள் குறித்து செய்தி சேகரிக்கும்போது கிடைக்கும் விவரங்களை அவர்கள் போலீசாருக்குத் தந்து தான் ஆக வேண்டும்.
வைகோ செய்தது தவறல்ல:
அதே நேரத்தில் ஒரு தீவிரவாத இயக்கத்தை ஆதரித்துப் பேசுவதால் மட்டும் அவர் பொடா சட்டத்தின் 21வது பிரிவின் கீழ் தவறுசெய்தவராகிவிட மாட்டார். விடுதலைப் புலிகளை ஆதரித்து வைகோ பேசியது குற்றமான செயல் அல்ல. இது தீவிரவாத செயலும் அல்ல.
இதன் மூலம் தீவிரவாத்தைத் தூண்டியதாகவோ, தீவிரவாதிகளுக்கு அவர் உதவியதாகவோ கூற முடியாது என்றார்.
முதலில் புலிகளை ஆதரித்து வைகோ பேசியது தவறு தான் என்றும், கைதான ஒரு வருடத்துக்குள் ஜாமீன் கேட்க முடியாது என்றும் துணைப்பிரதமர் அத்வானியின் நெருக்குதலால் நீதிமன்றத்தில் மத்திய அரசு வழக்கறிஞர்கள் கூறியிருந்தனர்.
இதற்கு திமுக, மதிமுக, பா.ம.கவிடம் இருந்து கிளம்பிய ஒட்டு மொத்த எதிர்ப்பால் பிரதமர் வாஜ்பாய் தலையிட்டார். இதனால் தான்இப்போது வைகோவுக்கு ஆதரவாக மத்திய அரசு கருத்துத் தெரிவித்துள்ளது.
அத்வானிக்கு கண்டனம்:
இந் நிலையில் பொடாவை மாநில அரசுகள் தவறாகப் பயன்படுத்துவதைத் தடுக்கத் தவறிவிட்டதாக மத்திய அரசுக்கு குறிப்பாக உள்துறைஅமைச்சராக உள்ள அத்வானிக்கு இன்று மக்களவையில் எதிர்க் கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்தன.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உறுப்பினர்களான பாசுதேப் ஆச்சார்யா, சோம்நாத் சாட்டஜி, ரூப்சந்த் பால் ஆகியோர் பேசுகையில்,
தமிழகத்தில் நிலைமை ரொம்ப மோசமாக உள்ளது. வைகோவையும் பத்திரிக்கையாளர்களையும் கூட பொடாவில் உள்ளேதள்ளியிருக்கிறது அந்த மாநில அரசு. இதனால் இந்தச் சட்டத்தை உடனே வாபஸ் பெற வேண்டும்.
வைகோ கைது விஷயத்தில் முதலில் கைது சரி என்று சொன்னது மத்திய அரசு. பின்னர் தவறு என்று சொன்னது. ஏன் இந்தக் குழப்பம்? என்றுகேட்டனர்.
காங்கிரஸ் கட்சியின் எம்.பியான பிரியரஞ்சன் தாஸ்முன்ஷி பேசுகையில், சரியாகச் சொன்னால் பிரவீன் தொகாடியாவைத் தான் இதுபோன்ற சட்டத்தில் கைது செய்ய வேண்டும். ஆனாலும் எங்களது கட்சி முதல்வர்கள் பொடா சட்டத்தைத் தவறாகப் பயன்படுத்தவில்லை.பதிலாக இந்திய குற்றவியல் சட்டத்தைத் தான் பயன்படுத்தினார்கள் என்றார்.
இதற்கு பதிலளித்த அத்வானி, பொடா தவறுதலாகப் பயன்படுத்தப்படுவதைத் தடுக்க மறுபரிசீலனைக் கமிட்டி அமைக்கப்பட்டுள்ளது.அந்தக் கமிட்டி தவறுகளைத் திருத்தும். அதே நேரத்தில் மாநில அரசுகள் பொடாவை எப்படிப் பயன்படுத்தி வருகின்றன என்பது குறித்துநான் கருத்து சொல்ல முடியாது என்றார்.


