For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

"முள்ளை முள்ளால் எடுக்க..."

By Staff
Google Oneindia Tamil News

மதுரை

வெளவால்களால் சேதப்படுத்தப்படும் பழத் தோட்டங்களைப் பாதுகாக்க அவற்றைச் சுற்றிலும்செர்ரிப் பழங்களை அதிகம் தரும் மரங்களை வளர்க்க வேண்டும் என்று மதுரை காமராஜர்பல்கலைக்கழக விஞ்ஞானிகள் யோசனை தெரிவித்துள்ளனர்.

"இரவினில் ஆட்டம் பகலினில் தூக்கம்" போடும் வெளவால்கள் பழத் தோட்டங்களில் புகுந்துதிராட்சை, மா, சப்போட்டா, கொய்யா போன்ற பழங்களைத் துவம்சம் செய்வதும் தொடர்கதை.

இதனால் பழத்தோட்ட விவசாயிகள் ஆயிரக்கணக்கில் செலவு செய்து பழத் தோட்டங்களைச்சுற்றிலும் வலை அடிக்கிறார்கள். அல்லது இரவு முழுவதும் கொட்டக் கொட்ட விழித்திருந்துதீப்பந்தங்களைக் கட்டியும், தகர டப்பாக்கள் மூலம் ஒலி எழுப்பியும் வெளவால்களைவிரட்டுகிறார்கள்.

இதுபோன்ற சிரமங்களைத் தவிர்க்க, வெளவால்கள் குறித்து ஆராய்ச்சி செய்யும் மதுரை காமராஜர்பல்கலைக்கழக விஞ்ஞானிகள் ஒரு புதிய யுக்தியைக் கண்டுபிடித்துள்ளனர்.

பொதுவாக ஒரு இரவில் குறிப்பிட்ட பழத் தோட்டத்திற்குச் செல்லும் வெளவால்கள் அந்தப்பழத்தை அதிகமாகச் சாப்பிடுவதில்லை என்ற விவரத்தை "வெளிச்சத்துக்கு"க் கொண்டுவந்துள்ளனர்.

"செர்ரி" சாப்பிடும் வெளவால்கள்:

உதராணமாக, கொய்யாத் தோப்புக்குச் செல்லும் வெளவால்கள் கொய்யாப் பழங்களை அதிகம்சாப்பிடுவதில்லை. மாறாக அந்தத் தோப்பிற்குச் செல்லும் வழியில் வைக்கப்பட்டுள்ள செர்ரிமரத்திலுள்ள பழங்களைத்தான் அதிகம் சாப்பிடுகின்றன.

ஒரு இரவில் கொய்யா மரங்களை நோக்கி 100 முறை "விசிட்" செய்யும் ஒரு வெளவால், செர்ரிமரத்திற்கு 500 முறை படையெடுப்பதை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். அந்த செர்ரிப்பழங்களையே அதிகம் விரும்பி உண்பதும் தெரிய வந்துள்ளது.

இருந்தாலும், கொய்யாத் தோப்பிற்குள் புகுந்து விட்டு வருவதால் அங்குள்ள கொய்யாப் பழங்களைசரியாகச் சாப்பிடாததோடு பெரும்பாலான பழங்களை நாசம் செய்தும் விடுகின்றன (இத்தனைக்கும்ஒரு நாளைக்கு ஒரு மணி முதல் மூன்று மணி நேரம் வரை மட்டுமே அவை பழங்களைவேட்டையாடுகின்றன).

இதனால் அந்தத் தோப்பின் சொந்தக்காரருக்குப் பெரும் நஷ்டம் ஏற்பட்டு விடுகிறது. ஆனால் அவர்தன் கொய்யத் தோப்பைச் சுற்றிலும் செர்ரி மரங்களை நட்டு வைத்தால் இதுபோன்ற நஷ்டங்களைத்தவிர்க்கலாம் என்பதே மதுரை பல்கலைக்கழக விஞ்ஞானிகளின் கண்டுபிடிப்பு ஆகும்.

செர்ரி... செர்ரி...

மனிதர்களும், குறிப்பாக சிறுவர்களும் விரும்பிச் சாப்பிடும் செர்ரி பழங்களைக் கொண்டமரங்களை நிறைய வளர்த்தால் கொய்யா, மா, சப்போட்டா, திராட்சைத் தோட்டங்களையேநம்பியுள்ள விவசாயிகள் நிம்மதியாக இருக்கலாம் என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

பொதுவாக நம் ஊர்களில் சாலையோரங்களில் செர்ரி மரங்கள் காணப்படுவது வழக்கம். சுமார் 8மீட்டர் உயரம் வரை வளரும் இந்த மரங்களில் உள்ள செர்ரிப் பழங்கள் ஒரு சுண்டைக்காய்அளவுதான் இருக்கும். ஆரஞ்சு நிறத்தில் உள்ள இந்த இனிப்பான பழங்களைத்தான் வெளவால்கள்"சக்கைப் போடு" போடுகின்றன.

