மாறனின் செலவை கலாநிதி ஏற்பார் என்கிறார் கருணாநிதி- தேவையில்லை என்கிறார் ராஜா
சென்னை:
மத்திய அமைச்சர் முரசொலி மாறனுடைய சிகிச்சைக்கான செலவுகள் அனைத்தையும் அவரது மகன் கலாநிதிமாறனே ஏற்றுக் கொள்வார் என்று பிரதமர் வாஜ்பாய்க்கு திமுக தலைவர் கருணாநிதி கடிதம் எழுதியுள்ளார்.
அமெரிக்காவில் சிகிச்சை பெற்று வரும் மாறனுக்கு இதுவரை ரூ. 10 கோடி செலவாகியுள்ளது. வழக்கமாக மத்தியஅமைச்சர்களின் சிகிச்சை செலவுகளை மத்திய அரசுதான் ஏற்கும். அதுபோலவே, மாறனின் செலவுகளையும்மத்திய அரசு ஏற்றுள்ளது.
ஆனால், செலவு மிக மிக அதிகமாக இருப்பதால் இதை ஏற்கலாமா இல்லையா என்பதில் மத்திய அரசுக்கேகுழப்பம் ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக விதிமுறைகள் ஏதும் தெளிவாக இல்லை.
மேலும் மாறனின் செலவுகள் குறித்து அதிமுகவும் கேள்வி எழுப்பியுள்ளது. இதனால் அவரை பெங்களூருக்குக்கொண்டு வந்துவிடலாமா என்று மத்திய அரசு யோசித்து வருகிறது. இது தொடர்பாக மத்திய சுகாதாரத்துறைஇணையமைச்சர் ராஜா மூலம் மாறனின் குடும்பத்தினரிடம் மத்திய அரசு பேசியது.
இந் நிலையில், பிரதமர் வாஜ்பாய்க்கு, கருணாநிதி ஒரு கடிதம் எழுதியுள்ளார். அதில், மத்திய அமைச்சர்களின்சிகிச்சை செலவுகளை மத்திய அரசுதான் ஏற்பது வழக்கம். இதற்கு பல முன் உதாரணங்கள் உள்ளன.
இருப்பினும், முரசொலி மாறனுக்கு ஆகும் சிகிச்சைச் செலவுகள் அனைத்தையும் (ரூ. 10 கோடி) தானே ஏற்பதாகஅவரது மகன் கலாநிதி மாறன் தெரிவித்துள்ளார். மேலும், சென்னை அப்பல்லோ மருத்துவமனையில்சிகிச்சைக்கான செலவுகளையும் (ரூ. 2 கோடி)அவர்தான் செலுத்தினார் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
அமெரிக்காவில் மாறனுடன் தங்கியுள்ள அவரது குடும்பத்தினருக்கான செலவுகளை ஏற்கனவே கலாநிதிமாறன்தான் ஏற்றுள்ளார் என்பதை, இதுதொடர்பாக தவறான செய்திகளை பிரசுத்து வரும் பத்திரிக்கைகளுக்கும்தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன் என்று கூறியுள்ளார் கருணாநிதி.
இதனால் மத்திய அரசு அமெரிக்க மருத்துவமனைக்குச் செலுத்திய தொகையை சன் டிவி அதிபரான கலாநிதிமாறன் திருப்பிக் கொடுப்பார் என்று தெரிகிறது.
முன்னதாக மாறனுக்கு டெல்லி அகில இந்திய மருத்துவக் கழகத்திலும், சென்னை அப்பல்லோமருத்துவமனையிலும் தரப்பட்ட சிகிச்சைகள் தவறானவை என்றும் அது குறித்து விசாரணைக்கு பிரதமர் வாஜ்பாய்உத்தரவிட வேண்டும் என்றும் கருணாநிதி கூறியிருந்தார்.
இதனால் கடுப்படைந்ததால் தான் மாறனை இனியும் அமெரிக்காவில் வைத்து சிகிச்சை அளிக்க மத்திய அரசுவிரும்பவில்லை என்று கூறப்படுகிறது. இதையடுத்துத் தான், அதிக செலவாவதைக் காரணம் காட்டி அவரைபெங்களூருக்குக் கொண்டு வந்துசிகிச்சை அளிக்கலாமா என்று மாறன் குடும்பத்தினரிடம் மத்திய அரசு கேட்டதுஎன்கிறார்கள்.
