ஜாமீன் கிடைக்காததால் நீதிமன்றத்திலிருந்து தப்பி ஓடிய பெண்
கோபிசெட்டிப்பாளையம்:
செக் மோசடி வழக்கு தொடர்பாக நீதிமன்றத்தில் சரண் அடைந்த பெண் தனக்கு நீதிபதி ஜாமீன்வழங்க மறுத்ததைத் தொடர்ந்து அங்கிருந்து தப்பி ஓடினார்.
கோபிச்செட்டிப்பாளையம் கடை வீதியில் வசித்து வருபவர் சிவகாமி. இவர் முத்துச்சாமி,ராஜரத்தினம் மற்றும் மூர்த்தி ஆகியோரிடமிருந்து ரூ.3 லட்சம் வரை கடன் வாங்கி இருந்தார்.
இந்தக் கடனைத் திருப்பிச் செலுத்துவதற்காக அவர் 3 பேரிடமும் "செக்"குகளைக் கொடுத்திருந்தார்.ஆனால் அவருடைய வங்கிக் கணக்கில் பணம் இல்லாததைத் தொடர்ந்து வங்கியிலிருந்து"செக்"குகள் அனைத்தும் அந்த 3 பேருக்கும் திரும்பி விட்டன.
இதைத் தொடர்ந்து முத்துச்சாமி, ராஜரத்தினம் மற்றும் மூர்த்தி ஆகிய 3 பேரும்கோபிச்செட்டிப்பாளையம் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
இவ்வழக்கு தொடர்பாக நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு பலமுறை சிவகாமிக்கு சம்மன்அனுப்பப்பட்டது. ஆனால் அவர் தொடர்ந்து ஆஜராகாமல் இருந்து வந்ததால் சிவகாமியைக் கைதுசெய்யுமாறு பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டது.
இதையடுத்து தன் வக்கீலுடன் நீதிமன்றத்தில் சரணடைந்தார் சிவகாமி. மேலும் தன்னை ஜாமீனில்விடுதலை செய்யுமாறும் கோரி அவர் மனு தாக்கல் செய்தார். ஆனால் அம்மனுவை நீதிபதிநிராகரித்தார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த சிவகாமி, அனைவரும் பார்த்துக் கொண்டிருக்கும்போதேநீதிமன்றத்திலிருந்து தப்பி ஓடி விட்டார். இதனால் நீதிமன்றத்தில் இருந்தவர்கள் அதிர்ச்சிஅடைந்தனர்.
இதையடுத்து சிவகாமியை உடனடியாகக் கைது செய்யுமாறு போலீசாருக்கு நீதிபதிஉத்தரவிட்டுள்ளார். அவரைப் போலீசார் தேடி வருகின்றனர்.


