டி.ஆர்.பாலு மீது மக்களவையில் அதிமுக உரிமைப் பிரச்சனை
டெல்லி:
ராணி மேரிக் கல்லூரி இடிப்பதைத் தடுக்கும் வகையில் புதிய அரசாணை வெளியிட்ட மத்திய சுற்றுச்சூழல்துறை அமைச்சர்டி.ஆர்.பாலுவுக்கு எதிராக லோக்சபாவில் அதிமுக எம்.பிக்கள் உரிமை மீறல் பிரச்சனை கொண்டு வந்துள்ளனர்.
இன்று கேள்வி நேரம் முடிந்தவுடன் அதிமுக எம்.பி. செல்வகணபதி இந்தப் பிரச்சனையைக் கிளப்பினார்.
அவர் பேசுகையில், கடற்கரைப் பாதுகாப்பு என்ற பெயரில் டி.ஆர். பாலு சட்ட விரோதமாக ஒரு அரசாணையைப் பிறப்பித்துள்ளார். இதுதமிழக அரசின் தலைமைச் செயலகம் கட்டும் பணிக்கு எதிராக கொண்டு வரப்பட்ட சட்டம். தனது அதிகாரப் பொறுப்பை தவறாகப்பயண்படுத்தி இந்த உத்தரவை பாலு பிறப்பித்துள்ளார். இதன் மூலம் தனது உரிமையை மீறியுள்ளார். இதனால் பாலு மீது நடவடிக்கைஎடுக்க வேண்டும் என்றார்.
இதை திமுக உறுப்பினர்கள் எதிர்த்தனர். இதையடுத்து இரு தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. திமுக உறுப்பினரான பழனிமாணிக்கம் கூறுகையில், ஒரு மாநில சட்டமன்றத்தில் விவாதிக்கப்பட்ட விஷயத்தை மக்களைவையில் விவாதிக்க இடமில்லை. ராணி மேரிக்கல்லூரி தொடர்பாக தமிழக அரசு சட்டமன்றத்தில் விலாவாரியாக விவாதிக்குவிட்டது.
இந் நிலையில் இந்தப் பிரச்சனையை மக்களவையில் கிளப்புவது மட்டும் மரபு மீறல் இல்லையா என்று கேட்டார்.
அப்போது சபாநாயகர் முரளி மனோகர் ஜோஷி அவையில் இல்லை. அவருக்குப் பதிலாக அதிமுக எம்.பியான பி.எச்.பாண்டியன்சபாநாயகர் இருக்கையில் அவரது பொறுப்பில் இருந்தார்.
அப்போது பேசிய பாண்டியன், இந்த உரிமை மீறல் விவகாரம் குறித்து சபாநாயகர் பரிசீலித்து வருகிறார் என்றார்.
கோபால்- திமுக கையெழுத்து இயக்கம்:
இந் நிலையில், நக்கீரன் ஆசிரியர் கோபால் பொடா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டதை எதிர்த்து கையெழுத்து இயக்கம் நடத்திய திமுகஎம்.பிக்கள் அனைத்துக் கட்சிகளையும் சேர்ந்த சுமார் 300 எம்.பிக்களிடம் கையெழுத்து வாங்கியுள்ளனர். இந்த கண்டனக் கடிதம் இன்றுதுணைப் பிரதமர் அத்வானியிடம் அளிக்கப்படுகிறது.