ஆனால், மத்திய அரசு எவ்வளவு செலவிட்டாலும் அதைத் திருப்பித் தந்துவிடுகிறோம் என திமுக பதிலடிதந்திருக்கிறது.
வாஜ்பாய் உத்தரவிட்டால்...
இந் நிலையில் பிரதமர் வாஜ்பாய் உத்தரவிட்டால், அப்பல்லோவிலும் டெல்லியிலும் மாறனுக்குத் தரப்பட்டதவறான சிகிச்சை குறித்து விசாரணைக்கு உத்தரவிடத் தயாராக இருப்பதாக திமுகவைச் சேர்ந்த மத்தியசுகாதாரத்துறை இணையமைச்சர் ராஜா கூறியுள்ளார்.
சென்னை விமான நிலையத்தில் நிருபர்ரளிடம் பேசிய அவர், மருத்துவத்துறையின் டைரக்டர் ஜெனரல்தலைமையில் இதற்காக ஒரு கமிட்டியே உள்ளது. தேவைப்பட்டால் மாறனுக்கு சிகிச்சையளித்த டாக்டர்களும் கூடவிசாரிக்கப்படலாம்.
ஹூஸ்டன் மெத்தாடிஸ்ட் மருத்துவமனையில் மாறனுக்கு சிகிச்சை அளித்து வரும் அமெரிக்க டாக்டர்கள் தான்இந்தியாவில் அளிக்கப்பட்ட சிகிச்சைகள் குறித்து சந்தேகமும், கோபமும் தெரிவித்தனர். இதை வைத்துத் தான்கருணாநிதியும் இந்த விஷயத்தைக் கிளப்பினார். உண்மையில் நடந்தது என்ன என்பதை அறியத்தான் அவர் இக்கோரிக்கையை வைத்துள்ளார் என்றார்.
முன்னதாக ராஜா வெளியிட்ட அறிக்கையில், மத்திய அமைச்சராக உள்ள மாறனுக்கு உரிய செலவுகளை மத்தியஅரசு ஏற்றுள்ளது. இதுவரை அமெரிக்காவில் ஆன செலவுகள் அனைத்தும் மத்திய அரசால்வழங்கப்பட்டுவிட்டன. இதை சில பத்திரிக்கைகள் தான் ஊதிப் பெரிதாக்குகின்றன.
முன்னாள் பிரதமர்கள் வி.பி.சிங், நரசிம்மராவ் ஆகியோருக்கும் கோடிக்கணக்கில் மத்திய அரசு செலவிட்டது.ஆனால், மாறனுக்கு சிகிச்சை அளிப்பதை மட்டும் சுட்டிக் காட்டி பெரிதாக்குகிறார்கள்.
இந்த விஷயத்தைப் பெரிதாக்குவது என்பது நியாயமற்றது மட்டுமல்ல, பழி போடுவதைப் போன்றது. இந்த பணவிஷயத்தால் மாறனின் குடும்பத்தினர் மிகவும் மனம் வருந்திப் போயுள்ளனர். இதனால் தான் மத்தியஅமைச்சராகவே இருந்தாலும் செலவை தாங்களே ஏற்பதாகக் கூறியுள்ளனர்.
மத்திய வர்த்தக அமைச்சராக இருந்து நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் முக்கிய பங்காற்றிய மாறனுக்குசெலவிடப்பட்ட தொகையை கணக்குப் பார்ப்பது தவறானது. மத்திய அமைச்சருக்கு உரிய சலுகைகள் அவருக்குநிச்சயம் வழங்கப்படும் என்று கூறியுள்ளார் ராஜா.
மாறனுக்கு ஆன செலவுகளை தானே ஏற்பதாக அவரது மகன் கலாநிதி மாறன் அறிவித்துள்ள நிலையில், ராஜாஇவ்வாறு கூறியிருப்பது குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதனால் மாறனின் செலவுகளை அவரது குடும்பம் ஏற்குமா என்பதில் சந்தேகம் ஏற்பட்டுள்ளது.