நக்கீரன் கோபால் மீது அமைச்சர் பன்னீர்செல்வம் அவதூறு வழக்கு
சென்னை:
பொதுப் பணித்துறை அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் பற்றி அவதூறாக எழுதியதாக கூறி நக்கீரன் பத்திரிக்கைஆசியர் கோபால், நிருபர் அன்பு ஆகியோர் மீது சென்னை முதன்மை செஷன்ஸ் நீதிமன்றத்தில் வழக்குதொடரப்பட்டுள்ளது.அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் சார்பில் அரசு வக்கீல் வி.கணேஷ் இந்த வழக்கை தாக்கல் செய்தார்.
அதில், கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 27ம் தேதியிட்ட நக்கீரன் வார இதழில், பொதுப் பணித்துறை அமைச்சர்ஓ.பன்னீர் செல்வம் குறித்து அவதூறாக செய்தி வெளியிடப்பட்டுள்ளது.
கோவை, பிச்சானூரைச் சேர்ந்த பாலாஜி கெமிக்கல் கம்பெனிக்கு திமுக ஆட்சிக்காலத்தில் உரிமம் ரத்துசெய்யப்பட்டதாகவும், அதிமுக ஆட்சிக்கு வந்த பிறகு பொதுப் பணித்துறை அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம்,
அந்த நிறுவனத்துக்கு ரூ. 10,000 மடடும் அபராதம் விதித்து விட்டு உரிமத்தை மீண்டும் வழங்குமாறுசம்பந்தப்பட்ட செயலாளருக்கு உத்தரவிட்டதாகவும், அவர் அதை ஏற்க மறுக்கவே, விஷயம் முதல்வர்ஜெயலலிதாவின் காது வரைக்கும் சென்றதாகவும் எழுதப்பட்டுள்ளது.
இந்த பொய்யான செய்தி, அமைச்சர் பன்னீர் செல்வத்தின் மரியாதையையும், கெளரவத்தையும் குலைப்பதாகஅமைந்துள்ளது. இந்த செய்தி முற்றிலும் பொய்யானது, முற்றிலும் உண்மையற்றது.
எனவே நக்கீரன் ஆசிரியர் கோபால், செய்தியை வெளியிட்ட நிருபர் அன்பு ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கூறப்பட்டிருந்தது.
வழக்கு விசாரணைக்கு வந்தபோது செய்தியாளர் அன்பு ஆஜரானார். ஆனால் சிறையில் உள்ளதால் கோபால்வரவில்லை. இதைத் தொடர்ந்து, என்ன வழக்கின் கீழ் கோபால் கைது செய்யப்பட்டுள்ளார் என்பதை வரும்ஜூலை 2ம் தேதிக்குள் விரிவாக தெரிவிக்குமாறு அரசு வக்கீலுக்கு நீதிபதி உத்தரவிட்டார்.


