சீன நீர்மூழ்கி கப்பல் விபத்துக்குள்ளானது: 70 வீரர்கள் பலி
பெய்ஜிங்:
சார்ஸ் நோய் காரணமாக பெரும் மருத்துவ சிக்கலில் மாட்டியுள்ள சீனாவுக்கு அடி மேல் அடி விழுந்துள்ளது.
அந் நாட்டின் நீர் மூழ்கிக் கப்பல் விபத்துக்குள்ளானதில் 70 வீரர்கள் உயிரிழந்துள்ளனர். இச் சம்பவம் எப்போதுநடந்தது என்பதை சீனா விளக்கவில்லை. பொதுவாக ராணுவ உயிரிழப்புகளை சீனா வெளியுலகுக்கு சொல்வதேஇல்லை.
அதுவும் சார்ஸ் நோயால் தேசமே செயலிழந்து வரும் நிலையில் தனது நீர்மூழ்கிக் கப்பல் விபத்தையும் சீனாவெளியில் கூறியுள்ளது பல நாடுகளையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
மஞ்சள் கடல் எனப்படும் கிழக்கு சீனக் கடலில் வட கொரியாவுக்கு அருகே போர் பயிற்சியில் ஈடுபட்டிருந்த்போதுஇந்த நீர்மூழ்கி விபத்துக்குள்ளானதாகத் தெரிகிறது. தொழில்நுட்பக் கோளாறு காரணமாக அது வெடித்து நீரில்முழ்கியதாகவும் இதில் 70 வீரர்கள் உயிரிழந்துவிட்டதாகவும் சீன அரசின் சின்குவா செய்தி நிறுவனம் கூறியுள்ளது.
டீசலைக் கொண்டு இயங்கும் இந்த நீர் மூழ்கி மிங் ரகத்தைச் சேர்ந்தது. இந்த வகையைச் சேர்ந்த 90 நீர் மூழ்கிகள்சீனாவிடம் உள்ளதாகக் கூறப்படுகிறது.
2000ம் ஆண்டில் ரஷ்ய நீர்மூழ்கியான க்ருஸ்க் விபத்துக்குள்ளானதில் 118 வீரர்கள் பலியாயினர். அதன் பிறகுநடந்துள்ள மிகப் பெரிய நீர்மூழ்கி விபத்து இது தான்.
சார்சுக்கு இன்று 19 பேர் சாவு:
இதற்கிடையே சீனாவில் சார்ஸ் நோய் பரவல் இன்னும் கட்டுக்குள் வரவில்லை. தொடர்ந்து பரவி வரும் அந்தநோய்க்கு இதுவரை 191 பேர் பலியாகியுள்ளனர். சுமார் 3,971 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று மட்டும்சீனாவிலும் ஹாங்காங்கிலுமாக 19 பேர் பலியாகியுள்ளனர். இவர்களில் 3 பேர் பெண்கள். மரணமடைந்தவர்கள் 50முதல் 96 வயதுக்குட்பட்டவர்கள்.
இந் நிலையில் சீன மருத்துவர்கள், மருத்துவமனை ஊழியர்களிடையே இப்போது சார்ஸ் பரவல்அதிகரித்துள்ளதாக உலக சுகாதார அமைப்பு கூறியுள்ளது. இவர்கள் சார்ஸ் நோயாளிகளுக்கு சிகிச்சைஅளித்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இதுவரை சீன மருத்துவமனைகளின் ஊழியர்கள் 778 பேர் இந்த நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர் என சுகாதாரஅமைப்பு கூறியுள்ளது.