சிங்கப்பூரிலிருந்து இந்த செர்ரி மரங்கள் நம் நாட்டுக்கு வந்ததால் இவை "சிங்கப்பூர் செர்ரி"என்றும் "சூரிநாம் செர்ரி" என்றும் அழைக்கப்படுகின்றன. செர்ரி மரத்தின் கிளைகள் ராட்சத குடைபோன்று விரிந்து வளர்வதால் நிறைய நிழல் கொடுக்கும்.

முள்ளை முள்ளால்...

எனவே "முள்ளை முள்ளால் எடுக்க வேண்டும்" என்ற பழமொழிக்கேற்ப வெளவால்களிடமிருந்துபழத் தோட்டங்களைப் பாதுகாக்க வேண்டும் என்றால், விவசாயிகள் இதுபோன்ற செர்ரிமரங்களைத் தங்கள் பழத் தோட்டங்களைச் சுற்றிலும் நிறைய வளர்க்க வேண்டும் என்றுவிஞ்ஞானிகள் வலியுறுத்துகின்றனர்.

இதனால் அவை பழத் தோட்டங்களை விட செர்ரி மரங்களை நோக்கியே அதிகம் செல்லும் என்றுஇந்த விஞ்ஞானிகள் அடித்துக் கூறுகின்றனர். இதனால் விவசாயிகளின் பழத் தோட்டங்கள் தப்பிப்பிழைப்பதோடு, வெளவால்களும் தங்களுக்கு மிகவும் பிடித்த செர்ரிப் பழங்களையே அதிகம்சாப்பிடுகின்றன.

ஒரு செர்ரி செடி வளர்ந்து மரமாவதற்கு 18 மாதங்கள் (ஒன்றரை ஆண்டுகள்) ஆகும் என்ற கூடுதல்தகவலையும் நம்மிடம் தெரிவித்த விஞ்ஞானிகள் செர்ரி செடிகள் கிடைக்கும் முகவரியையும்கூறினர். அதன் முகவரி: தமிழ்நாடு நர்சரி கார்டன், 9 சிவகங்கை மெயின் ரோடு, கோமதிபுரம்,மதுரை 625 020 (தொலைபேசி எண் - 0452-2585558).

"வெளவாலையும் பாதுகாக்க வேண்டும்":

பழங்களை வெளவால்கள் வேட்டையாடுவதாலேயே அவை நமக்குக் கெடுதல் செய்கின்றன என்றுநாம் நினைத்து விடக் கூடாது என்றும் விஞ்ஞானிகள் கூறுகின்றனர் ("வெளவால் விஞ்ஞானிகள்"ஆயிற்றே!).

செர்ரி உள்ளிட்ட பழங்களைச் சாப்பிடும் வெளவால்கள் அவற்றின் விதைகளை ஆங்காங்கேஉதிர்த்து விடுவதால், அந்த விதைகள் வளர்ந்து மீண்டும் மரங்களாகின்றன என்கிறார் மதுரைபல்கலைக்கழகத்தின் உயிரியல் துறையைச் சேர்ந்த டாக்டர் ஜி. மாரிமுத்து.

பழங்களை மட்டுமில்லாமல் வாழை, இலவம், இலுப்பை ஆகிய பூக்களில் உள்ள தேனையும்வெளவால்கள் விரும்பி உண்பதாகக் கூறும் அவர், ஒரு பூவிலிருந்து வேறொரு பூவுக்கு பறந்துசெல்லும்போது "அயல் மகரந்தச் சேர்க்கை" நடைபெறவும் அவை உதவுகின்றன என்கிறார்.

மேலும் காய்கள் மற்றும் செடிகள் ஆகியவற்றைத் தின்று தீர்க்கும் பூச்சிகளைக் கூட சில வகைவெளவால்கள் வேட்டையாடுவதால் அனைத்து வெளவால்களையுமே பாதுகாக்க வேண்டும்என்கிறார் டாக்டர் மாரிமுத்து.

மத்திய சுற்றுச் சூழல் துறை அமைச்சகத்தின் நிதி உதவியுடன் கடந்த 20 ஆண்டுகளாக வெளவால்கள்குறித்து ஆராய்ச்சி நடத்தி வரும் டாக்டர் மாரிமுத்துவின் பி.எச்டி. ஆராய்ச்சி மாணவரானசிங்காரவேலன் என்பவர்தான் வெளவால்கள் அதிகமாக செர்ரி மரங்களை நாடிச் செல்வதைக்கண்டுபிடித்துள்ளார்.

கடந்த 3 ஆண்டுகளாக இரவில் கண் விழித்து அவர் இந்த ஆய்வை மேற்கொண்டார் என்பதுகுறிப்பிடத்தக்கது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X