ஜாதீய வன்கொடுமைகள்: உளவுப் பிரிவினர் மீது திருமாவளவன் பரபரப்பு புகார்
மதுரை:
தலித் மக்களுக்கு எதிராக நடக்கும் வன்கொடுமைகள் குறித்துக் கிடைக்கும் தகவல்களை மூடி மறைத்து, ஜாதிமோதல்களுக்கு வழி வகுத்து வருவதாக தமிழக உளவுப் பிரிவு போலீஸார் மீது விடுதலை சிறுத்தைகள்அமைப்பின் பொதுச் செயலாளர் திருமாவளவன் குற்றம் சாட்டியுள்ளார்.
காவல்துறையின் முன்னாள் தடயவியல் பிரிவு ஊழியரான திருமாவளவன் மதுரையில் நிருபர்களிடம்கூறியதாவது:
ஜாதீரீதியில் தலித்களுக்கு எதிராக நடக்கும் வன்கொடுமைகள் தொடர்பாகக் கிடைக்கும் தகவல்களை முதல்வரின்காதுகளுக்குக் கொண்டு போகாமல் மறைத்து விடும் முயற்சியில் உளவுப் பிரிவினர் ஈடுபட்டுள்ளனர்.
ஆங்காங்கே ஜாதி மோதல்கள் ஏற்பட்ட பிறகு தான் முதல்வருக்கு அதற்கான காரணம் தெரிவிக்கப்படுகிறது. அதைமுன்பே அறிந்திருக்கும் உளவுப் பிரிவு போலீசார் முதல்வரிடமும் மறைத்து, தலைமையிடமும் மறைப்பதால் ஜாதிமோதல்களை முன் கூட்டியே தடுக்க நடவடிக்கை எடுக்கப்படாமல் போய்விடுகிறது.
எனவே, வன்கொடுமைகள் குறித்து முதல்வரின் நேரடி மேற்பார்வையில், முதல்வருடன் எந்த நேரத்திலும்தொடர்பு கொள்ளும் வகையிலான தனி உளவுப் பிரிவு அமைக்கப்பட வேண்டும்.
குண்டர் சட்டத்தையும், தேசிய பாதுகாப்புச் சட்டத்தையும் தலித்களைப் பழி வாங்கும் வகையில் போலீஸார்பயன்படுத்தி வருகிறார்கள். இந்தச் சட்டங்களால் கைதானவர்களில் பெரும்பான்மையானவர்கள் தலித்களும், பரமஏழைகளும் தான்.
இதனால் அந்தச் சட்டங்களையே திரும்பப் பெற வேண்டும். இதை வலியுறுத்தி மிகப் பெரிய இயக்கம் நடத்தமுடிவு செய்துள்ளோம். இது குறித்து விவாதிக்க சென்னை, தர்மபுரி, விழுப்புரம், திருநெல்வேலி, திருவாரூர் ஆகியஇடங்களில் மாநாடுகள் நடத்தபடும்.
பொடா சட்டத்தின் கீழ் மிகப் பெரிய ஆட்கள் கைது செய்யப்பட்டதால் எல்லோரும் அந்தச் சட்டத்தைப் பற்றியேபேசி வருகின்றனர். ஆனால், தலித்களையும் ஏழைகளையும் ஒடுக்கும் இந்த இரு சட்டங்கள் குறித்து எந்தத்தலைவரும் வாய் திறப்பதில்லை.
இந்த இரு சட்டங்களாலும் தலித்கள் எந்த அளவுக்கு வதைக்கப்படுகிறார்கள் என்பது குறித்து முதல்வர்ஜெயலலிதாவைச் சந்தித்து விளக்க நேரம் கேட்டிருக்கிறேன். என்னைச் சந்திக்க முதல்வர் முன் வராவிட்டால், அவர்பொது மக்களை கோட்டையில் சந்தித்துக் குறை கேட்கும்போது நானும் போய் வரிசையில் நின்று எனது புகாரைச்சொல்வேன் என்றார் திருமாவளவன்.


