போலீஸ் வேலை: பிற்பட்டோர், தலித்கள் வயது வரம்பை குறைக்க சதி- கருணாநிதி குற்றச்சாட்டு
சென்னை:
போலீஸ் பணியில் சேருவதற்கு தலித்கள், பிற்படுத்தப்பட்டோருக்கான அதிகபட்ச வயது வரம்பைக் குறைக்க தமிழக அரசு முடிவுசெய்துளளதாக திமுக தலைவர் கருணாநிதி குற்றம் சாட்டியுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
இப்போது காவல்துறையில் பணிக்குச் சேர தலித்கள் 35 வயது வரை விண்ணபிக்கலாம் என்ற வரம்பு உள்ளது. இதை 29 வயதாகக் குறைக்கஅரசு திட்டமிட்டுள்ளது.
அதே போல பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் ஆகியோர் 32 வயது வரை விண்ணப்பிக்க முடியும். ஆனால், அதை 24ஆகக் குறைக்கவும் சதி நடப்பதாக எனக்குத் தகவல் கிடைத்துள்ளது.
காவலர்களாக பணியில் சேர 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தாலே போதும். இதனால் இந்தப் பணியில் சேர பிற்படுத்தப்பட்டோர், மிகவும்பிற்படுத்தப்பட்டோர், தலித்கள் தான் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.
கல்விரீதியில் முன்னணியில் உள்ள பிற இனத்தினர் போலீஸ் பணிக்கு வருவதே இல்லை.
இப்போது வயது வரம்பைக் குறைப்பதன் மூலம் தலித்கள், பிற்படுத்தப்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கு போலீஸ்வேலை கிடைப்பதைத் தடுக்க தமிழக அரசு சதி செய்து வருகிறது.
இந்த அநியாயம் நடந்து விடாமல் தடுக்க வேண்டிய கடமை முதல்வர் ஜெயலலிதாவுக்கு உண்டு.
இவ்வாறு கருணாநிதி தனது அறிக்கையில் கூறியுள்ளார்.


